என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு மலர் அலங்காரத்தில் பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் அருள்பாலிப்பு.
மாமன்னர் ராஜராஜசோழன் சதய விழா; பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலிப்பு
- தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள்.
- 48 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம்.
தஞ்சாவூர்:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும், இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
இக்கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டும். அதன்படி, இந்த ஆண்டு 1037-வது சதய விழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கருத்தரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு நிகழச்சிகள் நடந்தது.
விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அதன் பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியபொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 48 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் பெருவுடையார்-பெரிய நாயகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.






