search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை- அதிகாலையில் கொட்டிய பனியால் பொதுமக்கள் அவதி
    X

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை- அதிகாலையில் கொட்டிய பனியால் பொதுமக்கள் அவதி

    • ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • கடுமையான பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு மாவட் டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், ஆரல் வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 1, பெருஞ்சாணி 6.8, பூதப்பாண்டி 12.6, கன்னிமார் 14.8, கொட்டாரம் 2.4, மயிலாடி 4.2, சுருளோடு 9, தக்கலை 6.2, குளச்சல் 2, இரணியல் 6.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 13.6, கோழிப்போர்விளை 6.4, அடையாமடை 4.2, ஆணைக்கிடங்கு 11.4.

    இரவு மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை 9 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் முகப்பு லைட்டுகளை எரிய விட்ட வாறு டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். பனிப்பொழிவின் காரணமாக பெரியவர்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×