என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ராயவரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 9-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 6-ம்நாள் திருவிழாவில் பனை ஓலை சப்பரத்தில் முத்துமாரியம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பச்சைப்பட்டு உடுத்தி காளை வாகனத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள்மேளம், தாளம், முழங்க வாணவேடிக்கையுடன் நடந்த வீதி உலா, வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று அம்மனை வழிபட்டனர். இதில் அரிமளம், ராயவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அரிமளம் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. முதலில் முத்துமாரியம்மனை தேரில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடக்கிறது. இதற்கான முன்னேற்படாக தேரோடும் வீதிகளில் சாலைகளை சீரமைப்பு, மின்கம்பிகள் தாழ்வாக இருப்பதை உயர்த்தி கட்டுதல் போன்ற பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அங்காங்கே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீர்மோர், சர்பத் போன்றவை வழங்க பந்தல் அமைத்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேரோட்டத்தில் அரிமளம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பெரியார் நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இரவு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சேகரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர். தொடர்ந்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக அவர் வைத்திருந்த ரூ.12 ஆயிரத்து 500–ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சேகரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள பிச்சந்தான்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நேற்று காலையில் பறக்கும் படை அதிகாரி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் பிச்சந்தான்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், அங்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர் தப்பி சென்று விட்டதாகவும், அவர் தப்பி செல்லும் போது மொபட்டை விட்டு விட்டு சென்றதாகவும் கூறினார்கள். இதைதொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் மொபட்டை பறிமுதல் செய்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலுப்பூர் அருகே குன்னத்தூர் கிராமத்தில் 4 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பறக்கும் படை அதிகாரிகளை பார்த்ததும், கையில் வைத்திருந்த ரூ.44,800–ஐயும், வாக்காளர் பெயர் பட்டியலையும் போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து அந்த பணத்தையும், வாக்காளர் பட்டியலையும் அதிகாரிகள் கைப்பற்றி மாத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. தேர்தல் பிரசார மாநாடு பெரும் வெற்றி பெற்றதற்கு மக்கள் மாற்றத்தை விரும்புவதே காரணம். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை சாராத மாணவர்கள், இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
1971-ல் இருந்து தேர்தல் பணியாற்றி வரும் நான் இந்த தேர்தலில்தான் மக்களிடையே புதிய அணுகுமுறையை பார்க்கிறேன். களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் இருக்கின்ற போதிலும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் நலக்கூட்டணியை விரும்புகின்றனர்.
பேரவை தேர்தலில் தமிழக மக்கள் விரும்பும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா. கா. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தொங்கு சட்டப்பேரவை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தேர்தல் ஆணையர் சகாயம் போல் நேர்மையானவர் என்பதால் 100 சதவிகித வாக்குப்பதிவு வாக்குகளை விற்கக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருவது வரவேற்கத்தக்கது
பணப்புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் கரூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறிமுதல் செய்த தொகை எவ்வளவு என்பதில் மர்மம் நீடிக்கிறது. ஒட்டன்சத்திரம் தி.மு.க. வேட்பாளர் பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டும் அவரை கைது செய்யவில்லை.
தாங்கள் செய்துள்ள சாதனைகள் மீதும், திட்டங்கள் மீதும் நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் பணத்தை மட்டும் நம்பி ஜனநாயக சீர்குலைவை தி.மு.க. அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாங்கள் கண்காணிப்பு குழு அமைத்திருக்கிறோம். எனினும் பணம் கொடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. பணம் கொடுத்து தான் வாக்குகளை பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ள அரசியல் கட்சிகள் வெட்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணியின் வேட்பாளரைஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆவுடையார்கோவில் கடை வீதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நல்ல கட்சி, நல்ல கூட்டணி தே.மு.தி.க.,மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா.கூட்டணி. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அரசியலில் ஊழலற்ற, நேர்மையான இளைய தலைவர்களை எதிர் பார்க்கின்றனர். அவர்கள் இந்த கூட்டணியில்தான் இருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் தே.மு.தி.க. மக்கள்நலக் கூட்டணி, த.மா.கா. கூட்டணி ஆட்சி மலரும் என்பதில் ஐயமில்லை. இந்த சூழலை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டுள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களை குழப்ப நினைக்கின்றனர்.
கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்துகின்றனர். கருத்து கணிப்பு என்பது இறுதியில் மக்கள்கணிப்பாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கருத்துக்கணிப்பு.
தமிழகத்திலேயே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்லாட்சி நடைபெற உள்ளது. விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தமிழகத்தில் சாம் ராஜ்யங்களுக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த கூட்டணியால் அ.தி.மு.க. தி.மு.க.வை வீழ்த்த முடியா விட்டால், இனி ஆண்டவனே வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது.
தமிழகத்தில் மது விற்பனையைகொண்டு வந்த தி.மு.க.வும், மது விற்பனையை பிரபலப்படுத்திய அ.தி.மு.க. வும் மதுவிலக்கை கொண்டு வரமுடியாது. ஆனால் மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே மதுவிலக்கை கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் கார்த்திக்கேயன் போட்டியிடுகிறார். நேற்று இவர் திருச்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. , மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. வெற்றி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலை 6மணிக்கு விராலிமலையில் இருந்து திருச்சிக்கு காரில் புறப்பட்டார். காரை தேராவூரை சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார்.
திருச்சி - மதுரை 4 வழிச்சாலையில் தனியார் கம்பெனி அருகே செல்லும் போது திடீரென ராஜேந்திரன் ஷடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார். அப்போது பின்னால் குற்றாலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் காரின் பின்புறம் மோதியது. இதில் காரின் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் வேட்பாளர் கார்த்திக்கேயன், டிரைவர் ராஜேந்திரன் மற்றும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேனில் இருந்தவர்களும் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையத்தில் பேரூராட்சி கட்டண கழிப்பறையை நடத்தி வருபவர் செல்வம். இவரிடம் மில்லத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 50) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வரும் களமாவூரை சேர்ந்த கருப்பையா மனைவி சின்னத்தாள், செல்வத்திடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதற்காக தினமும் 100 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். அந்த பணத்தை கருப்பையா வசூலிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சின்னத்தாள் பணம் கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா சின்னத்தாளை திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னத்தாள் தனது மகன் ரஞ்சித்திடம்(17) கூறினார். ஆத்திரமடைந்த ரஞ்சித், கருப்பையாவிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ரஞ்சித் கருப்பையாவை சரமாரி தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பொதுமக்கள்மீட்டு திருச்சி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.
விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் விஜயபாஸ்கர், விராலிமலை சட்டமன்ற தொகுதி, அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட முக்கணாமலைப்பட்டி, புதூர், இராப்பூசல், வெள்ளாஞ்சார், வீரப்பட்டி, இருந்திரப்பட்டி, புங்கினிப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது மழை குறுக்கிட்டது. மழையினை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 5 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய விஜயபாஸ்கர் முக்கணாமலைப்பட்டி, இராப்பூசல் ஆகிய பகுதிகளில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.320 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கி பணிகள் முடிவுற்றுள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தினை துவக்கி வைக்க எனக்கொரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
இத்திட்டத்தினை கொண்டு வந்தது புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். மீண்டும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
வாக்கு சேகரிப்பின்போது அ.இ.அ.தி.மு.க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடர்பான குறுஞ்செய்தி அனுப்புவது குறித்து அனைத்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேசிய தகவலியல் மையம் சார்பில் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி இந்த பயிற்சி வகுப்பில் மே-16 அன்று தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு மையங்களில் காலை 7- மணி முதல் மாலை 6-மணி வரை நடைபெறும் அனைத்து தேர்தல் தொடர்பான நிகழ்வுகளும் உடனுக்குடன் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான பயிற்சி வகுப்புகள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அளிக்கப்பட்டது.
இதில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றடைந்த தகவல், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்ற தகவல், வாக்குப்பதிவு தொடங்கிய தகவல், வாக்குப்பதிவின் நிலவரம், வாக்குப்பதிவு முடிவுற்ற தகவல், தேர்தலில் பதிவான ஆண், பெண் வாக்காளர்களின் நிலவரம் போன்ற பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரியப்படுத்தும் வகையில் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த மண்டல அலுவலர்கள் தங்களது மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு தொடர்பான குறுஞ்செய்தி அனுப்புவது குறித்தும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தகவலியல் அலுவலர் மு.தமிழ்ச்செல்வன், கூடுதல் மாவட்ட தகவலியல் அலுவலர் ச.விக்டர், உதவி ஆணையர் (கலால்) திரு.பாலாஜி, தனித்துணை ஆட்சியர் பஞ்சவர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கிய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கீரனூர் உள்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் மழை பெய்தது.
மழையின் காரணமாக திருவரங்குளம் பூவரசகுடி பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி ரவி என்பவர் வீட்டில் திடீரென இடி விழுந்ததில் வீட்டின் ஓடுகள் பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ரவியின் மனைவி அஞ்சலை, மகனுக்கு காயம் ஏற்பட்டது.
மேலும் அருகில் உள்ள அழகர் என்பவரின் வீட்டில் இருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி.க்கள் அனைத்தும் சேதமடைந்தன.
திருச்சி மாநகரில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் மாநகரின் பல இடங்களில் மின்னலுடன் பலத்த காற்று வீச தொடங்கியது. இரவு 9 மணிக்கு மேல் மாநகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. அரியமங்கலம், காட்டூர், பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், மத்திய பேருந்து நிலையம், பொன்மலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.






