என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டம்: உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி எதிர்ப்பு
    X

    டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டம்: உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி எதிர்ப்பு

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. காளையார்கோவில் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    காளையார்கோவில்:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் 81 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. சாலையோரத்தில் இருந்த டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், கிராம பகுதியில் கடைகள் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவகோட்டை, கல்லல், மானாமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் வலுத்து வருகிறது.

    காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த குருந்தனி மற்றும் இவ்வூரை சுற்றியுள்ள நற்புதம், அரசகுளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், டாஸ்மாக் மேற்பார்வையாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் குருந்தனி கிராமத்தில் நேற்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த கிராமத்தில் இருக்கும் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி நின்று திடீரென்று போராட்டம் நடத்தினர். பெண்கள், ஆண்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிநின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார், மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் சந்தானலட்சுமியின் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோன்று காளையார்கோவில் அருகே மாந்தாளி கிராமத்தில் உள்ள ஆர்.வி.எஸ்.நகரில் திறக்கப்பட்ட கடையை அகற்றக்கோரி கடந்த 7 நாட்களாக பெண்கள் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கையை அடுத்த படமாத்தூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி ஏற்கனவே பலமுறை இப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த படமாத்தூர் கிராமமக்கள், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த போராட்டத்தால் மதுரை-தொண்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடையை அகற்றுவதாக உறுதி அளித்ததை அடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    காரைக்குடி 100 அடி ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடை முன்பு அமர்ந்து, டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தேவகோட்டையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் நகருக்கு வெளியில் ஒரு தோட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு குடியிருப்பு வழியாகவே செல்ல வேண்டும். இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, தேவகோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இல்லையென்றால் தங்களது ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க போவதாக முற்றுகையிட்டவர்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    Next Story
    ×