என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே ஆட்டை மீட்பதற்காக கிணற்றில் இறங்கிய 4 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள துவார் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 45), விவசாயி. இவரது வீட்டின் பின்னால் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அதில் தற்போது 10 அடிக்கு கழிவு தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடந்தது.

    இந்த நிலையில் சவுந்திரராஜன் வளர்த்து வந்த ஆடு ஒன்று இன்று காலை அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதையடுத்து ஆட்டை மீட்பதற்காக சவுந்திரராஜன் உள்ளே இறங்கினார். பின்னர் கயிறு மூலம் ஆட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் மேலே வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அப்பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (55) என்பவர் கிணற்றுக்குள் இறங்கினார். அவரும் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பிரமையா (60), அய்யாவு (55) ஆகியோர் இறங்கினர். அவர்களும் மேலே வரவில்லை. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் தொற்றியது.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்த்த போது, 4 பேரும் கிணற்றுக்குள் மூழ்கி பலியானது தெரிய வந்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் மலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சவுந்திரராஜன் வீட்டின் கிணறு கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் அதில் கிடந்த தண்ணீர் கெட்டு போய் இருந்ததால், விஷ வாயு உண்டாகி 4 பேரும் பலியாகியது தெரிய வந்தது.

    கிணற்றில் இருந்த தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் மின்மோட்டார் மூலம் வெளியேற்றி அதன் பிறகு 4 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கிணற்றில் இறங்கிய 4 பேர் விஷ வாயு தாக்கி பலியான சம்பவத்தால் துவார் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 4 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களிடம்தான் மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. எனவே தமிழகத்தை சீரழித்துள்ள மதுக்கடைகளை மூடவேண்டுமானால் விஷச் சக்கரமாக சுழன்று வரும் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.

    அவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். 3–வது அணி ஆட்சி அமைத்தால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி, கந்து வட்டி, தனியார் நிறுவனம் என எந்த வகையில் விவசாயிகள் கடன் வாங்கியிருந்தாலும் அந்த கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை கூட மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு நிபந்தனைகளை கடுமையாக்கிய மத்திய அரசு, இறக்குமதியை தாராளமாக அனுமதித்ததால் உள்ளூர் விவசாயிகள் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் மீத்தேன், ஷேல் காஸ் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதாக யாரேனும் வந்தால், அவர்களை தடுக்க முதல் ஆளாக நான் சம்மட்டியோடு களத்தில் நிற்பேன்.

    6 கட்சிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியை ஆதரிக்காமல் மீண்டும் இரு ஊழல் கட்சிகளை மக்கள் ஆதரிப்பதாக இருந்தால், இனிமேல் ஒரு போதும் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.

    அப்படியொரு நிலை ஏற்பட்டாலும் எங்கள் கூட்டணியின் சுயமரியாதையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விராலிமலை வயல்காட்டில் பிளஸ்-2 மாணவி தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பூதக்குடி ஈ.மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் வினோதினி (வயது 17).  பழனிவேலும் அவரது மனைவியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் தாய்-தந்தையை இழந்த வினோதினி,  ஈ.மேட்டுப்பட்டியில் உள்ள அவரது தாய்மாமா செந்தில்குமார் வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து  வந்தார். தற்போது அரசு தேர்வு எழுதியிருந்தார்.
    நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற வினோதினி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை அங்குள்ள வயல் காட்டில் தீயில் கருகிய நிலையில் வினோதினி இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் டி.எஸ்.பி. தமிழ்செல்வன் மற்றும் விராலிமலை  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வினோதினி எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. தாய் -தந்தையை இழந்து வாழ்ந்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்து தீக்குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது ஏதாவது பிரச்சினை காரணமாக மர்மநபர்கள் வினோதினியை தீ வைத்து எரித்து கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்  பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.

    சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்  சென்று விசாரணை  நடத்தினார். பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      
    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நாடே திரும்பி பார்க்கிறது என்று விராலிமலை பிரசாரத்தில் சரத்குமார் பேசினார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் இன்று காலை விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். 110–வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.

    சொல்லாத திட்டங்களான அம்மா குடிநீர், மருந்தகம், குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் பல கூட்டணி கட்சிகள் இருந்தாலும் தமிழகத்தை ஆளக்கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா மட்டும் தான். விஜயகாந்த் பேசுவது அவருக்கே புரியவில்லை. மக்களுக்கு எப்படி புரியும். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

    நேற்று ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு..க. தேர்தல் அறிக்கையை நாடே திரும்பி பார்க்கிறது. மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18ஆயிரமாக உயர்வு, அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரிப்பு, பணியிடங்களுக்கு செல்லும் மகளிர் ஸ்கூட்டர் வாங்க மானியம் என எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட காக்கநாயக்கன்பட்டி, மலைக்குடிப்பட்டி, இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். முன்னதாக விராலிமலை வந்த சரத்குமாருக்கு அ.தி. மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அல்லி தர்பார் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என திருமயம் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ப.சிதம்பரம் பேசினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு திருமயம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

    தி.மு.க–காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒற்றுமையாக உள்ளது. இதனால் தான் இந்த கூட்டணி உருவானது. ஆனால் தேர்தல் நடக்கப் போகும் நிலையில் கூட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை.

    தமிழ்நாட்டின் மண்ணை மதிப்பதில்லை என்று சபதம் செய்து விட்டார் ஜெயலலிதா. 1991, 2001, 2011 ஆகிய 3 முறை ஜெயலலிதா அரசை பார்த்தாச்சு. அதனால் இந்த அல்லி தர்பார் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    மதுவிலக்கை அ.தி.மு.க. ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? என்று தெரியவில்லை. தமிழகம் அனைத்து துறையிலும் பின்னோக்கி செல்கின்றது. தமிழக சட்டசபை ஜெயலலிதாவின் துதிபாடும் பஜனை மடமாகத்தான் உள்ளது. 110–வது விதி படித்து விட்டு செல்வதுதான் ஜெயலலிதாவின் ஜனநாயகமா?

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் கருணாநிதி முதல்வர் ஆனதும் கண்டிப்பாக நிறைவேற்றுவார். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் உயர தி.மு.க. விற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நார்த்தாமலை அருகே விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நார்த்தாமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள ராஜாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரையா. இவரது மகன் சுரேஷ் (வயது 24). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் அவருக்கு வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேஷ் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி சுரேஷ்க்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதில் மேலும் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டினுள் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக  புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி  கெங்கையம்மாள். இவர் கறம்பக்குடி யூனியன் சேர்மனாக உள்ளார். கறம்பக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்த  சொக்கலிங்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சொக்கலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு ரம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு அவர், அவரது மனைவி கெங்கையம்மாள் மற்றும்  உறவினர் முள்ளிக்காப்பட்டியை சேர்ந்த விஜய் (32) ஆகியோருடன் புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு காரில் சென்றார்.

    சம்பட்டிவிடுதி நால்ரோடு அருகே செல்லும் போது, திடீரென 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், சொக்கலிங்கம் காரை வழிமறித்து கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. மேலும் சொக்கலிங்கம், அவரது மனைவி  கெங்கையம்மாள், விஜய் ஆகியோரையும் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனராம். இதில் காயமடைந்த 3 பேரும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே சொக்க லிங்கம் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்றிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை முள்ளிக்காப்பட்டி, அம்புகோவில்,  வேலாடிப்பட்டி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகளில் சொக்கலிங்கத்தின்  ஆதரவாளர்கள் மரங்களை சாலையில் வெட்டி போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சம்பவ இடத்திற்கு அறந் தாங்கி போலீஸ் டி.எஸ்.பி. செல்லபாண்டியன், கந்தர்வக்கோட்டை தாசில்தார் சாலை தவவளன், கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தை கைவிடவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக சொக்கலிங்கம், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. சந்தோஷிடம் புகார் செய்தார். அதில் அ.தி.மு.க.வினர் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ   இடத்திற்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. அருண் சென்று விசாரணை நடத்தினார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    புதுச்சேரியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் ரெங்கசாமி புறப்பட்டு சென்றார்.

    புதுக்கோட்டை:

    புதுச்சேரி மாநில முதல்– அமைச்சர் ரெங்கசாமி புதுக்கோட்டை வந்தார். அங்குள்ள பிரசித்தி பெற்ற புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–

    புதுச்சேரியில் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

    தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளிக்கிறதே, அதே போன்று புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் முதல்வர் ரெங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ×