என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர்-மனைவி மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல்
    X

    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர்-மனைவி மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல்

    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி  கெங்கையம்மாள். இவர் கறம்பக்குடி யூனியன் சேர்மனாக உள்ளார். கறம்பக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்த  சொக்கலிங்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சொக்கலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு ரம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு அவர், அவரது மனைவி கெங்கையம்மாள் மற்றும்  உறவினர் முள்ளிக்காப்பட்டியை சேர்ந்த விஜய் (32) ஆகியோருடன் புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு காரில் சென்றார்.

    சம்பட்டிவிடுதி நால்ரோடு அருகே செல்லும் போது, திடீரென 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், சொக்கலிங்கம் காரை வழிமறித்து கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. மேலும் சொக்கலிங்கம், அவரது மனைவி  கெங்கையம்மாள், விஜய் ஆகியோரையும் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனராம். இதில் காயமடைந்த 3 பேரும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே சொக்க லிங்கம் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்றிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை முள்ளிக்காப்பட்டி, அம்புகோவில்,  வேலாடிப்பட்டி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகளில் சொக்கலிங்கத்தின்  ஆதரவாளர்கள் மரங்களை சாலையில் வெட்டி போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சம்பவ இடத்திற்கு அறந் தாங்கி போலீஸ் டி.எஸ்.பி. செல்லபாண்டியன், கந்தர்வக்கோட்டை தாசில்தார் சாலை தவவளன், கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தை கைவிடவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக சொக்கலிங்கம், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. சந்தோஷிடம் புகார் செய்தார். அதில் அ.தி.மு.க.வினர் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ   இடத்திற்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. அருண் சென்று விசாரணை நடத்தினார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×