என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கூடலில்  கொலை செய்யப்பட்ட இறைச்சிக்கடைக்காரர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
    X

    கொலை செய்யப்பட்ட ஆறுமுகம்.

    முக்கூடலில் கொலை செய்யப்பட்ட இறைச்சிக்கடைக்காரர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
    • கடந்த 2 நாட்களாக அந்த கும்பல் முக்கூடல் அருகே சுற்றித்திரிந்துள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை அருகே உள்ள முக்கூடல் பாண்டியாபுரம் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 70). இவர் தனது வீட்டை ஒட்டி கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

    வெட்டிக்கொலை

    நேற்று இரவு வழக்கம்போல் ஆறுமுகம் கடையில் இருந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி 3 மர்ம நபர்கள் அங்கு வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

    தகவல் அறிந்து முக்கூடல் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகம் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தை அறிந்ததும் அவரது உறவினர்கள் உள்பட ஏராளமானோர் நெல்லை-முக்கூடல் சாலையில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்விரோதம்

    கடந்த பொங்கல் தினத்தன்று ஆறுமுகத்தின் மகன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டி ருந்துள்ளார். அப்போது அவர்களுக்கும், அங்கு வந்த அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆறுமுகத்தின் மகன், எதிர்தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் இருந்து வந்த எதிர்தரப்பினர் சில மாதங்களாக திருப்பூருக்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் அந்த கும்பல் கடந்த 2 நாட்களாக முக்கூடல் அருகே நந்தன்தட்டை, திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளது. இதனால் அந்த கும்பல் ஆறுமுகத்தின் மகனை கொலை செய்ய வந்திருக்கலாம். அந்த நேரத்தில் அங்கு ஆறுமுகம் இருந்ததால் அவரை அந்த கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    உடலை வாங்க மறுப்பு

    இதற்கிடையே கொலையாளி களை கைது செய்தால் மட்டுமே ஆறுமுகத்தின் உடலை பெற்றுக் கொள்ள போவதாகவும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ள னர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை யொட்டி முக்கூடலில் இருந்து அரியநாயகிபுரம் வரையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×