search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை பணியமர்த்திய 9 நிறுவனங்களுக்கு ரூ.5½ லட்சம் அபராதம்
    X

    குழந்தைகளை பணியமர்த்திய 9 நிறுவனங்களுக்கு ரூ.5½ லட்சம் அபராதம்

    • ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    1986-ம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் கோவை மாவட்டத் தில் கடைகள், உணவு நிறுவனங்களில் கடந்த ஜூலை மாதம் 3.50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஜூலை மாதத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களை பணியமர்த்திய 9 நிறுவனம் மீது கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை முடிந்து ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த 11-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் ரெயில்வேசைல்டு லைன் மூலம் பெறப்பட்ட புகார் தொடர்பாக சுக்கிரவார்பேட்டையில் ஆய்வு செய்த போது 2 நகை பட்டறைகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த வளரிளம் பருவத்தினர் 7 பேர், 10 வயதுக்குட்பட்ட ஒருவர் என 8 பேர் மீட்கப்பட்டனர்.

    12-ந்தேதி சிவானந்தா காலனியில் 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தை மீட்கப்பட்டு நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர் பணியாற்றுவது தெரியவந்தால் https://pencil.gov.in என்ற இணையதள முகவரியி லும், 0422 2241136 என்ற தொலை பேசி எண்ணிலும், கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை 18004252650 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×