என் மலர்
உள்ளூர் செய்திகள்

மல்லூர் அருகே மாந்திரீகர் கொலை: வாலிபர்கள் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை
- நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வாழக்குட்டப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முத்துராஜ் வீடு திரும்பவில்லை.
- இந்த நிலையில் எருமநாயக்கன்பாளையம் பகுதியில் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 39). மாந்திரீகர்.
நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வாழக்குட்டப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முத்துராஜ் வீடு திரும்பவில்லை.
கொலை
இந்த நிலையில் எருமநாயக்கன்பாளையம் பகுதியில் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மர்ம சாவு என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் சம்பவ இடத்தை சேலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வம், ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் முத்துராஜ் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மநபர்கள் கம்பியால் தலையின் பின்புறத்தில் பலமாக தாக்கியுள்ளதாக தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் முத்துராஜ் மாந்திரீகம் செய்து குழந்தைகளுக்கு தாயத்து கட்டி வந்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேர் சிக்கினர்
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துச் சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தான் மாந்தீரிகரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். விசாரணை முடிவில் மாந்தீரிகர் கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.






