என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்: வெள்ளையன்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன், கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் கொள்கையில் தான் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதிக்கின்றனர். உலகில் பணக்கார நாடுகள் நம் கனிம வளத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க நடைபெறும் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடையும். இந்த போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காவிட்டால் ஒட்டுமொத்த தமிழர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்.
இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில் முதல் கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






