என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவரது மகள் பானுப் பிரியா (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. பானுப்பிரியாவின் மாமியார் உடல் நலக் குறைவு காரணமாக பரமக்குடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தன்று மாமியாரை பார்க்க செல்வதாக தாய் லட்சுமியிடம் கூறி விட்டு பானுப்பிரியா வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து லட்சுமி இளையான்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராம நாதன் மகன் மாணிக்க வாசகம் (வயது 43). இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து தொழில் செய்து வந்தார். மேலும் அவ்வப்போது மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
மாணிக்கவாசகம் கடந்த 26-ந் தேதி காய்ச்சல் பாதிப்புடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மாணிக்கவாசகம் இறந்து போனார்.
அப்போது தான் அவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு இருந்ததும், அதன் பாதிப்பால் தான் இறந்து போனதாக ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் ஈஸ்வரன் (வயது 27) , காளியப்பன் (22), உதயகுமார் (47), சதாசிவம் (41), சங்கர் ஆகியோர் அங்கு நிற்பதை கண்டனர்.
அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் விரைந்து செயல்பட்டு 4 பேரை கைது செய்தனர். சங்கர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ரோந்து சென்றபோது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட செல்வராஜ் (22), ஜான் பீட்டர் (27), முகமது சிராஜுதீன் (22) நிஜாமுதீன், முத்துக்குமார் (24), அப்துல் ஹக்கீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்தியன் ஆயில் குடோனில் இருந்து இன்று அதிகாலை ஒரு லாரி லோடு ஏற்றிக் கொண்டு மதுரையை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி அரசனூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து காளையார் கோவிலுக்கு சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரியும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதனால் இரு லாரிகளின் முன் பகுதிகளும் பலத்த சேதம் அடைந்தது. இதனால் சரக்கு லாரி டிரைவர் பாண்டி (வயது 55)யும், டேங்கர் லாரி டிரைவரும் படுகாயம் அடைந்தனர். டேங்கர் லாரி டிரைவரின் கால் முறிந்தது. மயக்க நிலையில் இருந்ததால் அவரது பெயர், ஊர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. 2 டிரைவர்களையும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தவிபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு (வயது70). இவர் மட்டும் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல் பின்வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்தது.
இன்று காலை வள்ளிக் கண்ணு வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வள்ளிக்கண்ணு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பல் வள்ளிக்கண்ணு கழுத்தில் கிடந்த நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பியது. நீண்ட நேரமாகியும் முன்பக்க கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் குன்றக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி.க் கள் கார்த்திகேயன், பாஸ்கரன், முருகன், குன்றக்குடி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது.
அண்மையில் தேவகோட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை மர்ம கும்பல் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது. அந்த பரபரப்பு அடங்கும் முன் மற்றொரு கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்றவை நடத்த தடை இல்லை என்ற போதிலும், இதனை நடத்த முறையாக விண்ணப்பித்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற வேண்டும். இதனை பெறாமல் காரைக்குடி தாலுகா கொத்தமங்கலம் புது கண்மாய் பகுதியில் சிலர் மஞ்சுவிரட்டு நடத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில், அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கருப்பையா, பெரியகருப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருநாவுக்கரசு, கருணாநிதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் நெற்குப்பை கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர் ராக்கமுத்து புகார் கொடுத்தார். இதன் பேரில் நெற்குப்பை போலீசார் விசாரணை நடத்தி அழகையா, பாகம்பழம் முத்தலி அம்பலம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகேயுள்ள நெற்குப்பையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நெற்குப்பை கிராமப்பகுதி முழுவதும் வீட்டுப் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து காளைகளை கொண்டாடும் விதமாக மேலத்தெரு, கீழத்தெரு, நடுத்தெரு, ஆகிய பகுதிகளில் தொழுவம் அமைக்கப்பட்டு மாடுகள் பகுதி வாரியாக அவிழ்த்து விடப்பட்டது.
இம்மஞ்சுவிரட்டில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு களத்தில் பாய்ந்து சென்றது. இம்மஞ்சு விரட்டில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு சில மாடுகள் காளையருக்கு கட்டுப்பட்டும் ஒருசில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியும் சென்றன. இம்மஞ்சுவிரட்டில் 30 பேர் காயமடைந்தனர்.
இவர்களுக்கு நெற்குப்பை, சுகாதார மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சுகாதார மையத்தின் நடமாடும் மருத்துவ குழு வாகனம் முதலுதவி சிகிச்சையில் ஈடுபட்டிருந்தது. திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா முனியாண்டிபட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது22), கல்லூரி மாணவர். இவர், தனது அத்தை ஆரம்மாள் (48) உடன் மோட்டார் சைக்கிளில் சிவகங்கை சென்றார்.
பின்னர் இருவரும் அங்கிருந்து ஊர் திரும்பி கொண்டிருந்தனர். தேவானிபட்டி விலக்கு பகுதியில் அவர்கள் வந்தபோது, எதிரே ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த இரு வாகனங்களும் எதிர் பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயம் அடைந்த விஜய், ஆரம்மாள் ஆகியோர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். ஆரம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் பலியான மற்றொருவரின் பெயர் பிரபு (45). மேலூர் அருகே உள்ள உத்தபட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனவரி 3-ந்தேதி தியாகிகள் தினம் ஆகும். தியாகிகளுக்கு அரசு ஓய்வூதியம், சலுகைகள் முறையாக இன்னும் வழங்கப்படவில்லை. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைத்திட வேண்டும.
1967-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மொழிப்போர் தியாகிகள் என்ற அடிப்படையில் அரசு சலுகைகள் தரப்படுகிறது. இந்து இயக்க நிர்வாகிகளுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல்கள் விடப்படுகிறது. எனவே அரசு இந்து இயக்க நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பினை தரவேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள் - போலீசார் மோதலில் போலீசாரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்திட வேண்டும். இதில் மக்கள் நல கூட்டணியினர் எதிர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய நாட்டிற்கு எதிராக செயல் படுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 68). விவசாயியான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
நேற்று மாலை ராமகிருஷ்ணன் தனது வயலுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது நிலைமை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மானாமதுரை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 60). இவரது மகன் மணீஷ்குமார் (30). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம் மணீஷ்குமார் தனது விருப்பதை தெரிவித்தபோது, அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மேகவண்ணன் (வயது 63). இவர் திருப்பத்தூரில் நகை அடகுக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்யாணி.
இவர்களது மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர். அவர்களை பார்க்க செல்ல மேகவண்ணனும், கல்யாணியும் விரும்பினர். இதற்கான விசா எடுப்பதற்காக 2 பேரும் நேற்று சென்னைக்கு சென்றனர்.
அவர்களது வீடு பூட்டி கிடந்தது. அவர்கள் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டுக்குள் இருந்த பீரோவையும் அவர்கள் உடைத்தனர்.
அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






