என் மலர்
செய்திகள்

சிவகங்கை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி
சிவகங்கை:
சிவகங்கையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறர்கள். சிவகங்கை நகராட்சி சார்பில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு மாதமாக 3-4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் காலையில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது எந்த நேரத்திற்கு வரும் என்று தெரிவதில்லை. நகராட்சி நிர்வாகம் நினைத்த நேரத்தில் குடிநீர் வழங்கி வருகிறது.
திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ. 190 கோடியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று அரசு முடிவு எடுத்து வழங்கி வருகிறது.
ஆனால் நகராட்சி நிர்வாகம் இதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. குடிநீர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் ஓராண்டிற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்தி விட்டார்கள்.
தற்போது மழை இல்லாமல் வறட்சி நிலவும் சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகத்தை நகராட்சி முறையாக அறிவிப்பு செய்யலாம்.
மேலும் நகரில் உள்ள தெப்பக்குளம், குடிநீர் ஊரணி உள்பட அனைத்து ஊரணிகளும் வறண்டு விட்டன. மழை இல்லாததால் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளில் பல இடங்களில் தண்ணீர் வரவில்லை. சின்டெக்ஸ் மூலமாக தண்ணீர் வந்தாலும் மற்ற உபயோகங்களுக்கு இந்த தண்ணீரை பயன் படுத்துவார்கள். வரி வசூலிப்பதில் அக்கறையுடன் செயல்படும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்குவதில் தீவிர அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
முறையாக குடிநீர் வழங்கக்கோரி நகரில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
சிவகங்கையில் குடிநீருக்காக அரசு ஊழியர்கள், பெண்கள், பொதுமக்கள் அலையும் பரிதாபத்தை நகராட்சி நிர்வாகம் போக்கிடும் வகையில் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






