என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 40). நேற்றிரவு இவர் வீட்டில் தூங்கினார். காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது.
அப்போது ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 14 1/2 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 1,500 ஆகியவற்றை திருடிச் சென்று விட்டான்.
இது குறித்து அப்துல்மஜித், காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மானாமதுரை:
மானாமதுரை தாலுகா பழையனூர் அருகே உள்ள கீழசொரிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் (வயது 37) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு கண்ணன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது தான் அனுப்பிய பணம் குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
பழையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா இலந்தகுடி பட்டியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது48), முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
அங்குள்ள கோவில் வரவு செலவு குறித்து இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்று ராஜரத்தினம், கண்ணன் தரப்பினர் கம்பு, கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த ராஜரத்தினம் சிவகங்கை தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மோதல் குறித்து இருதரப்பினரும் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் விசாரணை நடத்தி ராஜரத்தினம், கண்ணன், தனபால், ஆனந்த், பாலாஜி, செந்தில்முருகன், தேவசுதர்சன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கண்ணன், செந்தில் முருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மானாமதுரை அருகே கொன்னக்குளம், தத்தபுரக்கி, கட்டிக்குளம், துத்திக்குளம், வெள்ளிக்குறிச்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என்று சிவகங்கை கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் வேலூர் விலக்கு அருகே உள்ள ஒரு தனியார் சுத்திகரிப்பு நிறுவனம் சார்பில், சிவகங்கை கோட்டாட்சியர் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து வருகிற 24–ந்தேதி வரை கோட்டாட்சியர் உத்தரவிற்கு தடை விதித்து, உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறைக்கு கோர்ட்டு ஆலோசனை கூறியது.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மீண்டும் தனியார் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் தொடங்கின. இதனையறிந்த சுற்றுவட்டார கிராமமக்கள் குடிநீர் கேன்களை ஏற்றி சென்ற வேனை மறித்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் வேளையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அவ்வாறு செயல்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள ஆலவிளாம்பட்டியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி அடைக்கம்மாள் (வயது60). இருவரும் அழகர் (30) என்பவருடன் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கார் வந்தது. பாலத்தில் கார் சென்றபோது ஆடுகளை ஒதுக்கி விடாததால் ஆத்திரம் அடைந்த காரில் வந்த வாலிபர்கள் ஆடு மேய்க்கும் பணியில் இருந்த 3 பேரையும் திட்டினார்கள். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அடைக்கம்மாள் உள்பட 3 பேரையும் தாக்கிவிட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்றதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அடைக்கம்மாளின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மதகுபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, தலைமை காவலர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலம் கார் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை அருகே அந்த கார் மடக்கி பிடிக்கப்பட்டது. அதில் இருந்த 6 பேரில் இருவர் தப்பி சென்றுவிட்டனர். மற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாகவும், தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் பெயர் சரத்குமார் (25), பார்த்திபன் (22), செல்லமணி (28), சங்கர் (27) என தெரியவந்தது. தப்பி சென்ற பில்லப்பன், சுடர்மணி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காளையார்கோவில்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் 81 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.
காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் குருந்தினி கிராம மக்கள் அங்குள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி நின்று திடீரென்று போராட்டம் நடத்தினர். மின்னழுத்த கோபுரத்தில் ஏறிநின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார், மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் சந்தானலட்சுமியின் வாகனத்தை பொது மக்கள் சிறைபிடித்தனர். 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் 81 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. சாலையோரத்தில் இருந்த டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், கிராம பகுதியில் கடைகள் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவகோட்டை, கல்லல், மானாமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் வலுத்து வருகிறது.
காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த குருந்தனி மற்றும் இவ்வூரை சுற்றியுள்ள நற்புதம், அரசகுளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், டாஸ்மாக் மேற்பார்வையாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் குருந்தனி கிராமத்தில் நேற்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த கிராமத்தில் இருக்கும் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி நின்று திடீரென்று போராட்டம் நடத்தினர். பெண்கள், ஆண்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிநின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார், மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் சந்தானலட்சுமியின் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோன்று காளையார்கோவில் அருகே மாந்தாளி கிராமத்தில் உள்ள ஆர்.வி.எஸ்.நகரில் திறக்கப்பட்ட கடையை அகற்றக்கோரி கடந்த 7 நாட்களாக பெண்கள் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கையை அடுத்த படமாத்தூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி ஏற்கனவே பலமுறை இப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த படமாத்தூர் கிராமமக்கள், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த போராட்டத்தால் மதுரை-தொண்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடையை அகற்றுவதாக உறுதி அளித்ததை அடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
காரைக்குடி 100 அடி ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடை முன்பு அமர்ந்து, டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தேவகோட்டையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் நகருக்கு வெளியில் ஒரு தோட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு குடியிருப்பு வழியாகவே செல்ல வேண்டும். இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, தேவகோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இல்லையென்றால் தங்களது ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க போவதாக முற்றுகையிட்டவர்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் அகற்றப்பட்டன. இந்த கடைகளை நகருக்குள் அமைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு அந்தந்த குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலை மறியல், முற்றுகை போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை தாலுகா படமாத்தூர் பகுதியிலும் இன்று டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை-தொண்டி சாலையில் இந்த மறியல் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருளாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதன் காரணமாக மதுரை-சிவகங்கை இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அதிகாரிகள் வந்து மக்களை சமரசம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மேப்பல் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பெண்கள், முதியவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
முதுகலை மாணவி ரிக்ஷிகா கடந்த ஒருவாரமாக தொடர் காய்ச்சலால் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். கருப்பாயி என்ற பெண்ணை மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் உள்ளது தெரிய வந்தது.
மேலும் வேதமுத்து (75), ஜெயசீலி (60), யாசினி (6), அனுசுயா (9), மல்லிகா (4), முத்தாத்தாள் (75), சகாயராணி (26), சிறுமி அஸ்வினி (6), பயாஸ்டி அழகம்மாள் (50), பள்ளத்தாள் (65), முத்துலட்சுமி (30)சிறுவன் அகிலேஷ்குமார், கீர்த்தனா (5), கவுசி ஆகிய 15 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காளையார்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் காய்ச்சல் தொடர்ந்துள்ளது.
தொடர் காய்ச்சல் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
குடிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இல்லை. வீட்டு உபயோகத்திற்கு டாங்குகள் அமைக்கப்பட்டும் தண்ணீர் வரவில்லை. மேலும் டாங்குகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் திடீர் காய்ச்சல் வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் காளையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதிய சிகிச்சை தராமல் மாத்திரைகளை தந்து அனுப்பி விடுகிறார்கள்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு சென்றால் அங்கு சிகிச்சை மறுக்கப்படுவதுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்புகிறார்கள். 108 ஆம்புலன்ஸ்சில் சென்றால் மருத்துவக்கல்லூரியில் உரிய சிகிச்சை தரப்படுகிறது.
பெரும்பாலும் ஏழை, எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் பணம் செலுத்தி சிகிச்சை பெறுவது சிரமமாக உள்ளது.
குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் காளையார்கோவிலில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ. 15 கொடுத்து வாங்கி குடித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சல் வருவதால் மேப்பல் கிராமம், அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பயத்தில் உள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெடுமரம் அருகே உள்ள மல்லாங்கோட்டையில் நேற்று அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கர் திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய சோலைமலை, ராகவன், சுப்பிரமணி, படைத்தலை வன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இதேபோல் சிங்கம் புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தாக கிராம நிர்வாக அதிகாரி சிலம்பரசன் கொடுத்த புகாரின்பேரில் அதே ஊரைச் சேர்ந்த ஆசைத்தம்பி, செல்வம், செந்தில்வேலன், குமரன், காந்தி ஆகிய 5 பேர் மீது சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்துள்ளார்.
திருக்கோஷ்டியூர் கணேசபுரத்தில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக சிதம்பர பாண்டியன், திருமாறன், சம்பத்நாச்சியப்பன், கணேஷ், செல்வம் ஆகிய 5 பேர் மீதும், திருப்பத்தூர் தாலுகா நாச்சியாபுரத்தில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய இருதயராஜ், சீனிராஜ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதவு செய்துள்ளனர்.
சிவகங்கை:
மதுரை மாவட்டம் மேலூர் உறங்கான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் வாசுதேவன் (வயது25). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் ஊருக்கு திரும்பிய இவர், நேற்று சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட திருமலை கிராமத்தின் அருகே காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் அருகே கிடந்தது.
இதுகுறித்து அவரது உறவு பெண் நிசாந்தி (23) மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது வாசுதேவன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மதகுபட்டி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் தீவிர விசாரணை நடத்தினார். இதில் காதல் தகராறில் கொலை சம்பவம் நடந்து இருப்பது தெரியவந்தது.
திருமலை கிராமத்தைச் சேர்ந்த உறவினரான பெரியகருப்பன் மகள் சித்ராவுக்கும், கொலையான வாசுதேவனுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து சித்ரா வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறி உள்ளார். அவர்கள் காரில் செல்லும் தகவல் கிடைத்ததும் பெரியகருப்பன் தரப்பினர் விரைந்து சென்று காரை மறித்து சித்ராவை மீட்டு வந்தனர்.
இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கீழவளவு போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில் வெளி நாட்டில் இருந்து தற்போது ஊருக்கு வந்த வாசுதேவன், திருமலை அருகே உள்ள அழகமா நகரியில் உள்ள தனது நண்பர் பாண்டி வீட்டிற்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சாப்பிட சென்றுள்ளார்.
இந்த தகவல் சித்ரா குடும்பத்தினருக்கு தெரியவர அவர்கள் பழிதீர்க்க முடிவு செய்தனர். அதன்படி வாசுதேவனை எதிர்பார்த்து திருமலை கிராமத்தின் வெளியே சித்ரா குடும்பத்தினர் காத்திருந்தனர். நேற்று இரவு அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வாசுதேவன் வந்தபோது அவரை வழிமறித்து கம்பு மற்றும் கடப்பாரையால் தாக்கி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதுபோன்று ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டு கொலையாளிகள் தப்பி சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மதகு பட்டி போலீசார் விசாரணை நடத்தி பெரியகருப்பன், அவரது மனைவி செல்வி, உறவினர்கள் கருப்பசாமி, செல்லப்பாண்டி, சாந்தி, ஆதீனமிளகி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் செல்வி (33), சாந்தி (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டையில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன் (வயது65), ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணமான ஒரு மகள் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக ராமநாதன் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் பெங்களூருக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது இது குறித்து அந்த வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்கள் ராமநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 14 பவுன் நகையும், ரூ.15 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமநாதன் தேவகோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.






