search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பணைகள் கட்டும் பணி: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
    X

    காரைக்குடி அருகே தேனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். அருகில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் உள்ளனர்.

    தடுப்பணைகள் கட்டும் பணி: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

    • 7 தடுப்பணைகள் கட்டும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    • இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், ஒ.சிறுவயல் கிராமம் அருகே, தேனாற்றின் குறுக்கே ஒய்யகொண்டான் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுகிறது.

    தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பெரியகருப்பன் கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், அனைத்துறைகளையும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டு வருகிறார். குறிப்பாக, வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் ஏராளமான விளைநிலைங்களையும் ஏரி, குளம், கண்மாய்கள் நிறைந்த மாவட்டமுமாக உள்ளது. மேலும், பாலாறு, தேனாறு, வைகையாறு, மணிமுத்தாறு போன்ற ஆறுகள் சிவகங்கை மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இருப்பினும் கடைமடை பகுதியாக இருப்பதால் போதுமான அளவு நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லாமல் வறட்சி சூழ்ந்த மாவட்டமாக உள்ளது.

    இதனைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மக்களின் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தாண்டு 7 தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே 4 தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. 380 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெற உள்ளன. 7 கண்மாய்களுக்கு இதில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மறைமுகமாக இந்த பகுதிகளில் உள்ள அரண்மனைப்பட்டி, பலவான்குடி, ஒ.சிறுவயல், குன்றக்குடி, பாதரக்குடி போன்ற கிராமங்கள் பாசன வசதி பெற உள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு இதற்காக ரூ.1.42 லட்சம் செலவிடப்படவுள்ளது.

    இந்த திட்டத்தில் தடுப்பணை, மணல்போக்கி கட்டுதல் மற்றும் ஒய்யகொண்டான் கண்மாய்க்கும் சிறுவயல் கண்மாய்க்கும் புதிய தலைமதகுகள் கட்டுதல், வௌ்ளக்கரைகளை உயர்த்தி புனரமைத்தல், கால்வாய் மராமத்து பணி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, வேளாண் சார்ந்த தொழில்க ளுக்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகளுக்கு போன்ற கால்நடைகளுக்கும் கூடுதல் நீர் ஆதாரமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) கார்த்திகேயன், கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், சீனிவாசன், விக்னேஸ்வரன், சரவணன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், உதவிப்பொறியாளர்கள் பாலமுருகன், கலைவாணி, பிரகாஷ், ஆனந்த மாரியவளவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத்தலைவர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×