என் மலர்
செய்திகள்

மதுக்கடைகளை மூடவேண்டுமானால் அ.தி.மு.க-தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது: வைகோ ஆவேச பேச்சு
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களிடம்தான் மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. எனவே தமிழகத்தை சீரழித்துள்ள மதுக்கடைகளை மூடவேண்டுமானால் விஷச் சக்கரமாக சுழன்று வரும் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.
அவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். 3–வது அணி ஆட்சி அமைத்தால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி, கந்து வட்டி, தனியார் நிறுவனம் என எந்த வகையில் விவசாயிகள் கடன் வாங்கியிருந்தாலும் அந்த கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை கூட மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு நிபந்தனைகளை கடுமையாக்கிய மத்திய அரசு, இறக்குமதியை தாராளமாக அனுமதித்ததால் உள்ளூர் விவசாயிகள் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீத்தேன், ஷேல் காஸ் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதாக யாரேனும் வந்தால், அவர்களை தடுக்க முதல் ஆளாக நான் சம்மட்டியோடு களத்தில் நிற்பேன்.
6 கட்சிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியை ஆதரிக்காமல் மீண்டும் இரு ஊழல் கட்சிகளை மக்கள் ஆதரிப்பதாக இருந்தால், இனிமேல் ஒரு போதும் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.
அப்படியொரு நிலை ஏற்பட்டாலும் எங்கள் கூட்டணியின் சுயமரியாதையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






