என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரள்வோம்: சரத்குமார் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதனை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திருச்சி செல்வகுமார் ஆகியோர் முடித்து வைத்தனர். முன்னதாக சரத்குமார் பேசியதாவது;-
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டத்தின் மூலம் நாம், நமக்காக போராட வேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தின் மூலம், அதை செயல்படுத்த உள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ.46 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்குமாம். அதில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிதான் அரசுக்கு வருமானமாக கிடைக்குமாம்.
ஏற்கனவே 250 ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்ட நிலையில், மீண்டும் அடிமைபட விடக்கூடாது. எரிவாயுவினால் எந்த பாதிப்பும் வராது என்று சிலர் கூறுகின்றனர். நைஜீரியாவில் ஒரு பெரிய எண்ணெய் கிணறு ஏற்படுத்தப்பட்ட பிறகுதான், அந்த நாட்டின் வளர்ச்சி குன்றிவிட்டது என்பதை எரிவாயு திட்டத்தை ஆதரித்து பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வளமான விளைச்சல் உள்ள பகுதியில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால், வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். ஆனால், பொருளாதார வளர்ச்சி ஏற்படலாம்.
அத்தகைய பொருளாதார வளர்ச்சியின் மூலம் நாட்டில் தங்கத்தட்டு எளிமையாக கிடைக்கலாம். ஆனால், அதில் போட்டு சாப்பிட சோறு இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்கு நிகராக கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் விவசாயம் பாதுகாக்கப்படும். வீட்டிற்கு ஒரு விவசாயி அவசியம். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து, இந்த திட்டத்திற்கு எதிராக போராடி அதை தடுத்து நிறுத்துவோம். அதேசமயம், மண்ணின் அடையாளத்திற்காகவும், விவசாயத்தை காக்கவும் போராடுவோம் என்றார்.






