search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
    X

    பாண்டுகுடி கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு

    • திருவாடானை யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • உரிய காலத்திற்குள் முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடனை யூனியன் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் கிராம சாலை சீரமைக்கும் திட்டத்தில் ரூ.7.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்டு சாலையின் இருபுறமும் மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பக்கவாட்டு பகுதிகள் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளி ரூ.1.70லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

    கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பணிகளை மேற்கொள்வதுடன் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லும் வகையில் பணியை உரிய முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.14.23லட்சம் மதிப்பீட்டில் ஊரணி சீரமைத்து கரைகள் பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அரும்பூர் மற்றும் பாண்டுகுடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.57.55 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏதுவாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் ரூ.9.85லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளிர்மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.24 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அதிகளவு கிராம பகுதிகளில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், பொறியாளர்கள் பாலகுமார், திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×