search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
    X

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

    • ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீண்டும் ஐகோர்ட்டை நாடி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.
    • தமிழக அரசு, ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடத்துவதற்கு அந்த அமைப்பினர் திட்டமிட்டனர்.

    தமிழகத்தில் சென்னை உள்பட 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டி ருந்தது. இதற்காக அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போலீசாரிடம் உரிய அனுமதியை கேட்டு விண்ணப்பித்தனர்.

    அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    இதையடுத்து போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி 6 இடங்களை தவிர 44 இடங்களில் உள்ள அரங்குகளில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதனை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். 2 நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. தனி நீதிபதிகளின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் ஒழுக்கத்தை கடைபிடித்து பேரணி நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கிடைத்தது.

    கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணை நடைபெற்றபோது தமிழக அரசு சார்பில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

    தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி உளவுத்துறை தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும், சென்னை ஐகோர்ட்டு பேரணிக்கு அனுமதித்ததை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார்.

    பேரணியை அனுமதிப்பதா? வேண்டாமா? என்று முடிவெடுக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் மகேஷ் ஜெத்மலானி தமிழக அரசின் முடிவு ஒரு தனிப்பட்ட காரணம் என்றும், கூட்டணி கட்சிகளின் மனித சங்கிலிக்கு அனுமதி அளித்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மட்டும் தடை விதிப்பது எப்படி சரியாகும் என்று வாதிட்டார்.

    இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 27-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட் டது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் விரைவில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இதன் பிறகு பேரணி தொடர்பான புதிய அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×