என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவடமாநில வாலிபர் ஜெயிலில் அடைப்பு
- வீட்டுக்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியை பாலியல் சில்மிஷம் செய்தார்.
- இதை பார்த்த கணவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி பகுதியில் உள்ள விவசாயி ஒருவருடைய வீட்டுக்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியை பாலியல் சில்மிஷம் செய்தார்.
இதை பார்த்த கணவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் அந்த பெண்ணின் கணவருக்கு 2 பல்கள் உடைந்தன.
வீடு புகுந்து பாலியல் தொந்தரவு
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 3 வாலிபர்கள் ஒரே நேரத்தில் வந்து அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். இதனால் பெண்கள் சத்தம் போடவே 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
ஒரு வாலிபர் மட்டும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை தாக்கி விட்டு ஓடினார். அந்த வாலிபரை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது தனியார் கம்பெனிக்குள் நுழைந்தார்.
ஒருவர் சிக்கினார்
பொதுமக்கள் ஒன்று சேர்ந்து உள்ளே புகுந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா மற்றும் போலீசார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், வடமாநில வாலிபர்கள் கடந்த ஒரு வாரமாக தும்பிப்பாடி ஊராட்சியில் உள்ள சட்டூர், கொண்டையனூர், கொன்ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார், விசாரணை நடத்தி சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வாலிபர் ஜெயிலில் அடைப்பு
வடமாநில வாலிபர் தாக்கியதில் காயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொதுமக்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிடிப்பட்ட வடமாநில வாலிபரை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






