என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலையா?: மாயமானவர்கள் எலும்பு கூடுகளாக மீட்பு
    X

    சிவகங்கை அருகே கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலையா?: மாயமானவர்கள் எலும்பு கூடுகளாக மீட்பு

    கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கருப்பையா, விவசாயி. இவருக்கு புஷ்பா, அல்லி ராணி என 2 மனைவிகள். தங்கம் என்ற மகனும் சசிகலா, சுதா, லதா, பொன்னி, ஜெயப்பிரியா என்ற மகள்களும் உண்டு.

    இதில் முதல் மனைவி புஷ்பா இறந்து விட்டார். மகள்கள் சசிகலா, சுதா, லதா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. பொன்னி சிவகங்கை அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

    இவரது தங்கை ஜெயப்பிரியாவும் அதே கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மாதம் 18-ந் தேதி சகோதரிகள் இருவரும் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் சகோதரி சுதாவிடம் போனில் பேசியுள்ளார்.

    அப்போது தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், உயிரை மாய்க்க திட்டமிட்டு பூச்சி மருந்து (வி‌ஷம்) குடித்து விட்டோம் என்றும் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தனது தந்தை கருப்பையாவுக்கு தகவல் கொடுத்தார்.

    அவரும், வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது அங்கு பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவை காணவில்லை. இதனால் பக்கத்தில் உள்ள தனது தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தேடினார். அப்போது வி‌ஷப்பாட்டில் மட்டும் கிடந்துள்ளது.

    2 மகள்களையும் பல இடங்களில் தேடியும் பலன் இல்லாததால், மறுநாள் (ஜூன் 19-ந்தேதி) சிவகங்கை தாலுகா போலீசில் கருப்பையா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சகோதரிகளை தேடி வந்தனர்.

    அவர்கள் உண்மையில் வி‌ஷம் குடித்தார்களா? அல்லது யாராவது கடத்திச் சென்று விட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் வந்தவாசி அருகே உள்ள முத்துப்பட்டிணம் கண்மாய் பகுதியில் 2 எலும்புக் கூடுகள் கிடப்பதாகவும், அதன் அருகே பெண்களின் நைட்டி, காலணிகள் போன்றவை கிடப்பதாகவும் சிவகங்கை நகர் போலீசாருக்கு ஆடு மேய்ப்பவர்கள் நேற்று தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் நகர் மற்றும் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கருப்பையா மற்றும் அவரது உறவினர்களும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள், அங்கு கிடந்த உடைகள் மற்றும் காலணிகள் பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமானவை என தெரிவித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து 2 எலும்புக் கூடுகளையும் போலீசார் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவை, பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவின் எலும்பு கூடுகள்தானா? என்பது பரிசோதனையின் முடிவில் தான் தெரியவரும்.

    இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான சகோதரிகள் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டனர் என்ற தகவல் பரவியதால், சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×