என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசல் போராட்டத்தில் குழந்தைகளுடன் கலந்துகொண்ட பெண்கள்
    X

    நெடுவாசல் போராட்டத்தில் குழந்தைகளுடன் கலந்துகொண்ட பெண்கள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில், ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
    25 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்திற்கு மண் எண்ணெய் எடுப்பதற்காக தான் வந்ததாக கூறினார்கள். ஆனால் இப்படி எங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடத்தான் வந்துள்ளார்கள் என்பது தெரியாமல் போய்விட்டதே...

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுபுற கிராம விவசாயிகள் தான் இப்படி புலம்பி கண்ணீர் வடிக்கிறார்கள்.

    நெடுவாசல் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலும், தஞ்சை மாவட்ட எல்லையிலும் ஒட்டி அமைந்துள்ளது. இதன் தலைக்கட்டு கிராமங்கள் 3000 உள்ளன. ஆவணம், கலத்தூர், மஞ்சு விடுதி, வாண்டார் விடுதி, கருக்காக்குறிச்சி என பல கிராமங்கள் உள்ளன.

    சுமார் 500 வருடங்களுக்கும் மேலாக, விவசாயம் நடந்து வருகிறது. முதலில் நெடுவாசல் சுற்று வட்டார நிலம் வானம் பார்த்த பூமியாக இருந்துள்ளது. இப்போதைய தலைமுறையின் மூதாதையர்கள், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை என பயிர் செய்துள்ளனர்.

    அதன் பிறகு வந்த தலைமுறையினர் தரிசாய் கிடந்த நிலத்தை தோண்டி கிணறு ஏற்படுத்தி விவசாயம் செய்தனர். முதலில் 100 அடி, பிறகு 300 அடி, அதன் பிறகு நீர் முழ்கி மோட்டார் வந்த பிறகு 500 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.

    நெல், வாழை, கடலை, மா, பலா, வாழை என அனைத்து வகையான விவசாயமும், நவ தானியங்களும் விளைவித்து தருகிறார்கள். இப்போது இவர்கள் நிலத்தில் தான், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி கொடுத்துள்ளது.

    புள்ளவாடி, நெடுங்கா குறிச்சி என பல பகுதிகளில், ஆய்வு செய்து நெடுவாசல் கிழக்கு என்னும் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் மையத்தை அமைக்கும் போதுதான் அவர்கள் எடுக்கப்போவது மண்எண்ணெய் இல்லை தங்கள் பகுதியையே காலி செய்யும் இயற்கை எரிவாயு எனும் விபரீதம் என புரிந்தது. அதனால் தான் நெடுவாசலில் போராட்டம் வெடித்துள்ளது.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் காளைகளை மாடுகளை மீட்டோம். இப்போது விவசாய நிலத்தை மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இருந்து மீட்டு, மாடுகளை வைத்து விவசாயம் தொடர்வோம் என்று குடும்பம் குடும்பமாக போராட்ட களத்தில் குதித்து விட்டார்கள். வாடிவாசலை மீட்டோம், நெடுவாசலையும் மீட்போம் என்ற குரல் அங்கு எதிரொலிக்கிறது.

    85 வயதான சக்கரத்தேவர் என்ற விவசாயி, 1950-1960ம் வருடங்களில், வீட்டில், காலையில் கம்பங்கூழ், கேப்பைக்கூழ், குடித்தும், மதியம் கஞ்சி குடித்தும், கிணறுகளில், மாடுகளை பூட்டி, ஏற்றம் இறைத்து விவசாயம் செய்ததை நினைத்து பூரிக்கிறார்.

    85 வயதிலும், தெளிவான கண் பார்வை உடல் வலிமையோடும் உள்ளேன். இப்போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ரியல் எஸ்டேட் என விவசாய நிலத்தையும், விவசாயத்தையும் ஒழித்து, மனித குலத்தையும் சீரழித்து, 20, 30 வயதிலேயே, உடல் நலம் கெட்டு, நோயால், சீரழிக்க வைக்கிறார்கள் என வேதனைப்படுகிறார்.

    நெடுவாசலை சேர்ந்த 75 வயது திருப்பதி கூறும்போது, தனது தந்தை நாடதேவர், அப்பச்சி பஞ்சாத்தால், முப்பாட்டன் ஆயத்தேவர் என மூன்று தலை முறைகளாக விவசாயம் செய்த பூமி இன்று ஹைட்ரோ கார்பனுக்காக சிதைக்கப்படுவதாக கூறி கலங்குகிறார்.

    ஹைட்ரோ கார்பனுக்கு ஆயிரம் அடி வரை ஆழ்துளையிட்டு பணிசெய்யும் போது, வாயு மற்றும் கழிவுகளால் மண்புழுக்கள் அழிந்து, வாயுவால், மண் தன்மை கெட்டு, விவசாயிகள், விவசாய நிலத்தில் அமைத்துள்ள ஆயிரக்கணக்கான போர் வெல்களில், ஹைட்ரோ கார்பன் கழிவும் கலந்துவிடும் என அச்சத்தில் உள்ளனர்.

    பல வருடங்களுக்கு விவசாயத்துக்காக பல இடங்களில் தோண்டிய கிணறுகளில், ஏற்றம் இறைத்தபோது தவறி கிணற்றில் விழுந்து, இறந்த விவசாயிகள், எண்ணிக்கை ஏராளம் என விவசாயம் வளர்க்க பலர் உயிர்களையே இழந்த சோகத்தை கூறி கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கப்பட்டால், சுற்று வட்டார பகுதியில், காற்றோடு அவற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்கு உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் ஏற்படும் என்ற அபாயத்தையும் உணர்ந்திருக்கிறார்கள்.

    போராட்ட களத்தில், பங்கேற்ற டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், தனது கிராமமான சித்தூரும் இதனால் பாதிக்கப்படும் அபாயத்தை குறிப்பிட்டார். அரசு புதிய திட்டங்களை கொண்டு வருவது நல்லது தான், ஆனால், ஒருவரது வீட்டின் அடுப்பறைக்குள் குழாயை பதிக்க நினைப்பவர்கள், அவர்களின் அனுமதியை பெற மறுப்பதும், அதை தட்டிக் கேட்க்கும் உரிமையை பறிக்க முயற்சிப்பதும் தவறு என்கிறார்.

    வாழ்க்கை போராட்டம் உள்ளதுதான். ஆனால், தமிழனுக்கு தான் வாழ்கையே போராட்டமாக உள்ளது என வேதனைப்படுகிறார்கள். கூடங்குளம், ஜல்லிக்கட்டு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என தமிழர்களின் போராட்டம் தொடர்கிறது.

    ஆனால் தமிழனின் உரிமையை பறிக்கும் போராட்டம் அனைத்தும் வெற்றியில்தான் முடிந்துள்ளது. விவசாய நிலம், விவசாயிகளின் உயிர். ஹைட்ரோ கார்பனுக்காக அவர்களின் நிலத்தை அழிப்பது அவர்களின் உயிர்களை அழிப்பதற்கு சமமானது.

    500 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தை தொடங்கி வானம் பார்த்த பூமியாக கிடந்த, மேட்டு நிலத்தை சமப்படுத்தி, கேணி வெட்டி, உடல் உழைப்பால் விவசாயம் வளர்த்து உணவு உற்பத்தியில் கை கொடுத்த விவசாய தோழனுக்கு நீங்கள் கை கொடுக்க வேண்டாம்.

    அவர்கள் நிலத்தை பறித்து ‘கை’ எடுக்காமல் இருந்தால் போதும். விவசாயத்தை காத்த நெடுவாசலின் நெடிய பச்சை வயல் பயணத்தை ஹைட்ரோ கார்பன் வாயுவால், கரியாக்க வேண்டாம் என்றார்கள், அப்பகுதி பொதுமக்கள்.

    போராட்ட களத்தில் ஏராளமான பெண்கள் தங்கள், கைக்குழந்தைகளுடன் பங்கேற்கிறார்கள். 90 வயது தாத்தாக்களும், பேரன்களுடன் பங்கேற்கிறார்கள்.

    தங்கள் பேரன்கள், கொள்ளுப்பேரன்களின் எதிர்காலத்திற்காக நிலத்தை மீட்டு எடுக்க போராடுகிறார்கள்.

    ஏனென்றால் இன்று பெற்ற தாயின் மடியில், தவமும் இந்த குழந்தைகள்தானே, நாளை, இந்த பூமியின் நிலத்தை உழுது பயிர் செய்து தானியத்தை உற்பத்தி செய்ய போகிறார்கள். அத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்கும் உதவ இருக்கிறார்கள்.

    அதை நிரூபிப்பது போல ஒரு தாயின் மடியில், தவழ்ந்த ஒரு குழந்தை அப்படியே தவழ்ந்து தாய் மடியை விட்டு இறங்கி தரையில் தன் கைகளை ஊன்றி பிஞ்சு கைகளில் மண்ணை அள்ளுகிறது.

    அது, நானும் என் சொந்த மண்ணை இழக்க மாட்டேன் என்பதை உணர்த்துவது போல் அமைந்தது.
    Next Story
    ×