என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நாடே திரும்பி பார்க்கிறது: சரத்குமார் பேச்சு
    X

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நாடே திரும்பி பார்க்கிறது: சரத்குமார் பேச்சு

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நாடே திரும்பி பார்க்கிறது என்று விராலிமலை பிரசாரத்தில் சரத்குமார் பேசினார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் இன்று காலை விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். 110–வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.

    சொல்லாத திட்டங்களான அம்மா குடிநீர், மருந்தகம், குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் பல கூட்டணி கட்சிகள் இருந்தாலும் தமிழகத்தை ஆளக்கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா மட்டும் தான். விஜயகாந்த் பேசுவது அவருக்கே புரியவில்லை. மக்களுக்கு எப்படி புரியும். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

    நேற்று ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு..க. தேர்தல் அறிக்கையை நாடே திரும்பி பார்க்கிறது. மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18ஆயிரமாக உயர்வு, அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரிப்பு, பணியிடங்களுக்கு செல்லும் மகளிர் ஸ்கூட்டர் வாங்க மானியம் என எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட காக்கநாயக்கன்பட்டி, மலைக்குடிப்பட்டி, இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். முன்னதாக விராலிமலை வந்த சரத்குமாருக்கு அ.தி. மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×