என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார்கோவில் அருகே மர்ம காய்ச்சலால் 20 பேர் பாதிப்பு
    X

    காளையார்கோவில் அருகே மர்ம காய்ச்சலால் 20 பேர் பாதிப்பு

    மர்ம காய்ச்சலால் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் காளையார்கோவில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மேப்பல் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பெண்கள், முதியவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அவர்கள் சிகிச்சை பெற்றனர்.

    முதுகலை மாணவி ரிக்ஷிகா கடந்த ஒருவாரமாக தொடர் காய்ச்சலால் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். கருப்பாயி என்ற பெண்ணை மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் உள்ளது தெரிய வந்தது.

    மேலும் வேதமுத்து (75), ஜெயசீலி (60), யாசினி (6), அனுசுயா (9), மல்லிகா (4), முத்தாத்தாள் (75), சகாயராணி (26), சிறுமி அஸ்வினி (6), பயாஸ்டி அழகம்மாள் (50), பள்ளத்தாள் (65), முத்துலட்சுமி (30)சிறுவன் அகிலேஷ்குமார், கீர்த்தனா (5), கவுசி ஆகிய 15 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காளையார்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் காய்ச்சல் தொடர்ந்துள்ளது.

    தொடர் காய்ச்சல் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    குடிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இல்லை. வீட்டு உபயோகத்திற்கு டாங்குகள் அமைக்கப்பட்டும் தண்ணீர் வரவில்லை. மேலும் டாங்குகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் திடீர் காய்ச்சல் வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

    மேலும் காளையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதிய சிகிச்சை தராமல் மாத்திரைகளை தந்து அனுப்பி விடுகிறார்கள்.

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு சென்றால் அங்கு சிகிச்சை மறுக்கப்படுவதுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்புகிறார்கள். 108 ஆம்புலன்ஸ்சில் சென்றால் மருத்துவக்கல்லூரியில் உரிய சிகிச்சை தரப்படுகிறது.

    பெரும்பாலும் ஏழை, எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் பணம் செலுத்தி சிகிச்சை பெறுவது சிரமமாக உள்ளது.

    குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் காளையார்கோவிலில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ. 15 கொடுத்து வாங்கி குடித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சல் வருவதால் மேப்பல் கிராமம், அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பயத்தில் உள்ளார்கள்.
    Next Story
    ×