search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் வட்டாரத்தில் விவசாயிகள் பணப்பயிர்களை சாகுபடி செய்வதால் காய்கறி விலை உயர்ந்தது
    X

    பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகள்.

    ஓமலூர் வட்டாரத்தில் விவசாயிகள் பணப்பயிர்களை சாகுபடி செய்வதால் காய்கறி விலை உயர்ந்தது

    • ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் தோட்டக்கலை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.

    காய்கறி சாகுபடி குறைந்தது

    ஆனால் கடந்த ஓராண்டாக ஓமலூர் வட்டார விவசாயிகள் பணப் பயிர்களையே அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அதனால் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் காய்கறி சாகுபடி குறைந்து, விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பயிற்சி

    இந்த நிலையில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகள் சாகுபடி செய்வதற்கான பயிற்சி முகாமை ஓமலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை நடத்தியது. இந்த முகாமில் பொது மக்கள் தங்களது வீடுகளில் மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் இயற்கையான முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லாத காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிடலாம் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைக்க தேவையான பைகள், விதைகள், நார் கழிவுகள், செடிகளின் நாற்றுகள், உயிர் உரங்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், மாடி தோட்ட தொகுப்புகளை வாங்கி சென்று வீடுகளில் காய்கறிகள் சாகுபடி செய்து, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விளைவித்து பயனடையலாம். மேலும் அதிகளவில் சாகுபடி செய்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உதவிகள்

    மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் கேட்கப்பட்டது. அப்போது அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×