என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் டி.ஐ.ஜி.க்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    வாலாஜா:

    உலக மகளிர் தின விழா வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. 

    கல்லூரி முதல்வர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். இதில் வேலூர் டிஐஜி ஆனி விஜயாவிற்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

    அமெரிக்காவின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனமான சப்பர் ஏ  பேக்கின் இயக்குனர் ஹெஸ்டர் செசிலியா ஹெம்ஸ்பையர் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு நிர்வாகியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான வரபிரசாத் ஆகியோர் வழங்கினர். 

    அப்போது டி.ஐ.ஜி ஆனி விஜயா பேசியதாவது:-

    மகளிர் தினம் கொண்டாடும் இவ்வேளையில் மிகப்பெரிய விருது கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. மக்களோடு பின்னிப் பிணைந்து பணியாற்றும் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் இவ்விருதை சமர்ப்பிக்கிறேன். கடமை உணர்வுடன் மிக நேர்மையாக பணியாற்றி உத்வேகம் பெற்றுள்ளேன். 

    மாணவிகள் அசாத் தியமான துணிச்சலுடன் தவறை சுட்டிக் காட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை கனவை நிறைவேற்றிட நிகழ்காலத்தில் சாதிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடுமையான உழைப்பின் மூலமே வெற்றியை அடைய முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தீபா சத்யன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கணக்காளரை கலெக்டர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
    அரக்கோணம்:

    திமிரி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் நிதி முறை கேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. 

    இதனையடுத்து சென்னையில் இருந்து உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குனர், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிதி முறைகேடு தொடர்பாக தணிக்கையில் ஈடுபட்டார். 

    இதில் 2019-2020-ம் ஆண்டில் நிதி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சமீபத்தில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மாறுதலாகி அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்து வரும் கணக்காளரை சஸ்பெண்டு செய்து ராணிபேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
    ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தென்கழனி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. லாரி டிரைவர். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகன் விக்னேஷ் (23) சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் அதிக ஈடுபாடுடன் விளையாடி வந்தார்.

    விக்னேஷ் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக பணத்தை செலவு செய்து இருக்கிறார். பணப் பற்றாக்குறையால் தெரிந்தவர்களிடம் கடனாக வாங்கி ஆன்லைன் விளையாட்டில் செலவு செய்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

    இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரியவரவே ஏன் இப்படி செய்கிறாய் என்று விக்னேசை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் நேற்று இரவு வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலையில் பெற்றோர் எழுந்து வந்து விக்னேஷ் அறையை பார்த்தபோது விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ராமமூர்த்தி திமிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காதல் திருமணத்தால் ஏற்பட்ட தகராறில் மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி கடப்பந்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன் (வயது 42). விவசாயி இவருக்கு 2 மகன் 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் சினேகா இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கீராம் பாடியை சேர்ந்த மணி என்பவரது மகன் விக்னேஸ்வரன் (25) என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

    இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் சசிதரன் விக்னேஸ்வரனின் தந்தை மணியின் கையை முறித்துவிட்டார். இதனால் முன்விரோதம் அதிகரித்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை சசிதரன் கீராம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த மணியை பார்த்து கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதை அறிந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது அண்ணன் பசுபதி (27) மற்றும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து சசிதரனை கத்தியால் வெட்டி சாய்த்தனர்.

    இதில் பலத்த காயமடைந்த சசிதரன் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், பசுபதி, மணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து விக்னேஸ்வரன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    சசிதரன் மகளை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்தேன். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சசிதரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டார். மேலும் எனது தந்தையை தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி வந்தார். நேற்று முன்தினம் எனது தந்தை மணியை அவர் கத்தியை காட்டி மிரட்டினார்.

    இதனால் ஆத்திரமடைந்த நான் எனது தந்தை அண்ணன் ஆகியோர் சேர்ந்து அவரை கத்தியால் வெட்டினோம். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.
    காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
    நெமிலி:

    பாணாவரம் அடுத்த கரடிகுப்பத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). கட்டிட மேஸ்திரி. நேற்று காவேரிப்பாக்கம் ஏரிக்கு  மீன் பிடிக்க சென்றார்.

    முருகன் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். 

    ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    காவேரிப்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் முருகனை பிணமாக மீட்டனர்.

    பிரேத பரிசோதனைக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டையில் வருகிற 12-ம் தேதி தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு பயிற்சித் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. 

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற மாணவ மாணவிகளுக்கு 8-ம் வகுப்பு முதல் பொறியியல் மற்றும் பட்டப்படிப்புகள் வரை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக இந்த முகாம் நடைபெற உள்ளது. 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. 

    சுமார் 10 ஆயிரம் பேர் பங்கு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கும், வேலை வேண்டி விண்ணப்பித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
    உக்ரைன் நாட்டிலிருந்து ராணிப்பேட்டை திரும்பிய மாணவி அமைச்சர் காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பூஜா மற்றும் சுபாஷ் ஆகிய 2 மாணவர்கள்  உக்ரைனில் தங்கி மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தனர். 

    இந்த நிலையில் உக்ரைனில் ஏற்பட்ட போரில் சிக்கிய இருவரையும் மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாதுகாப்பாக தாயகம் திரும்பிய சுபாசும், பூஜாவும் அமைச்சர் ஆர்.காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

    இதனை தொடர்ந்து பேட்டியளித்த மாணவி பூஜா போர் பதட்டத்தில் இருந்த தங்களுக்கு தமிழக அமைச்சர் ஆர்.காந்தி வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் அளித்து தைரியம் கூறினார். மேலும் தங்களை பாதுகாப்பாக அழைத்து வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
    வாலாஜா அரசு கல்லூரியில் ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    வாலாஜா

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களுக்கு உட்பட்ட மகளிர் குழுக்களில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை மாணவர்கள் பார்வையிடுவது. இதனை வைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் மகளிர் குழுக்கள் பிரத்தியேகமாக செய்து கொண்டு வந்திருந்த ஊட்டச்சத்து உணவு பொருட்களையும், பழங்கள், காய்கறிகளையும் பார்வையிட்டார். மகளிர் குழுக்கள் கோலங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திருப்பதையும் பார்வையிட்டார்.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ஏற்கனவே நடத்தி முடித்த வட்டார அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு கண்காட்சிகளில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:&

    இந்த வேகமான உலகத்தில் பொதுமக்கள் நம் முன்னோர்களின் உணவு பழக்கத்தை கைவிட்டு தற்போதைய உணவுப் பழக்க வழக்கத்தை நவீன பழக்கம் வழக்கம் என நினைத்து பல்வேறு விதமான உடலுக்கு ஒத்துப்போகாத தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கங்களோடு வாழ்ந்து வருகின்றனர். 

    ஏனென்றால் அவர்களின் இன்றைய வேகமான வாழ்க்கை மற்றும் வேலையின் காரணமாக உணவு பழக்கவழக்கமும் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் இது ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்காது. நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானது. 

    ஊட்டச்சத்து குறைபாட்டினால் அதிக அளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான். பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகப்படியான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

    பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெப்ப காலங்களில் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்து மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 
     
    அடுத்த தலைமுறையினர் நல்ல ஆரோக்கியத்துடன் வளர கல்லூரி மாணவிகள் இதைப் பார்த்து புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் நானில தாசன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் ஷாகுல் ஹமீத், சுபாஷ் சந்திரன், கல்லூரி முதல்வர் பொறுப்பு சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    நெமிலி அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கடம்ப நல்லூர் கிராமத்தில் கிராமப்புற மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடந்தது. 

    இதில் பொது மக்களின் உடல் ரீதியான நோய்கள் கண், காது, சம்மந்தமான கோளாறுகளும் அதை சரிசெய்வதற்கு தேவையான ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

    இதில் 2 மருத்துவர்கள், 6 செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க தமிழக அரசுக்கு உதவியது குறித்து ராணிப்பேட்டை டாக்டர் விஜயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் விஜயகுமார். உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து தற்போது வாலாஜாவில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசுக்கு இவர் உதவி செய்துள்ளார்.

    இதுகுறித்து டாக்டர் விஜயகுமார் நிருபரிடம் கூறியதாவது :-

    நான் கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் உள்ள வின்னிஸ்டியாவில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, தற்போது வாலாஜாவில் கிளினிக் நடத்தி வருகிறேன். உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நான் படித்த பல்கலைக்கழகத்தில் தற்போது படித்து வரும் 160 தமிழக மாணவர்களின் முழு விவரங்களை சேகரித்தேன். அவர்களை அங்கிருந்து ‌நாட்டின் எல்லை பகுதிகளுக்கு வரவழைக்க பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்தேன்.

    அதில் 120 பேர் ருமேனியாவுக்கும், 20 பேர் ஹங்கேரிக்கும், மீதமுள்ளவர்கள் மற்ற எல்லை பகுதிகளுக்கும் வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் டெல்லிக்கு வந்து, அவரவர் சொந்த ஊருக்கு சென்றடைந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை சேர்ந்த கண்ணன், வாலாஜாவை சேர்ந்த அனிதா உள்பட 8 பேர் அவரவர் வீட்டிற்கு வந்தடைந்து விட்டனர்.

    கார்கிவ் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்தது. ருமேனியாவுக்கு பஸ்சில் செல்ல ரூ.38 ஆயிரத்துக்கு மேல் கேட்டுள்ளனர். அந்த தொகையை மாணவர்களால் செலுத்த முடியாது என்பதால் உடனடியாக இந்த தகவலை ‘வாட்ஸ்அப்’ குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்தேன்.

    அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனத்திற்கு அரசு மூலம் பணம் செலுத்தப்பட்டது. பின்னர் 4-ந் தேதி அவர்கள் 35 பேரும் கார்கிவ்வில் இருந்து பஸ்சில் புறப்பட்டனர். இன்று (நேற்று) அவர்கள் ருமேனியா நாட்டு எல்லைக்கு வந்தடைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் விஜயகுமாரின் இந்த முயற்சியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
    ஜோலார்பேட்டை அருகே ராணுவ வீரர் மனைவி தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 31). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி (27). இவர்களுக்கு யாழினி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

    ஜெகன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு ஜெகனுக்கும், ரேவதிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.  

    இதனால் மன உளைச்சலில் இருந்த ரேவதி நள்ளிரவு வீட்டில் அறையில் சென்று சேலையால் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து ஜெகன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் குடியாத்தத்தில் வசிக்கும் ரேவதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். 

    போலீசார் விரைந்து வந்து ரேவதியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் திருப்பத்தூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    நெமிலி பகுதியில் கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல் அறுவடை செய்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. 

    இதனால் தனியார் வியாபாரிகள் மிகவும் குறைவான விலைக்கே கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலுமுள்ள கொள்முதல் நிலையங்களில் 27 அரசு கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் உத்தரவிட்டார். 

    அப்படியிருந்தும் இதுவரை அரசு நேரடி நெல் கொள்முதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறினர். நேல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×