என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில், ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
    25 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்திற்கு மண் எண்ணெய் எடுப்பதற்காக தான் வந்ததாக கூறினார்கள். ஆனால் இப்படி எங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடத்தான் வந்துள்ளார்கள் என்பது தெரியாமல் போய்விட்டதே...

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுபுற கிராம விவசாயிகள் தான் இப்படி புலம்பி கண்ணீர் வடிக்கிறார்கள்.

    நெடுவாசல் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலும், தஞ்சை மாவட்ட எல்லையிலும் ஒட்டி அமைந்துள்ளது. இதன் தலைக்கட்டு கிராமங்கள் 3000 உள்ளன. ஆவணம், கலத்தூர், மஞ்சு விடுதி, வாண்டார் விடுதி, கருக்காக்குறிச்சி என பல கிராமங்கள் உள்ளன.

    சுமார் 500 வருடங்களுக்கும் மேலாக, விவசாயம் நடந்து வருகிறது. முதலில் நெடுவாசல் சுற்று வட்டார நிலம் வானம் பார்த்த பூமியாக இருந்துள்ளது. இப்போதைய தலைமுறையின் மூதாதையர்கள், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை என பயிர் செய்துள்ளனர்.

    அதன் பிறகு வந்த தலைமுறையினர் தரிசாய் கிடந்த நிலத்தை தோண்டி கிணறு ஏற்படுத்தி விவசாயம் செய்தனர். முதலில் 100 அடி, பிறகு 300 அடி, அதன் பிறகு நீர் முழ்கி மோட்டார் வந்த பிறகு 500 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.

    நெல், வாழை, கடலை, மா, பலா, வாழை என அனைத்து வகையான விவசாயமும், நவ தானியங்களும் விளைவித்து தருகிறார்கள். இப்போது இவர்கள் நிலத்தில் தான், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி கொடுத்துள்ளது.

    புள்ளவாடி, நெடுங்கா குறிச்சி என பல பகுதிகளில், ஆய்வு செய்து நெடுவாசல் கிழக்கு என்னும் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் மையத்தை அமைக்கும் போதுதான் அவர்கள் எடுக்கப்போவது மண்எண்ணெய் இல்லை தங்கள் பகுதியையே காலி செய்யும் இயற்கை எரிவாயு எனும் விபரீதம் என புரிந்தது. அதனால் தான் நெடுவாசலில் போராட்டம் வெடித்துள்ளது.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் காளைகளை மாடுகளை மீட்டோம். இப்போது விவசாய நிலத்தை மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இருந்து மீட்டு, மாடுகளை வைத்து விவசாயம் தொடர்வோம் என்று குடும்பம் குடும்பமாக போராட்ட களத்தில் குதித்து விட்டார்கள். வாடிவாசலை மீட்டோம், நெடுவாசலையும் மீட்போம் என்ற குரல் அங்கு எதிரொலிக்கிறது.

    85 வயதான சக்கரத்தேவர் என்ற விவசாயி, 1950-1960ம் வருடங்களில், வீட்டில், காலையில் கம்பங்கூழ், கேப்பைக்கூழ், குடித்தும், மதியம் கஞ்சி குடித்தும், கிணறுகளில், மாடுகளை பூட்டி, ஏற்றம் இறைத்து விவசாயம் செய்ததை நினைத்து பூரிக்கிறார்.

    85 வயதிலும், தெளிவான கண் பார்வை உடல் வலிமையோடும் உள்ளேன். இப்போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ரியல் எஸ்டேட் என விவசாய நிலத்தையும், விவசாயத்தையும் ஒழித்து, மனித குலத்தையும் சீரழித்து, 20, 30 வயதிலேயே, உடல் நலம் கெட்டு, நோயால், சீரழிக்க வைக்கிறார்கள் என வேதனைப்படுகிறார்.

    நெடுவாசலை சேர்ந்த 75 வயது திருப்பதி கூறும்போது, தனது தந்தை நாடதேவர், அப்பச்சி பஞ்சாத்தால், முப்பாட்டன் ஆயத்தேவர் என மூன்று தலை முறைகளாக விவசாயம் செய்த பூமி இன்று ஹைட்ரோ கார்பனுக்காக சிதைக்கப்படுவதாக கூறி கலங்குகிறார்.

    ஹைட்ரோ கார்பனுக்கு ஆயிரம் அடி வரை ஆழ்துளையிட்டு பணிசெய்யும் போது, வாயு மற்றும் கழிவுகளால் மண்புழுக்கள் அழிந்து, வாயுவால், மண் தன்மை கெட்டு, விவசாயிகள், விவசாய நிலத்தில் அமைத்துள்ள ஆயிரக்கணக்கான போர் வெல்களில், ஹைட்ரோ கார்பன் கழிவும் கலந்துவிடும் என அச்சத்தில் உள்ளனர்.

    பல வருடங்களுக்கு விவசாயத்துக்காக பல இடங்களில் தோண்டிய கிணறுகளில், ஏற்றம் இறைத்தபோது தவறி கிணற்றில் விழுந்து, இறந்த விவசாயிகள், எண்ணிக்கை ஏராளம் என விவசாயம் வளர்க்க பலர் உயிர்களையே இழந்த சோகத்தை கூறி கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கப்பட்டால், சுற்று வட்டார பகுதியில், காற்றோடு அவற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்கு உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் ஏற்படும் என்ற அபாயத்தையும் உணர்ந்திருக்கிறார்கள்.

    போராட்ட களத்தில், பங்கேற்ற டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், தனது கிராமமான சித்தூரும் இதனால் பாதிக்கப்படும் அபாயத்தை குறிப்பிட்டார். அரசு புதிய திட்டங்களை கொண்டு வருவது நல்லது தான், ஆனால், ஒருவரது வீட்டின் அடுப்பறைக்குள் குழாயை பதிக்க நினைப்பவர்கள், அவர்களின் அனுமதியை பெற மறுப்பதும், அதை தட்டிக் கேட்க்கும் உரிமையை பறிக்க முயற்சிப்பதும் தவறு என்கிறார்.

    வாழ்க்கை போராட்டம் உள்ளதுதான். ஆனால், தமிழனுக்கு தான் வாழ்கையே போராட்டமாக உள்ளது என வேதனைப்படுகிறார்கள். கூடங்குளம், ஜல்லிக்கட்டு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என தமிழர்களின் போராட்டம் தொடர்கிறது.

    ஆனால் தமிழனின் உரிமையை பறிக்கும் போராட்டம் அனைத்தும் வெற்றியில்தான் முடிந்துள்ளது. விவசாய நிலம், விவசாயிகளின் உயிர். ஹைட்ரோ கார்பனுக்காக அவர்களின் நிலத்தை அழிப்பது அவர்களின் உயிர்களை அழிப்பதற்கு சமமானது.

    500 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தை தொடங்கி வானம் பார்த்த பூமியாக கிடந்த, மேட்டு நிலத்தை சமப்படுத்தி, கேணி வெட்டி, உடல் உழைப்பால் விவசாயம் வளர்த்து உணவு உற்பத்தியில் கை கொடுத்த விவசாய தோழனுக்கு நீங்கள் கை கொடுக்க வேண்டாம்.

    அவர்கள் நிலத்தை பறித்து ‘கை’ எடுக்காமல் இருந்தால் போதும். விவசாயத்தை காத்த நெடுவாசலின் நெடிய பச்சை வயல் பயணத்தை ஹைட்ரோ கார்பன் வாயுவால், கரியாக்க வேண்டாம் என்றார்கள், அப்பகுதி பொதுமக்கள்.

    போராட்ட களத்தில் ஏராளமான பெண்கள் தங்கள், கைக்குழந்தைகளுடன் பங்கேற்கிறார்கள். 90 வயது தாத்தாக்களும், பேரன்களுடன் பங்கேற்கிறார்கள்.

    தங்கள் பேரன்கள், கொள்ளுப்பேரன்களின் எதிர்காலத்திற்காக நிலத்தை மீட்டு எடுக்க போராடுகிறார்கள்.

    ஏனென்றால் இன்று பெற்ற தாயின் மடியில், தவமும் இந்த குழந்தைகள்தானே, நாளை, இந்த பூமியின் நிலத்தை உழுது பயிர் செய்து தானியத்தை உற்பத்தி செய்ய போகிறார்கள். அத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்கும் உதவ இருக்கிறார்கள்.

    அதை நிரூபிப்பது போல ஒரு தாயின் மடியில், தவழ்ந்த ஒரு குழந்தை அப்படியே தவழ்ந்து தாய் மடியை விட்டு இறங்கி தரையில் தன் கைகளை ஊன்றி பிஞ்சு கைகளில் மண்ணை அள்ளுகிறது.

    அது, நானும் என் சொந்த மண்ணை இழக்க மாட்டேன் என்பதை உணர்த்துவது போல் அமைந்தது.
    மெரீனா போராட்டத்தை போல் நெடுவாசல் போராட்டத்திலும் வெல்வோம் என்று புதிதாக தொடங்கிய என் தேசம்-என் உரிமை கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ‘என் தேசம் - என் உரிமை’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்கள். இதன் ஒருங்கிணைப்பாளர்கள் எபிநேசர், பிரகாஷ் உள்பட பலர் நெடுவாசலில் போராட்ட களத்தில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    மெரீனா போராட்டத்தை போல் நெடுவாசல் போராட்டமும் தீவிரம் அடையும். இது மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை. இந்த உரிமையை மீட்டெடுக்கும் போராட்டமும் வெற்றி பெறும்.

    இங்கு சாதி, மதம், அரசியல் எதற்கும் இடமில்லை. இளைஞர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டுள்ள எங்கள் கட்சியை சிதைக்க அரசியல் கட்சிகள் திட்டமிடுகின்றன. அந்த அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் என் தேசம்- என் உரிமை கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்கிறார்கள்.

    மெரீனா போராட்ட களத்தில் 3 நாட்களுக்கு பிறகுதான் எங்களை பார்த்ததாக விலாசினி என்பவர் கூறி இருக்கிறார். முதல் நாளே அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நாங்களும் கலந்து கொண்டது அவர் பார்வையில் படவில்லை என்றால் முகநூலில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

    அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமைதியாக நடந்த போராட்டத்தை சீர்குலைக்க அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டி விட்டன. அடித்து விரட்டியது போலீஸ். நமக்கென்று ஒரு அமைப்பு இல்லாததால் தானே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை.

    நமக்கு ஒரு அமைப்பு தேவை. அதிகாரம் தேவை. அதற்காகவே கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு யாரும் தலைவர் கிடையாது. மாநில, மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட போகிறார்கள்.

    மெரீனா போராட்டம் என்பது மெரீனா கடற்கரையில் நடந்தது மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள். வரும் காலங்களிலும் மக்கள் பிரச்சினைக்காக இப்படி திரளுவது சாத்தியமா? அமைப்பு ரீதியாக ஒன்றிணைவோம். அரசியலும் புனிதமானது என்பதை நிரூபிப்போம்.

    இளைஞர்களை திரட்ட ஒரு பிளாட்பாரத்தை உருவாக்கி இருக்கிறோம். யாரோ சிலரின் தூண்டுதலால் அதை உடைக்க முயல வேண்டாம்.

    மக்களுக்கு சேவை செய்யவும், நமது உரிமைகள் பறிபோவதை தடுப்பதும்தான் நமது நோக்கம். இந்த அமைப்பு தேவையில்லை என்பது சில அரசியல் கட்சிகளின் விருப்பம். அவர்களின் விருப்பத்துக்கு இளைஞர்கள் இரையாகி விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    * * * நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்தேசம்-என் உரிமை கட்சி இளைஞர்கள்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடவும் தயாராக இருப்பதாக நெடுவாசலில் வைகோ பேட்டியளித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் இன்று நெடுவாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். அதன்படி இன்று நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகே வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவன் நான் தான். மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் முதலில் குரல் கொடுத்தது நான்தான். அதன்பிறகு நம்மாழ்வார் குரல் கொடுத்தார். இது போன்ற போராட்டங்களில் கட்சி பெயர்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது என்று கூறியதும் நான்தான்.

    இதற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நான் நடத்திய போது மாணவர்கள், இளைஞர்கள் வரவில்லை. இப்போது நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கு பெறுவது மகிழ்ச்சியை தருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நான் போராடிய போது வேகவேகமாக 5 கட்சிகள் வந்தன. அதன்பிறகு அமைதியாகிவிட்டனர். நான் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாதிட்டேன். 7 மணி நேரம் தொடர்ந்து வாதாடினேன்.

    அப்போது நீதிபதி 40 லட்சம் பேர் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறீர்களே. ஆனால் 20ஆயிரம் பேர்தானே கைதாகி இருக்கிறார்கள் என என்னிடம் கேட்டார். அதற்கு நான் 30 கோடி மக்கள் சுதந்திரத்திற்காக 30 ஆயிரம் பேர்தானே போராடி கைதானார்கள் என்று கூறினேன்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னுடைய நாணயத்தையோ, நேர்மையையோ யாரும் சந்தேகப்பட தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலை வெளிமாநிலத்தில் அமைக்கப்பட்ட போது ஆயுதம் ஏந்தி போராடிய பொதுமக்கள் 300 கோடி மதிப்பிலான அலுவலகத்தை உடைத்தெறிந்தனர். அதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழிக்க ஆயுதத்தோடு போராடவும் தயாராக வேண்டும். அதில் முதல் ஆளாக நான் ஆயுதத்தோடு வந்து உடைப்பேன். நான் இவ்வாறு பேசுவதால் , மாணவர்களையும், இளைஞர்களையும் வைகோ தூண்டி விடுகிறார் என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை உள்பட பல்வேறு தலைவர்கள் கூறுவார்கள். தமிழிசை போன்ற பா.ஜனதா தலைவர்கள் பேசுவது எல்லாம் உளலறாக இருக்கின்றன.

    நில ஆக்கிரமிப்பு திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு தான். அதனை பா.ஜனதா அரசு செயல்படுத்துகிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்தான். ஆய்வு செய்ய அனுமதி அளித்தது ஜெயலலிதா ஆட்சியில்தான்.



    இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது பல ஆயிரம் அடிக்கு துளையிடும் போது பூகம்பம் ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படும். அதில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்தால் கேன்சர் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

    நைஜிரியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தியதால்தான் நிலங்கள் அனைத்தும் அழிந்து வெளிநாடுகளுக்கு பிழைப்பு தேடி செல்கின்றனர். 31 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. எந்த இடத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மத்திய அரசின் சமரசத்தை ஏற்க மாட்டோம் என்று இளைஞர்கள் - மாணவர்கள் மற்றும் நெடுவாசல் கிராம போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து 14 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

    இத்திட்டம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட கிராம பகுதிகளில் விவசாயிகளிடம் பல ஏக்கர் நிலத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது.



    அதில் எண்ணெய் வளங்கள் பற்றி ஆய்வு செய்யப் போவதாகவும், மண் எண்ணெய் எடுக்கப் போவதாகவும் அப்பகுதி விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

    அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய், எரிவாயுவை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் ஆழ்குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களை அடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

    மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய பின்னரே ஹைட்ரோ கார்பன் குறித்து வெளியே தெரிய வந்தது. இந்த திட்டம் நிறைவேறினால் விவசாயம் அழியும், நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என தகவல் பரவியுள்ளது.

    முதலில் ஒரு கிராமம் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே கருதப்பட்ட நிலையில் கடந்த 19-ந்தேதி முதல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் தீப்பொறியாய் பரவியது.

    ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். திட்டம் நிறைவேற்றப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்துள்ளது.

    விவசாயிகள், கிராம மக்கள் மட்டும் இந்த திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்தனர்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இணைந்தது போல் சமூக வலைதளங்கள் மூலம் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.



    இதன் எதிரொலியாக யாரும் எதிர்பார்க்காத வகையில் நெடுவாசல் கிராமமே திக்குமுக்காடும் வகையில் போராட்டம் தீவிரம் அடைந்தது.

    சென்னை, கோவை, புதுச்சேரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஐ.டி. நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டனர்.

    திரைத்துறையினர், வணிகர் சங்கங்கள் என நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

    நெடுவாசலில் குலமங்கலம், மாங்காடு, வடகாடு, ஆலங்குடி, ஆவணம், புள்ளான்விடுதி, கீரமங்கலம், மறமடக்கி, வாணக்கன்காடு, வெட்டான்விடுதி உள்பட 100 கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்வது, தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள காவிரி பாசன பகுதிகளை ஒருங்கிணைந்த வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்பட அனைத்து அடையாள அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்ட தலைநகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, வீட்டின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றியும் கருப்பு கொடியேற்றியும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு குறைந்த அளவே இடம் கையகப்படுத்தப்படும், நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாது, 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

    ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள் - இளைஞர்கள் மற்றும் நெடுவாசல் கிராம போராட்ட குழுவினர் எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த திட்டத்தை நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரள வேண்டும் என ச.ம.க. தலைவர் சரத்குமார் பேசினார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதனை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திருச்சி செல்வகுமார் ஆகியோர் முடித்து வைத்தனர். முன்னதாக சரத்குமார் பேசியதாவது;-

    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டத்தின் மூலம் நாம், நமக்காக போராட வேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தின் மூலம், அதை செயல்படுத்த உள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ.46 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்குமாம். அதில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிதான் அரசுக்கு வருமானமாக கிடைக்குமாம்.

    ஏற்கனவே 250 ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்ட நிலையில், மீண்டும் அடிமைபட விடக்கூடாது. எரிவாயுவினால் எந்த பாதிப்பும் வராது என்று சிலர் கூறுகின்றனர். நைஜீரியாவில் ஒரு பெரிய எண்ணெய் கிணறு ஏற்படுத்தப்பட்ட பிறகுதான், அந்த நாட்டின் வளர்ச்சி குன்றிவிட்டது என்பதை எரிவாயு திட்டத்தை ஆதரித்து பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வளமான விளைச்சல் உள்ள பகுதியில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால், வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். ஆனால், பொருளாதார வளர்ச்சி ஏற்படலாம்.

    அத்தகைய பொருளாதார வளர்ச்சியின் மூலம் நாட்டில் தங்கத்தட்டு எளிமையாக கிடைக்கலாம். ஆனால், அதில் போட்டு சாப்பிட சோறு இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்கு நிகராக கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் விவசாயம் பாதுகாக்கப்படும். வீட்டிற்கு ஒரு விவசாயி அவசியம். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து, இந்த திட்டத்திற்கு எதிராக போராடி அதை தடுத்து நிறுத்துவோம். அதேசமயம், மண்ணின் அடையாளத்திற்காகவும், விவசாயத்தை காக்கவும் போராடுவோம் என்றார்.

    வாடிவாசலுக்கு மெடலை திருப்பி கொடுத்ததாக கூறிய முன்னாள் விமானப்படை வீரர் நெடுவாசலுக்காக உடலையும் கொடுப்பதாக போராட்ட களத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக கீரமங்கலம் நாடியம்மன் கோவில் திடலில் போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் விமானப்படை வீரரும், ஜல்லிக்கட்டுக்காக தனது மெடலை திருப்பி கொடுத்தவருமான செல்வராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் ஒரு விவசாயி மகன் என்பதில் பெருமை கொள்வேன். சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். நம் மண், விவசாயத்தை காக்க எங்கே போராடினாலும் அங்கே போக வேண்டும் என்று நம்மாழ்வார் சொல்லியபடி ஒவ்வொரு போராட்ட களத்திற்கும் செல்வேன்.

    வாடிவாசல் திறக்க வேண்டும் என்று நடந்த போராட்டத்துக்காக ஆதரவு தெரிவித்து எனக்கு விமானப் படையில் கிடைத்த மெடலை மாவட்ட கலெக்டரிடம் திருப்பி கொடுத்தேன்.

    இப்போது இந்த நெடுவாசலை காக்க என் உடலைக் கொடுப்பேன். நாம் வாக்களித்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் நம்மை ஏமாற்றலாம். நாம் ஏமாறக் கூடாது. நல்லவர்களை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். இந்த போராட்டம் வெற்றி பெற தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் நெடுவாசலுக்கு வர வேண்டும் என்றார்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன், கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் கொள்கையில் தான் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதிக்கின்றனர். உலகில் பணக்கார நாடுகள் நம் கனிம வளத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.


    நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க நடைபெறும் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடையும். இந்த போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காவிட்டால் ஒட்டுமொத்த தமிழர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்.

    இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில் முதல் கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு பேராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தில் மட்டும் தொடங்கிய போராட்டம் இன்று மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது.

    அதுமட்டுமின்றி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதே போல் இதற்கு ஆதரவு தெரிவித்து நாகை, கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    நாளுக்கு நாள் போராட்டத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவால் நிச்சயம் விடிவு கிடைக்கும் என்று நெடுவாசல் கிராம மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இதற்கிடையே புதுக்கோட்டையில் மாவட்ட வர்த்தக சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சீனுசின்னப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும். 21 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் உப்பு நிலமாக மாறக்கூடும்.

    100 கி.மீ. சுற்றளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே இந்த ஆபத்துகளை கருத்தில்கொண்டு மத்திய அரசு உடனடியாக இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு பேராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடியில் நாளை கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் ஆலங்குடியில் நாளை (28-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    ம.தி.மு.க. சார்பில் (நாளை) ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக இன்று மதியம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டத்தை தொடர கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 15-ந்தேதி தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

    இந்த திட்டம் குறித்து முதலில் அறியாமல் இருந்த நெடுவாசல் மற்றும் வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு கிராம மக்கள் பின்னரே பாதிப்புகள் குறித்து அறிந்தனர்.

    இதையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் தங்கள் போராட்டத்தை நெடுவாசலில் தொடங்கினர். கிராம மக்களின் போராட்டம் சமூக வலை தளங்கள் மூலம் வேகமாக பரவியது. இதையடுத்து அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

    கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ள போராட்டம் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உருவான தன்னெழுச்சி போராட்டம் போல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராகவும் அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டனர்.

    குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் அதிக அளவில் களம் இறங்கினர். நேற்று புதுக்கோட்டை, நெடுவாசல், வாணக்கன்காடு, கோட்டைக்காடு ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் திருச்சி, கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் குவிந்தனர்.

    சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வரும் ஊழியர்கள், தேடல் அமைப்பினர், புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் திரண்டதால் போராட்ட களம் சூடுபிடித்துள்ளது.

    திரைப்பட இயக்குனர்கள் தங்கர்பச்சான், பாண்டிராஜ் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டக்காரர்களை ஊக்கப்படுத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டமும் வெற்றி பெறும் என்று முழக்கமிட்டனர்.

    நெடுவாசல் கிராமத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையன் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.



    நெடுவாசலில் நடந்த போராட்ட களத்திற்கு வருகை தந்த திருமயம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி மெரீனாவில் ஏற்பட்டது போல் நெடுவாசலிலும் புரட்சி வெடிக்கும் என்று பேசினார். ஆலங்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் பேசுகையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படும் வரையிலும், திட்டம் நிறைவேறாமல் தடுக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் தி.மு.க. எடுக்கும் என்றார்.

    வழக்கமான போராட்டம் போல் இருந்துவிடாமல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர கிராம மக்களுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கைகோர்த்துள்ளனர். இதற்காக சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக தமிழகம் முழுவதிலும் இருந்து இளைஞர்களை திரட்டும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து இளைஞர்கள் கிராம மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடத்தவும் அந்த குழு முடிவு செய்துள்ளது.

    இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நல கூட்டணி சார்பில் ஆலங்குடியில் நாளை (28-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    ம.தி.மு.க. சார்பில் நாளை ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். இன்று மதியம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 1-ல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று அம்மாவட்ட வர்த்தக கழக தலைவர் சின்னப்பா அறிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. 

    இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 1-ல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று அம்மாவட்ட வர்த்தக கழக தலைவர் சின்னப்பா அறிவித்துள்ளார்.

    இதனிடையே, வரும் மார்ச் 1-ம் தேதி போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முன்னதாக, நெடுவாசல் போராட்டத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டார். போராட்டத்தில் 



    பேசிய சரத்குமார், தமிழகம் வறட்சியாக உள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் வறட்சியை ஏற்படுத்தும் என்று கூறினார்.



    போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பேரணி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மீத்தேன் வாயு, ஷேல் கியாஸ் உள்ளிட்ட திட்டங்கள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

    இந்த திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.

    ஆனால் போதிய நிலம் கையகப்படுத்துதல், தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்தல் உள்ளிட்டவைகளால் தள்ளிப்போனது. தற்போதைய மத்திய அரசு திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கியதால் போராட்டம் வெடித்துள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும், நெடுவாசல் கிராமத்தையொட்டிய சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் இருப்பதால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று அரசியல் கட்சிகள் முதல் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


    இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலத்தின் அருகே நேற்று முன்தினம் முதல் பந்தல் அமைத்து, அதில் அமர்ந்து பெண்கள், மாணவ- மாணவிகள், பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் அப்பகுதி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்துசெய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அடுத்த கட்டமாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


    இதற்கிடையே நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலங்களை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ், சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன், உதவி கலெக் டர் அம்ரீத் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையும் சந்தித்து பேசினர். அப்போது, இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என்று அவர்களிடம் அமைச்சர் கூறினார்.

    டெல்டா மாவட்டத்தில் முன்பு மீத்தேன் பிரச்சினை ஏற்பட்ட போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழக விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தடை விதித்தார். அதேபோல தற்போது ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் இப்பகுதி விவசாயிகளை பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியைச் சேர்ந்த தண்ணீர் அமைப்பின் தலைவர் நீலமேகம் என்பவரின் தலைமையில் 8 பேர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நெடுவாசல் கிராமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்றனர்.

    அப்போது பொன்மலையைச் சேர்ந்த சதிஷ்குமார், சபரி, அபியா, ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி, லால்குடியைச் சேர்ந்த அசு ராஜ் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் ஓட்டிச் சென்ற 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 7 பேரும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

    ×