என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூர் அருகே வீட்டில் கதவை உடைத்து நகை-பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையத்து சென்றனர்.

    சிவகங்கை:

    திருப்பத்தூர் அருகே சாம்பா ஊராணியை அடுத்துள்ள மேல் கரை கிராமத்தை சேர்ந்தவர் இருளாயி (வயது 80). இவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் இவர் மட்டும் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். சம்பவத் தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்ம மனிதன் பின்புறம் வழியாக வீட்டுக்குள் புகுந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நகை, வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் பொருட்களை திருடி கொண்டு தப்பினார்.

    இதுகுறித்து இருளாயி திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). ரெயில்வே ஊழியர். சில நாட்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர். சம்பவத்தன்று செந்தில்குமாரும் வீட்டை பூட்டிவிட்டு இரவு பணிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 8 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    பணி முடித்து விட்டு காலையில் வீடு திரும்பிய செந்தில்குமார் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருப்ப சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    திருமாவளவனுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

    இதை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரும் திருமாவளவனை வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் மிரட்டல்கள் வந்தன.

    மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் உதயகுமாரின் செல்போனில் பேசிய மர்ம நபரும் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

    இந்த மிரட்டல்கள் குறித்து தொகுதி செயலாளர் முத்துராஜா, சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் விசாரணை நடத்தினார்.

    திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சேர்ந்த மணி (வயது 23), வேம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


    சிவகங்கையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றால் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என்று வாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், முருகன் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றால் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என்று அந்த பகுதியில் வாட்ஸ் அப்களில் தகவல் பரவியது.

    இந்த தகவலை வைத்து கட்சி நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இருந்து சிவகங்கைக்கு புறப்பட்டுச்செல்கிறார்.

    கொலை மிரட்டலை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வரையும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்திலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    மேலும் கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 3 மாணவிகள் உள்பட 4 பேர் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சோம சுந்தரம் நகரை சேர்ந்தவர் தணிகைமுருகன். இவரது மகள் பவித்ரா (வயது 19).

    தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 19-ந்தேதி வேலைக்குச் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பாததால், காளையார்கோவில் போலீசில் தணிகை முருகன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்புவனம் தாலுகா மேலவெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் வினோதினி (17) பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள இவர், கடந்த 19-ந் தேதி திருப்புவனம் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால் திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மானாமதுரை தாலுகா ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகள் சவுந்தர்யா (17) பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள இவரும் 17-ந்தேதி முதல் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருப்பாச்சேத்தி அருகே உள்ள பொத்தன்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கலைச்செல்வி (17) பிளஸ்-2 மாணவி நேற்று வீட்டில் இருந்து வெளியேசென்ற இவர், அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாயமான கலைச் செல்வியை தேடி வருகிறார்.

    டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கையில் 5-வது நாளாக போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு விவசாய சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்து வருகிறது.

    5-வது நாளான இன்று முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, மாவட்டத்தலைவர் முத்து ராமலிங்கம், செயலாளர் விஸ்வநாதன், சாத்தையா, கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இன்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
    சிவகங்கையில் குழந்தையை தராததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை தாக்கினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா, எம். வேளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரி (வயது 26). இவரது கணவர் மலைராஜ் (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக சிவசங்கரி, கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று மலை ராஜ், அவரது பெற்றோர் கனகராஜ்- சுப்புலட்சுமி ஆகியோர் சிவசங்கரி வீட்டிற்கு சென்று குழந்தையை தருமாறு கேட்டனர். அதற்கு சிவசங்கரி மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தன்னை தாக்கியதாக சிவசங்கரி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து மலைராஜை கைது செய்தார்.
    வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகரில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அவர் சொந்த ஊரில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்நிலையில், முருகேஸ்வரி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், தொழில் தொடங்குவதற்காக வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்வதாக கூறியுள்ளார்.

    புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து பெண்ணை துன்புறுத்தியதாக சந்திரசேகரை கைது செய்தார்.

    நிலம் வாங்கித்தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சிவகங்கை:

    தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்த முத்துக்குமார், நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ரியல் ஸ்டேட் புரோக்கர் கருணாகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும், ரூ. 3 லட்சம் கொடுத்தால் அதனை வாங்கித் தருகிறேன் என்றும் கூறினார்.

    அதை நம்பி ரூ. 3 லட்சம் அவரிடம் கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்களாகியும் நிலத்தை அவர் வாங்கித் தரவில்லை.

    இது குறித்து அவரிடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை. எனவே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன். அதையும் தராமல் மோசடி செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை:

    மானாமதுரை தாலுகா கேப்பர் பட்டணம் பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி கலைச்செல்வி. இவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில், தனக்கும், செபஸ்தியார் பட்டணத்தைச் சேர்ந்த இக்னோபால் வினோத் (வயது 29) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம், வரதட்சணையாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 3 மாதத்தில் பெற்றோர் வீடு திரும்பினேன்.

    அதன் பிறகு சேர்ந்து வாழ பேசியபோது, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமிர்தம் விசாரணை நடத்தி இக்னோபால் வினோத், அவரது தந்தை மோட்ச ஆனந்தம், தாய் சந்தியாகு அம்மாள், சகோதரி சுசீலா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    சிவகங்கை நகரில் ஒருமாதமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறர்கள். சிவகங்கை நகராட்சி சார்பில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஒரு மாதமாக 3-4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் காலையில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது எந்த நேரத்திற்கு வரும் என்று தெரிவதில்லை. நகராட்சி நிர்வாகம் நினைத்த நேரத்தில் குடிநீர் வழங்கி வருகிறது.

    திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ. 190 கோடியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று அரசு முடிவு எடுத்து வழங்கி வருகிறது.

    ஆனால் நகராட்சி நிர்வாகம் இதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. குடிநீர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் ஓராண்டிற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்தி விட்டார்கள்.

    தற்போது மழை இல்லாமல் வறட்சி நிலவும் சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகத்தை நகராட்சி முறையாக அறிவிப்பு செய்யலாம்.

    மேலும் நகரில் உள்ள தெப்பக்குளம், குடிநீர் ஊரணி உள்பட அனைத்து ஊரணிகளும் வறண்டு விட்டன. மழை இல்லாததால் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளில் பல இடங்களில் தண்ணீர் வரவில்லை. சின்டெக்ஸ் மூலமாக தண்ணீர் வந்தாலும் மற்ற உபயோகங்களுக்கு இந்த தண்ணீரை பயன் படுத்துவார்கள். வரி வசூலிப்பதில் அக்கறையுடன் செயல்படும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்குவதில் தீவிர அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

    முறையாக குடிநீர் வழங்கக்கோரி நகரில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

    சிவகங்கையில் குடிநீருக்காக அரசு ஊழியர்கள், பெண்கள், பொதுமக்கள் அலையும் பரிதாபத்தை நகராட்சி நிர்வாகம் போக்கிடும் வகையில் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூரில் சாலையை சீரமைக்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் உள்ள பள்ளங்களில் பிணத்தை புதைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சாம்பான் ஊருணியில் இருந்து மதுரை செல்லும் சாலை மற்றும் சிவகங்கை செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இதில் நான்கு ரோடு, பஸ் நிலையம், அண்ணாசிலை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகேயுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சியளிக்கின்றன. இதேபோல் மாநில நெடுஞ்சாலையாக உள்ள மதுரை ரோடு, புதுத்தெரு வழியாக திண்டுக்கல் ரோட்டினை இணைக்கும் சாலை, கறிக்கடை வீதி, சிங்கம்புணரி ரோடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
    பிணம் புதைக்கும் போராட்டம்

    இந்தநிலையில் நேற்று திருப்பத்தூர் நான்கு ரோடு பகுதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பாடையில் பிணம் இருப்பது போன்று சித்தரித்து உருவப்பொம்மை எடுத்து வந்தனர். பின்னர் கட்சியினர் பிணத்துடன் கூடிய பாடையை தூக்கிக்கொண்டு நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பஸ் நிலையம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி, சாலையில் உள்ள பள்ளங்கள், குழிகளில் பிணம் புதைக்கும் நூதன போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்தினர்.

    போராட்டத்தின்போது பெண்கள் சாலையில் பிணத்தை வைத்து ஒப்பாரி பாடி, சாலையினை சீர்செய்ய வேண்டும் என்று கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் கட்சியினர் மதுரை ரோடு வழியாக ஊர்வலமாக சென்று சிவகங்கை ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய தலைவர் சின்னக்கருப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாச்சியப்பன், நகர செயலாளர் ஜியாவுதீன், ஒன்றிய துணை செயலாளர் அடைக்கண் மற்றும் லட்சுமி, ருக்குமணி, சிட்டு, சிகப்பி உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.

    ×