என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே கிரானைட் கனிம நிறுவன விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: கிராமங்களில் ஆய்வு நடத்த கலெக்டர் முடிவு
    X

    சிவகங்கை அருகே கிரானைட் கனிம நிறுவன விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: கிராமங்களில் ஆய்வு நடத்த கலெக்டர் முடிவு

    சிவகங்கை அருகே கிரானைட் கனிம நிறுவன விரிவாக்கத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் நேரில்சென்று ஆய்வு நடத்த உள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா சோமாளிபட்டியில் கறுப்பு தங்கம் என்றழைக்கப்படும் கிரானைட் கனிமப் படிவங்கள் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது.

    பெரிய அளவில் அது உருவாகும் என்று கருதிய நிலையில், தற்போது கிரானைட் தோண்டி எடுக்கப்பட்டு பவுடராக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது குமாரபட்டி, சோத்தி உடையநாதபுரம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 236.85 ஹெக்டேரில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள டாபின் கனிம நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. அதற்காக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சுற்றுப்புற சூழல் அலுவலக பொறியாளர் ராஜேந்திரபாபு கனிம மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    கூட்டத்தில் சக்கத்தி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி, விவசாயிகள் மற்றும் கிராமத்தை சேர்ந்த வீரணன் அம்பலம், ராஜ்குமார், கிருஷ்ணன் உள்பட பலர் பேசியதாவது:-

    ஏற்கனவே கிரானைட் தொடங்கப்பட்டபோது நிலம் வாங்கியவர்கள் வீட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறப்பட்டது. அதில் பெரும்பாலானவர்களுக்கு வேலை தரப்படவில்லை. கிரானைட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளுக்கு நோய் ஏற்பட்டுள்ளது. குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் உண்டாகிறது. எனவே விரிவாக்கம் ஏற்பட்டால் மேலும் பாதிப்புகள் ஏற்படும். கனிமத்தை வெடி வைத்து எடுப்பதால் அதிர்வு ஏற்படுகிறது. மேலும் கிரானைட் விரிவாக்கத்தை தனியாருக்கு விடக்கூடாது.

    இவ்வாறு கூறினார்கள்.

    பெரும்பாலானவர்கள் கிரானைட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 3-ந் தேதி கலெக்டர் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன் பிறகு அறிக்கை தரப்படும் என்று கூறினர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
    Next Story
    ×