என் மலர்
சிவகங்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பஞ்சபூதேஸ்வரம் என்ற இடத்தில் உள்ள மகா பிரித்தியங்கிரா தேவி கோவிலில் உலக மக்கள் ஆனந்தமாய் வாழ வேண்டி சகஸ்ர சண்டீயாக பெருவிழா கடந்த 29–ந்தேதி தொடங்கியது.
மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய 3–ம் நாள் விழாவில் குழந்தை இல்லாத தம்பதிகள் மட்டும் கலந்து கொள்ளும் புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. அதை தொடர்ந்து திருமண தடை நீங்க சுயம்வர பார்வதி ஹோமும், நோய்கள் இன்றி வாழ தன்வந்தரி ஹோமமும் நடந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சகஸ்ர சண்டீ என அழைக்கப்படும் ஆயிரம் சண்டீ யாகம் தொடங்கியது. தஞ்சை குருஜீ கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி, யாகத்தில் உயர்ரக பட்டாடை, பட்டு புடவைகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள், பூமாலைகள், 21 வகையான மூலிகை பொருட்கள் போட்டு யாக வேள்வியை நடத்தினார்.
2–ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆடி அமாவாசை, பதினெட்டாம் பெருக்கு, குருபெயர்ச்சியை முன்னிட்டு ஹோமம், கணபதி ஹோமம், வித்யா கணபதி ஹோமம், பஞ்சமுக பிரித்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து அம்பாளுக்கு பாத சமர்ப்பணம், கடம்புறப்பாடு நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு அம்பாளின் திரு அவதார நாடகமும் நடைபெறுகிறது. சகஸ்ர சண்டீ யாக விழா ஏற்பாடுகளை மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா வேத தர்ம ஷேத்ரா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர். சிறப்பு யாக விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுகிறது. மதுரை, சிவகங்கை, மானாமதுரை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளன.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை, திருக பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன், எழுமலையை சேர்ந்த பாண்டியராஜன், மானாமதுரையை சேர்ந்த பழனிக்குமார், மோகன், மருதுபாண்டி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று வேலை இல்லாத தால் 5 பேரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மது குடித்த தாக கூறப்படுகிறது. மருது பாண்டி கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக மேலே இருந்து தவறி கீழே விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவர் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருதுபாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லலை அடுத்துள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கண்ணந்தங்குடி தெற்குத்தெரு ஆனந்தன் மகள் ராஜாத்தி என்ற முத்துலட்சுமி (வயது35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், 3 வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.
அழகு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் புதுக்குடியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ஹரிசுடன் வெளியே சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தாய், மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. கணவர் அழகுவும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அவரும் மனைவி-மகனை தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து முத்துலட்சுமியின் மாமனார் கல்லல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கல்லல் அருகே குரண்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் பார்த்தபோது, 3 சாக்குமூடைகள் மிதந்தன.
இதுகுறித்து அவர்கள் கல்லல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தேவகோட்டை டி.எஸ்.பி. கருப்பசாமி மற்றும் கல்லல் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த 3 சாக்குமூடைகளை வெளியே எடுத்தனர்.
அதனை பிரித்து பார்த்த போது ஒரு சாக்குமூடையில் கால்கள் இல்லாத ஒரு பெண்ணின் உடலும், மற்றொரு மூடையில் 2 கால்களும், 3-வது சாக்கு மூடையில் சிறுவனின் பிணமும் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண்-சிறுவன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தினார்கள். மேலும் கடந்த சில வாரங்களில் மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
அப்போது 14-ந்தேதி முத்துலட்சுமி தனது மகனுடன் மாயமானது தெரியவர, அவரது கணவர், உறவினர்களை வரவழைத்தனர். அவர்கள் உடல்களை பார்த்ததில் மாயமான முத்துலட்சுமி, ஹரிஷ்தான் கிணற்றில் பிணமாக கிடந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.
3 வயது குழந்தையுடன் மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்-மகனை கொலை செய்து விட்டு பெண்ணின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி சாக்கில் வைத்து அதனை பெரிய கற்களால் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.
எதற்காக தாய்-மகன் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் தை, ஆடி மகாளய அமாவாசை தினங்களில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை நடைபெறும். வருகிற 2-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை முன்னோர்கள் தர்ப்பண பூஜை நடை பெறுகிறது.
அதைத் தொடர்ந்து குருப் பெயர்ச்சியை முன்னிட்டு மாலை 3 மணி முதல் 5 மணி வரை மகா யாகம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் டிரஸ்டி எஸ்.பி.தேவர் கூறியதாவது:-
காசியில் எப்படி முன் னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ அதேபோல் இங்கு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பபணம் செய்து காசி விஸ்வநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டு காசியில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பலனை அடையலாம்.
குரு பெயர்ச்சி யாகத்திலும் கலந்து கொண்டு காசி குருபகவான் அரள் ஆசி பெற்று செல்லலாம். தர்ப்பண பூஜையில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு எள், வாழைப்பழம், அகத்தி கீரை பூஜை பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. காசி செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து காசியில் எப்படி தொட்டு வழிபாடு செய்யப்படுகிறதோ அது போல் வழிபட்டு செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை தாலுகா சோமாளிபட்டியில் கறுப்பு தங்கம் என்றழைக்கப்படும் கிரானைட் கனிமப் படிவங்கள் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது.
பெரிய அளவில் அது உருவாகும் என்று கருதிய நிலையில், தற்போது கிரானைட் தோண்டி எடுக்கப்பட்டு பவுடராக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது குமாரபட்டி, சோத்தி உடையநாதபுரம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 236.85 ஹெக்டேரில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள டாபின் கனிம நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. அதற்காக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சுற்றுப்புற சூழல் அலுவலக பொறியாளர் ராஜேந்திரபாபு கனிம மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் சக்கத்தி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி, விவசாயிகள் மற்றும் கிராமத்தை சேர்ந்த வீரணன் அம்பலம், ராஜ்குமார், கிருஷ்ணன் உள்பட பலர் பேசியதாவது:-
ஏற்கனவே கிரானைட் தொடங்கப்பட்டபோது நிலம் வாங்கியவர்கள் வீட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறப்பட்டது. அதில் பெரும்பாலானவர்களுக்கு வேலை தரப்படவில்லை. கிரானைட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளுக்கு நோய் ஏற்பட்டுள்ளது. குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் உண்டாகிறது. எனவே விரிவாக்கம் ஏற்பட்டால் மேலும் பாதிப்புகள் ஏற்படும். கனிமத்தை வெடி வைத்து எடுப்பதால் அதிர்வு ஏற்படுகிறது. மேலும் கிரானைட் விரிவாக்கத்தை தனியாருக்கு விடக்கூடாது.
இவ்வாறு கூறினார்கள்.
பெரும்பாலானவர்கள் கிரானைட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 3-ந் தேதி கலெக்டர் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன் பிறகு அறிக்கை தரப்படும் என்று கூறினர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
காரைக்குடி:
காரைக்குடி அருகே பெரியகோட்டையை சேர்ந்தவர் செல்லையா மகன் பாண்டி (வயது 30). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். தற்போது 1 மாத விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
பாண்டியும், அவருடன் 4 நண்பர்களும் சேர்ந்து இரவு மோட்டார் சைக்கிளில் எலி வேட்டைக்கு சென்றனர். எலி வேட்டையை முடித்து விட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தீர்த்தலைக்காடு அருகே வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது இரவு நேர ரோந்து போலீசார், பாண்டியுடன் வந்தவர்கள் முன்னதாக சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். போலீசார் அவர்களிடம் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புத்தகம் ஆகியவற்றை வாங்கி பார்த்தனர்.
அதனை கண்ட பாண்டியும் அவருடன் வந்த மற்ற இரண்டு நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் சோதனையிடும் பகுதிக்கு முன்பாகவே நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பதுங்கினார்கள். இதை பார்த்து தோட்டத்தில் இருந்த நாய்கள் குரைத்ததால், தோட்டக் காரர்கள் மின் விளக்கை எரிய விட்டு சுற்றி பார்த்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி, அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காரைக்குடி போலீஸ் டி.எஸ்.பி. கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது23). டிப்ளமோ பொறியாளரான இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தார்.
பின்னர் ராஜஸ்தான் மாநிலம் ஜிம்ஜிம் பகுதியில் கேத்தரின் என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருடன் உ.பி.மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் அங்கு இருந்தனர். கடந்த 24-ந்தேதி வெளியே சென்ற சரவணன் பின்னர் இருப்பிடத்துக்கு திரும்ப வில்லை. இது குறித்து ஜிம்ஜிம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர் சரவணனின் தாய் புஷ்பா கூறுகையில், எனது மகன் காணாமல் போன தகவலை அவனுடன் வேலை செய்த நபர் எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கணவர் மற்றும் மருமகனுடன் சென்று விசாரித்தபோது காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மட்டும் தெரிவித்தனர். இது தவிர வேறு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
எனது மகன் பணத்துக்காக கடத்தப்பட்டானா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்று தெரிய வில்லை. அவனை கண்டு பிடித்து தரக்கோரி தமிழக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கருப்பையா, விவசாயி. இவருக்கு புஷ்பா, அல்லி ராணி என 2 மனைவிகள். தங்கம் என்ற மகனும் சசிகலா, சுதா, லதா, பொன்னி, ஜெயப்பிரியா என்ற மகள்களும் உண்டு.
இதில் முதல் மனைவி புஷ்பா இறந்து விட்டார். மகள்கள் சசிகலா, சுதா, லதா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. பொன்னி சிவகங்கை அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
இவரது தங்கை ஜெயப்பிரியாவும் அதே கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மாதம் 18-ந் தேதி சகோதரிகள் இருவரும் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் சகோதரி சுதாவிடம் போனில் பேசியுள்ளார்.
அப்போது தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், உயிரை மாய்க்க திட்டமிட்டு பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டோம் என்றும் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தனது தந்தை கருப்பையாவுக்கு தகவல் கொடுத்தார்.
அவரும், வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது அங்கு பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவை காணவில்லை. இதனால் பக்கத்தில் உள்ள தனது தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தேடினார். அப்போது விஷப்பாட்டில் மட்டும் கிடந்துள்ளது.
2 மகள்களையும் பல இடங்களில் தேடியும் பலன் இல்லாததால், மறுநாள் (ஜூன் 19-ந்தேதி) சிவகங்கை தாலுகா போலீசில் கருப்பையா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகோதரிகளை தேடி வந்தனர்.
அவர்கள் உண்மையில் விஷம் குடித்தார்களா? அல்லது யாராவது கடத்திச் சென்று விட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் வந்தவாசி அருகே உள்ள முத்துப்பட்டிணம் கண்மாய் பகுதியில் 2 எலும்புக் கூடுகள் கிடப்பதாகவும், அதன் அருகே பெண்களின் நைட்டி, காலணிகள் போன்றவை கிடப்பதாகவும் சிவகங்கை நகர் போலீசாருக்கு ஆடு மேய்ப்பவர்கள் நேற்று தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் நகர் மற்றும் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கருப்பையா மற்றும் அவரது உறவினர்களும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள், அங்கு கிடந்த உடைகள் மற்றும் காலணிகள் பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமானவை என தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 2 எலும்புக் கூடுகளையும் போலீசார் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவை, பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவின் எலும்பு கூடுகள்தானா? என்பது பரிசோதனையின் முடிவில் தான் தெரியவரும்.
இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான சகோதரிகள் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டனர் என்ற தகவல் பரவியதால், சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேவகோட்டையில் ராணுவத்தில் சேர்வது குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதனை நேதாஜி பயிற்சி நிலைய நிர்வாகி சிதம்பரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
உடற்கல்வி இயக்குனர் பூமிநாதன், சிலுவைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆதியாகுடி சண்முகவேல், கணேசன்உடையார், ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை:
இளையான்குடி தாலுகா சங்க மங்கலத்தை சேர்ந்தவர் கலா (வயது 28). இவருக்கும் மேலத்துறையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரஜினிகாந்த் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் மது பழக்கத்திற்கு அடிமையானார். அதனை கைவிடுமாறு கலா பலமுறை வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கலா, வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கலாவின் தந்தை சஞ்சய் இளையான்குடி போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடியில் மீனாட்சி–சுந்தரேசுவரர் ஆலயம் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்தக் கோவிலில் உதவி அர்ச்சகராக செயல்பட்டவர் வைத்தியநாதன் (வயது 43).
இவர், நேற்று பகல் கோவிலில் பூஜை, புனஸ் காரங்களில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அதன் பிறகு மதியம் மற்றும் மாலை, இரவு பூஜைகளுக்கு வைத்தியநாதன் வரவில்லை. இதனால் சக அர்ச்சகர்கள் அவரை தேடினர். வீட்டில் கேட்டபோது, காலையில் கோவிலுக்கு சென்றவர் அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவிலுக்கு வெளியே உள்ள கோவில் தெப்பக் குளத்தில் வைத்தியநாதன் உடல் மிதப்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது குளத்தின் கரையில், வைத்தியநாதனின் சைக்கிள் நிற்பது தெரிய வந்தது. இதனால் குளத்தில் கால் கழுவச்சென்ற போது, அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு குரு பெயர்ச்சி நேரத்தில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.






