search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட கோரி கலெக்டரிடம் மனு
    X

    ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை ேகட்டறிந்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு உள்ளார்.

    சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட கோரி கலெக்டரிடம் மனு

    • ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். அப்போது் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி விசித்ராவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஏற்கனவே ரூ.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

    நேற்று கூடுதல் நிவாரணமாக இலவச வீட்டுமனை பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நகர் வீட்டு உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

    இதில், 50 குடும்பங்கள் வசிக்கும் பகுதி அருகே 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் மாணவர்கள், பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இக்கடையை பூட்ட பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சம்பந்தமே இல்லாமல் வேறு பகுதியில் கடையை பூட்டியுள்ளனர்.

    எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடை எண் 6969 பூட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தினர். உத்தரகோச மங்கை அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் வெள்ளா மருச்சுகட்டி கிராம மாணவர்கள் பெற்றோருடன் மனு அளித்தனர். பள்ளி நேரத்தில் பஸ் வசதியின்றி 4கி.மீ., நடந்து சிரமப்படுகிறோம். காலை 8 மணி, மாலை 5 மணிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். மேலும் குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி கூட்டாம்புளி, சாத்தமங்கலம் கிராம மக்கள் காவிரி குடிநீர் வரவில்லை. சுகாதாரமற்ற குளத்து நீரை பயன்படுத்துகிறோம். சுகாதாரமான குடிநீர் குடம் ரூ.15க்கு விற்கின்றனர். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும், என வலியுறுத்தினர்.

    இக்கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 267 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மாரிசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×