என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கீரனூர் அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம் பெண் தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கீரனூர்:

    அண்டக்குளம் அருகேயுள்ள வைத்திக்கோவிலை சேர்ந்தவர் சண்முகம், இவரது மகள் ரேவதி (வயது 21), புதுகை அரசு கல்லூரியல் பி.ஏ படித்துள்ளார்.

    இந்நிலையில் ரேவதி வீட்டில் எப்போழுதும் செல்போனில் அடிக்கடி தனியாக பேசிகொண்டிருப்பதை இவரது தந்தை சண்முகம், ரேவதியை கண்டித்திருக்கிறார். இதனால் மனவேதனை அடைந்த ரேவதி புதன் கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ உடல் மீது பரவலாக பிடித்து எரிந்தது இதன் வேட்கை தாங்காமல் அலறி துடித்துள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பிரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து உடையார்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் உடலை மீட்டு புதுகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்பு சம்பவம் குறித்து வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
    அறந்தாங்கி:

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த திங் கட்கிழமைதான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற முதல்நாளே ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை அத்துமீறி சிறைபிடித்துச் சென்றது.

    இதுதொடர்பாக ராமேசுவரத்தில் நேற்று நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி வருகிற 24-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தடைகாலத்திற்கு பிறகு 2-வது முறையாக கடலுக்கு சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 293 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 211 விசைப்படகுகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    இவர்களில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தியாகு (வயது 42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற தியாகு, மணி (27), பாலா (27), சந்திரன் (47) ஆகியோர் நெடுந்தீவு அருகே இந்திய கடற்பகுதியில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு சென்றிருப்பதால் அதிகப்படியான மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வலைகளை விரித்து காத்திருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் தியாகுவின் விசைப்படகை சுற்றி வளைத்து, அந்த படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் சிறை பிடித்தனர். பின்னர் 4 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அப்போதுதான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்று தெரிய வரும்.

    இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே 45 நாட்கள் வேலையிழந்து சிரமப்பட்டு மீண்டும் தொழிலுக்கு சென்ற மீனவர்களை அச்சப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதால், மீனவர்கள் தொழிலுக்கு செல்லவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிற்படுத்தப்பட்டோர்-சீர் மரபினர் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தொழில் கடன்களை வழங்கி வருகிறது.

    அதன்படி கடன் பெற விரும்புவோர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப் புறமாயின் ரூ. 98,000 மற்றும் நகர் புறமாயின் ரூ. 1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும், 60 வயதுக்கு மேற்படாத வராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் வணிகம் செய்வதற்கு ஒரு பயனாளிக்கு அதிகப்பட்சம் ரூ.10,00,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 6சதவீதம் முதல் 8சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

    இத்திட்டம் பெண்களின் சுயசார்பு நிலையினை வலியுறுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு ஒரு பயனாளிக்கு அதிகப்பட்சம் ரூ.1,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடனுக்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

    தொழில் முனையும் பெண்களுக்கு சிறுகடன் வழங்கும் நோக்குடன் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

    இத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சிறு தொழில் வணிகம் செய்வதற்கு சிறுகடன் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ.50,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடனுக்கு 4 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தனியாக அல்லது குழுக்களாக சிறு தொழில் வணிகம் செய்வதற்கு சிறுகடன் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.50000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

    கார், வேன் மற்றும் மினிவேன், டிராக்டர் , டிரெய்லர் (விவசாய தொழிலுக்கு) போன்ற போக்குவரத்து இனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3.13 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 10சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகையை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

    தனிநபர் கடன் அதிக பட்சமாக ரூ.10,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ரூ.1,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.கறவைமாடுகள் வாங்க ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.வாகனங்கள் வாங்கிட ரூ.3,13,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.சுயஉதவி குழுவிற்கு ஒரு நபருக்கு ரூ.50,000 என அதிக பட்சமாக ரூ.10,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    தனிநபர் கடனுக்கு ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.மகளிருக்கான புதிய பொற்கால திட்டத்திற்கு ஆண்டிற்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுவிற்கு ஆண்டிற்கு 4சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆடவர் சுயஉதவி குழு விற்கு ஆண்டிற்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கறவை மாடுகள் கடனுக்கு ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. வாகன கடனுக்கு ஆண் டிற்கு 106 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.

    தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கழகம் (ஆவின்) ஆகியவற்றின் மூலம் கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி கடன் பெற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த வர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இன்று முதல் விண்ணப்பம் பெற்று 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அய்யம்பேட்டையில் ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அய்யம்பேட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணா பட்டினத்தைச் சேர்ந்த அனீபா மகன் இக்பால் (வயது 50). இவர் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த ஓட்டலுக்கு சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்திக் (வயது 28) என்பவர் சாப்பிட வந்துள்ளார்.

    சாப்பிட்ட பில்லுக்கு பணம் கேட்டபோது பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். கத்தியை காட்டி ஓட்டல் உரிமையாளர் இக்பாலை கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு கல்லாவில் இருந்த ரூ.100 பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்த சேர்களையும் உடைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    இதுகுறித்து இக்பால் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

    வயலோகம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தைச்சார்ந்த வயலோகத்தில் மிகவும்பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடை பெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்குரிய திருவிழா கடந்த 22–ந்தேதி அன்று இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

    காப்பு கட்டிய நாட்கள்முதல் தினசரி காலை மாலை என இரு வேளைகளிலும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பக்தர்கள் பால் கு டம் , காவடி , அலகு குத்தியும், கோழி, கிடா பலியிட்டும், பொங்கல் வைத்தும், குழந்தைகளுக்கு கரும்பு தொட்டில் கட்டியும்,  அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். 30–ந்தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

    விழாவினை முன்னிட்டு மாலை 4 மணியளவில் முக்கிய பிரமுகர்கள், கோவில்நிர்வாகிகள்,பொதுமக்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அம்மன் தனது பரிவார தெய்வங்களுடன் அமர்ந்த தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 6.15 மணியளவில் மீண்டும் நிலைக்கு வந்தடைந்து. விழாவினை முன்னிட்டு மதியம் அன்னதான விழா மற்றும் இரவு கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கோவில் நிர்வாகிகள் ,மண்ட கபடிதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது:–

    பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஒவ் வொரு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல் கோரி 26 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 09 மனுக்களும் காவல்துறை நடவடிக்கைக்காக 19 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 09 மனுக்களும், பசுமை வீடு கோரி 25 மனுக்களும், கல்வி உதவித்தொகை கோரி 2 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 50 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 15 மனுக்களும், இதர கோரிக்கைக்காக 86 மனுக்களும் என மொத்தம் 241 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 11 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.26150 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 3 சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது. மேலும் டெல்லி நகராட்சி கூட்டரங்கில் 19.04.2016 அன்று நடைபெற்ற 125–வது அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பரம்பூர் கிராமத்தை சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் சுப்பிரமணியன் என்பவர் தேசிய அளவில் சிறந்த விவசாய சங்கத்திற்கான விருதினை பெற்றதையொட்டி அவருக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதே போன்று அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த ராஜாப்பட்டி மைன் பள்ளியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்துபுதுக் கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    அறந்தாங்கி:

    தமிழகத்தில் உள்ள கடற் பகுதிகளில் மீன்கள்இனப் பெருக்கத்திற்காகஆண்டு தோறும் ஏப்ரல்15-ந்தேதி முதல் மே30-ந் தேதி வரை கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த பலஆண்டுகளாக நடை முறையில் உள்ள இந்த தடைக் காலம் இந்த ஆண்டும் நடை முறைப்படுத்தப்பட்டது.

    அதன்படி கடந்த 45 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறை வடைந்ததை அடுத்து இன்று காலை மீனவர்கள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து 285 விசைப்படகு கள், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 230 விசைப்படகு களில்சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    45 நாள் தடைக்காலம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை சார்ந்த உப தொழிலான ஐஸ் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றதையடுத்து ஐஸ் உற்பத்தி தொடங்கி உள்ளது.

    மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி மீன்பிடித்தளம் களை கட்ட தொடங்கியுள்ளது.
    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் அறந்தாங்கி அன்னை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    அறந்தாங்கி:

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் படித்து தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.

    தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் பூர்ணசங்கரி என்ற மாணவி 500க்கு 489 மதிபெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். அவர் பாடவாரியாக பெற்ற மதிபெண்கள் விபரம்: –

    தமிழ்–96, ஆங்கிலம்–95, கணக்கு–100, அறிவியல்–98, சமூகஅறிவியல்–100. மாணவி பிரியதர்ஷினி 500க்கு 485 மதிபெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். அவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் விபரம்:–

    தமிழ்–96, ஆங்கிலம்–95, கணக்கு–95, அறிவியல்–99, சமூக அறிவியல்–100

    மாணவிகள் சினேகா, வினோதினி, அபிராமி ஆகியோர் 500க்கு 483 மதிபெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றனர். மாணவ, மாணவிகளின் தேர்ச்சிக்காக உழைத்த ஆசிரியர்களையும், பள்ளியின் தாளாளர் நாகராஜன், முதல்வர்கள் யோகாராஜா, அனுசுயா உள்ளிட்டோர் பாராட்டினர்.

    புதுக்கோட்டை அருகே தேர்தல் தகராறில் 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டி பட்டி ஊராட்சித் தலைவர் சொக்கலிங்கம். அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரான இவர் அக்கட்சியில், இருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.

    இதையடுத்து நடைபெற்ற 2016 சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் சொக்கலிங்கம் சுயேச்சையாக போட்டியிட்டு 22ஆயிரத்து 973 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இவர் போட்டியிட்டதனால் தான் அ.தி.மு.க.வெற்றி வாய்ப்பை இழந்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த ராமசுப்பிரமணியன் தரப்புக்கும், சொக்கலிங்கம் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. இது குறித்து மழையூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து ராமசுப்பிரமணியன் தரப்பில் 40 பேர் மீதும், சொக்கலிங்கம் தரப்பில் 40 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    புதுக்கோட்டையில் பாலியல் புகாரில் கைதான சரத்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓட்டம். இதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீஸ்காரர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2015-ல் இவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சரத்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறந்தாங்கி போலீசாருக்கு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்பேரில் அறந்தாங்கி போலீசார் சரத்குமாரை கைது செய்து, மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸ்காரர்கள் செந்தில்குமார், அன்பரசி ஆகியோர் அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் பரிசோதனை அறைக்கு சென்ற சரத்குமார், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. பின்னர் அறைக்குள் சென்று பார்த்த போது, அவர் தப்பியோடியது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சரத்குமாரை தேடி வருகின்றனர். இதனிடையே கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீஸ்காரர்கள் செந்தில்குமார், அன்பரசி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சந்தோஷ்ஹதிமனி உத்தரவிட்டார்.
    புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். அரசு இசைப்பள்ளியில் நிகழ்வாண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

    அதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7 ஆம் வகுப்பு தேர்ச்சியும், நாதசுரம், தவில், தேவாரம், ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும். 12 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சிக்காலம் 3 ஆண்டுகள். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை. பயிற்சி கட்டணம் ரூ.152.

    அரசுச் சான்றிதழ் படிப்பான இப்பயிற்சியில் அரசுத்துறையில் வேலைவாய்ப்புகளும், மற்றும் இலவசப் பேருந்நு சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித்தொகை அரசு விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும். மேலும், மாணவர்களுக்கு சீருடை, காலணி, மிதிவண்டி, அரசுவிதிகளின்படி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும்.

    எனவே, ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, கதவு எண்:1883, திலகர்திடல், புதுக்கோட்டை என்ற முகவரியில் பள்ளித் தலைமையாசிரியரை நேரில் அணுகவும். மேலும் விவரங்களுக்கு 04322–225575, 9442573345 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,63,863 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டடுள்ளது என்று அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் கிராமத்தில் வனத்துறையின் மூலம் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளின் நாற்றாங் கால் பராமரித்து வரும் பணியினை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:–

    தமிழ்நாடு முதலமைச்சரின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம் மாவட்டந்தோறும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டுள்ளார்கள்.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயத்தில் 34165 மரக்கன்றுகளும், புதுக்கோட்டையில் 79149 மரக்கன்றுகளும், கீரனூரில் 34164 மரக்கன்றுகளும், பொன்னமராவதியில் 56420 மரக்கன்றுகளும் மற்றும் அறந்தாங்கியில் 34165 மரக்கன்றுகளும் என 5 வனச்சரகங்கள் மூலம் 238063 மரக்கன்றுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடவு செய்யவும், 25800 மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்யவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் இந்த ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 263863 மரக்கன்றுகள் நடபடவுள்ளது.

    மேலும், திருமயம் வனசரகம் சார்பில் நாவல், நீர்மருது, மகாகனி, இலுப்பை, சிசு, புளியன், ஈட்டி, வேங்கை, வேம்பு, புங்கன், சிவப்புசந்தனம், தேக்கு, மகிலம், தூங்கவாகை மற்றும் தான்றி உள்ளிட்ட 39325 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறையின் சார்பில் 5160 மரக்கன்றுகளும் மீதமுள்ள 34165 மரக்கன்றுகளை திருமயம் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் நடுவதற்கு பகிர்ந்தளிக்கபடவுள்ளது.

    மேலும் மரக்கன்றின் நாற்றாங்கால்களை முறையாக பராமரிக்கவும், புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் புதிய மரங்களை நட்டு வைத்து காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தி தமிழகம் அதிக மழை பொழிவை பெற்று பசுமையான தமிழகத்தை உருவாக்கவும் முடியும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் தங்கராசு, திட்ட இயக்குநர்( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சந்தோஷ்குமார், வனசரக அலுவலர்குமார், வனவர் பூமலை, கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×