என் மலர்
உள்ளூர் செய்திகள்

நங்கவள்ளியில் கேக் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்பேக்கரி கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை
- நங்கவள்ளி அரசு நடுநிலை பள்ளி எதிரே ஒரு பேக்கரி உள்ளது. தனது மகள் வித்யாஸ்ரீ (2) பிறந்த நாளை கொண்டாட இந்த பேக்கிரியில் இருந்து கேக் வாங்கி சென்றுள்ளனர்.
- வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் கேக் வெட்டி அனைவரும் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வித்யாஸ்ரீ (2) உட்பட 5 சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி அரசு நடுநிலை பள்ளி எதிரே ஒரு பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் பல்வேறு தின்பண்டங்களை வாங்கி சுவைத்து செல்வர்.
பிறந்தநாள் கேக்
இந்த நிலையில் நேற்று இரவு நங்கவள்ளி கரட்டுபட்டியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது மகள் வித்யாஸ்ரீ (2) பிறந்த நாளை கொண்டாட இந்த பேக்கிரியில் இருந்து கேக் வாங்கி சென்றுள்ளனர்.
வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் கேக் வெட்டி அனைவரும் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வித்யாஸ்ரீ (2) உட்பட 5 சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
முற்றுகை
இதனிடையே கேக்கை பரிசோதித்துப் பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சம்பந்தபட்ட கடையை பாதிக்கப்பட்டவர்களின் ஊழியர்கள் முற்றுகையிட்டு கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கடை உரிமையாளர்
மேலும் இது தொடர்பாக நங்கவள்ளி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பேக்கரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து கடையில் சோதனை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நங்கவள்ளி வட்டாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே இப்பகுதிகளில் தொடர் சோதனை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.






