என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்புவனத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகையை மர்ம மனிதர்கள் அபேஸ் செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது45). இவர் வங்கிக்கு சென்று ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் எடுத்துள்ளார்.

    அதனுடன் 4 பவுன் தங்க நகையையும், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துள்ளார். வீட்டிற்கு பணம் மற்றும் நகையுடன் புறப்பட்ட பாலசுப்பிரமணியன், வழியில் லேத் பட்டறை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

    அப்போது நகை மற்றும் பணம் அடங்கிய பையை எடுக்க மறந்துவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த அவர், பணப்பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் வங்கியில் இருந்து பணம் எடுத்து வைத்ததை யாரோ மர்ம மனிதர்கள் நோட்டமிட்டு அபேஸ் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனம் போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப் பதிவு செய்து 4 பவுன் மற்றும் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம மனிதர்களை தேடி வருகிறார்.
    காரைக்குடி அருகே வாகன சோதனையில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்-துப்பாக்கியுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடி:

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் மது பாட்டில்களை வாங்கி வந்து தமிழகத்தில் போலி முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. காரைக்குடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் அவர்களை கீழே இறக்கிவிட்டு விட்டு காரை சோதனை செய்தனர். அப்போது காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 4 ஆயிரம் குவார்ட்டர் பாட்டில்கள், 35 முழு பாட்டில்கள் காரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தமிழக முத்திரையுடன் போலி ஸ்டிக்கர்களும், ஒரு நாட்டு துப்பாக்கியும் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தாஸ் என்ற ஆரோக்கியதாஸ் (வயது46), ராஜாமோகன் (34), கீரனூர் மாரியப்பன் மனைவி இலக்கியா (24), காரைக்குடி சண்முகம் மனைவி பொன்னுமணி (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி தமிழகம் கடத்தி வரும் இவர்கள் இங்கு வைத்து போலி முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் போலி ஸ்டிக்கர்களின் மொத்த மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இந்த போலி முத்திரை மது விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே கொத்தனார் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா தண்டவராயன்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட எஸ்.மேலங்குடி ஜீவாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது36), கொத்தனார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று கணவன்- மனைவி வீட்டை பூட்டி சாவியை கதவு அருகில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதை நோட்ட மிட்ட மர்ம ஆசாமி, சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தான்.

    பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 15½ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், 3 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை திருடிச் சென்றான்.

    வீடு திரும்பிய பழனிச் சாமி, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தண்டவராயன்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    கல்லல் அருகே மின்சாரம் தாக்கி இலங்கை அகதி இறந்தார்.

    சிவகங்கை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது32). பெயிண்டரான இவர் நேற்று கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த மின்வயர் எதிர் பாராத விதமாக அவர் உடலில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்பத்தூர் அருகே 3 மாத குழந்தையுடன் இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய மருதுபட்டியை சேர்ந்தவர் மதிகுமார் (வயது 23). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா (21). இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தைக்கு தடுப்பூசி போட சென்ற கவிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த மதிகுமார், தனது மனைவி-மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கையில் தாய்-மகனை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் அருகே உள்ள வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது40), இவர் தனது இடத்தில் வளர்ந்த கருவேலமரங்களை, ஆட்களை வைத்து வெட்டி எடுக்க முயன்றார்.

    அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் தங்கம், தீர்த்தகுமார், அழகுபாண்டி, நாராயணன், கருப்பையா, சசிகலா ஆகியோர் தடுத்தனர். இது எங்கள் இடம் என அவர்கள் கூறியதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில், லட்சுமி சரமாரியாக தாக்கப்பட்டார். தாக்குதலை தடுக்க வந்த அவரது மகன் அண்ணாத்துரைக்கும் அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அண்ணாத்துரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மோதல் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசில் லட்சுமி புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் நாராயணன், சசிகலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கையில் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவர் தீககுளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்ப்பவர் ரவி (வயது 41). இவர், கடந்த 2-ந்தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றாராம்.

    அதன் பிறகு நேற்று பணிக்கு செல்வதற்காக போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்றார். அப்போது போதுமான டிரைவர்கள் பணியில் இருப்பதால் இன்று பணி இல்லை என கிளை மேலாளர் கூறினாராம். மேலும் அன்றைய தினம் ரவிக்கு ‘ஆப்செண்ட்’ போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, பணிமனையில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த சக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அவரை காப்பாற்றினர்.

    இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை பகுதியில் நாட்டு வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை பகுதியில் அனுமதியின்றி நாட்டு வெடிபொருட்கள், பட்டாசுகள் வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தேவகோட்டை டவுன் போலீசார் வெள்ளையன் ஊருணி, தென்கரையில் சோதனை நடத்தினர்.

    அப்போது வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் அனுமதியின்றி 29 கிலோ நாட்டு வெடிகள், 290 கிலோ பட்டாசுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

    இதேபோல் திருப்பத்தூர் சாலையில் உள்ள ஆரோக்கியராஜ் என்பவரது கடையில் அனுமதியின்றி 1000 வாணவேடிக்கை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வரதராஜன், ஆரோக்கியராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    திருப்புவனத்தில் பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சிவகங்கை:

    திருப்புவனம் நாடார் பேட்டையை சேர்ந்தவர் மூக்கன் (வயது45). இவரது மகள் அழகுமீனாள் (19). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு பல பாடங்களில் ‘அரியர்’ இருந்ததாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அழகு மீனாள் மனவேதனை அடைந்தார்.

    வீட்டில் தனியாக இருந்த அவர், வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மூக்கன் கொடுத்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடும்ப தகராறில் போஸ்காரரை கத்தியால் குத்திய உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அல்லிநகரத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது33). ராமேசுவரத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி தனலட்சுமிக்கும் அல்லிநகரத்தை சேர்ந்த முக்தீஸ்வரன் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனலட்சுமி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று விடுமுறையில் ராஜதுரை ஊருக்கு வந்திருந்தார். இந்த நேரத்தில் முக்தீஸ்வரன் தனது மனைவியை அழைக்க அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முக்தீஸ்வரனுக்கும், ராஜதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முக்தீஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜதுரையை குத்திவிட்டு ஓடிவிட்டார்.

    காயம் அடைந்த ராஜதுரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முக்தீஸ்வரனை தேடி வருகிறார்கள்.

    காரைக்குடியில் டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3½ லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரெயில்வே பீடர் ரோட்டைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி மாரியம்மாள் (வயது55). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் கடை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அருகிலேயே தீயணைப்பு நிலையம் இருந்ததால் வீரர்கள் விரைந்து செயல்பட்டு போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த ரூ.3½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே சக்கந்தி கிராமத்தில் சிலர் இன்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றனர். இதற்காக 15 பேர் காளை மாடுகளுடன் அங்கு வந்தனர்.

    இதை அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோமாளி, முருகன் உள்பட 15 பேரை மடக்கி படித்து கைது செய்தனர். 15 காளைகளும், 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×