என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு வீரமா காளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி அருகே  உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் வீரமாகாளியம்மன்கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    காப்புக் கட்டியதுடன் ஒவ்வொரு வீட்டிலும் மண்சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானியங்களை வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து  வந்த முளைப்பாரியை  தாரை,

    தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று மதியம் ஊர்வலமாக தூக்கிச்சென் று மண்ணடித்திடலில் ஒன்று சேர்ந்து கல்லணை கரையோரம் உள்ள பெரியகுளத்தில் விட்டனர்.

    மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நேற்று மாலை மது எடுப்பு திருவிழா நடந்தது. மது எடுப்பு திருவிழாவில் மேற்பனைக்காடு கிராம மக்கள் தென்னம் பாலைகளை நெல் நிரப்பிய குடங்களில் வைத்து மலர்களால் அலங்கரித்து  கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக  தூக்கிச் மண்ணடித்திட ஆற்றங்கரை காளியம்மன் கோவில் சுற்றி அருகே போட்டுவிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை  விழாக்குழுவினரும். கீரமங்கலம்  போலீசார் பாதுகாப்பு  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிகமாக நேரத்தை செலவிட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பொன்புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    முகாமினை முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்து பேசியதாவது:
    பெற்றோர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அந்த குழந்தைகள் தங்களுக்கு பிறந்ததை சுமையாக கருத கூடாது. சுகமாக கருத வேண்டும். அவர்களிடம் அதிகம் தனித்திறமைகள் உள்ளது. அதனை வெளிக்கொணர பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

    இம் மருத்துவ முகாமில் காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, கண் மருத்துவர், கண்பரிசோதகர், குழந்தைகள் நல மருத்துவர் என அனைத்து வகை சிறப்பு மருத்துவர்களும் கலந்து  கொண்டு குழந்தைகளை மதிப்பீடு செய்து தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள், அறுவைச் சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் அளவீட்டு முகாம் நடைபெற்று பின்னர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே பெற்றோர்கள் இந்த  அரிய வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி  தங்கள் குழந்தைகளுக்கு தேவையான  உபகரணங்களை பெற்று பயன் பெற வேண்டும் என்றார்.

    முகாமில்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.சுதந்திரன், பொன்புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா, வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி ஆகியோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

     முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாததுரை, சரவணன், பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லநாகு ஆகியோர் தலைமையில் வட்டார வளமைய பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், உடல் இயக்க நிபுணர்கள் செய்திருந்தனர்.
    பாஸ்போர்ட் பெற போலி சான்றிதழ்கள் கொடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    போலி சான்றிதழ்களை இணைத்து பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 43). இவர், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அப்போது அரிமளம் அரசுப் பள்ளியில் படித்ததாக போலியான மாற்றுச் சான்றிதழ் இணைத்திருந்தார்.

    இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் செல்லதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் புகார் அளித்தார். இதேபோல, அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ரசாக் (45). இவர், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பெறப்பட்டதாக போலி பிறப்புச் சான்றிதழை இணைத்து பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளார். இவர் மீது பாஸ்போர்ட் அலுவலக கண்காணிப்பாளார் ஜெயந்தி புகார் அளித்தார்.

    மேலும் வத்தனாக்கோட்டையை சேர்ந்த முருகேசன் மகள் கார்த்திகா (24), இவர் போலியான பிறப்பு சான்றிதழை தயாரித்து விண்ணப்பித்துள்ளார். இவர் மீது பாஸ்போர்ட் அலுவலக கண்காணிப்பாளர் ஜெயந்தி புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில், மாவட்ட குற்றப்ப பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
    ஆலங்குடி, மார்ச்.9-

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. 

    விழாவிற்கு காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமை தாங்கினார். விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வெங்கடேஷ் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர்.  

    இதைத் தொடர்ந்து  காவல்நிலைத்தில்  உள்ள மகளிர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருவரையொருவர் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர். மேலும் காவல் நிலையம் சென்று இருந்த பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குடி காவல் நிலையத்தில் பெண் காவலர்களை சிறப்பிக்கும் வகையில் காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும், கேக் வெட்டியும், பெண் காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    தலைமை செயலகத்தை திருச்சிக்கு மாற்றிட விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகு விவசாயிகள் ஏராளமானோர் ஒன்றிணைந்து தங்கள் எதிர்கால நலன் கருதி, கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு என்ற சங்கத்தை உருவாக் கியுள்ளனர். 

    இதில் தலைவராக கொக்கு மடை ரமேஷ்,  செயலாளர் மற்றும் பொருளாளர்களாக வீரப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் சங்கம் சார்பில், தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

    மனுவில், ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியன இயங்கி வந்தன. அதன் பின்பு தமிழகம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போதும் இன்றளவும் சென்னையே தலைநகராக செயல்பட்டு வருகிறது. 

    இதனால் தமிழகத்தின் கடைகோடி பகுதிகளில் அரசின் எந்த திட்டங்களும் முழுமையாக சென்றடைவதில்லை. குறிப்பாக விவசாயிகள் பயன் பெறும் வகையில் தாமிரபரணி, வைகை, காவேரி போன்ற நதிகள், ஆறுகள் சென்றடையும் பாதைகள் சரி செய்யப்படாமல் கடைமடை பகுதி விவசாயிகளின் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது. இது அரசின் கவனத்திற்கு எட்டுவதும் இல்லை, 

    எனவே முதல்வர் தமிழக மக்களின் நலன் கருதி, அனைத்து பகுதிக்கும் அரசின் சலுகைகள் சென்றடையும் வகையில், தமிழகத்தின் மைய பகுதியான திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றி அமைத்திட  வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டையில் தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி, தொழிலதிபர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

    பின்னர் புதுக்கோட்டை நத்தம்பண்ணை பகுதியை சேர்ந்த நில புரோக்கர்கள் வேலுச்சாமி, சந்திரசேகரன், சோமசுந்தரம் ஆகியோருக்கு 2004&ல் விற்பனை செய்ய பவர் பத்திரம் போட்டு கொடுத்தார்.

    அதன்பின்னர் 3 மாதம் கழித்து கொடுத்த பவரை ரத்து செய்தார். ஆனால் இதனை மேற்கண்ட 3 பேரும் மறைத்து புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியை சேர்ந்த முகமது நஜிபுதீன், முகமது சாயம்பு ஆகியோருக்கு ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

    புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த முனியசாமி புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வேலுச்சாமி, சந்திரசேகரன், சோமசுந்தரம், சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிலதிபரின்  ரூ. 1 கோடி நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை அருகே பஞ்சாயத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் உதவியால் சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்கு ஆவனத்தான்கோட்டையில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை குழந்தைகள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.

    கடந்த 2019&ல் இந்த பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 73 ஆக இருந்தது. பின்னர் 2020 மார்ச்சில் வந்த கொரோனா வைரசால் மக்கள் வாழ்வாதாரம் இழந்ததன் விளைவாக இந்த பள்ளியின் மாணவர் சேர்க்கை 3 மடங்கு உயர்ந்தது. தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை வாங்கி அரசு பள்ளியில் சேர்த்தனர்.

    தற்போதைய நிலையில் இந்த பள்ளியில் 231 மாணவ&மாணவிகள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் இருவரும் காலையிலேயே வேலைக்கு செல்கின்றனர்.

    இதனால் இந்த குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி எட்டாக்கனியானது. ஆகவே அவர்கள் சிற்றுண்டியை தவிர்த்து வந்தனர்.

    இதனை அறிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் நல்ல உள்ளம் படைத்த சிலர் சேர்ந்து அந்த மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக பிஞ்சு குழந்தைகளுக்கு சத்தான சிற்றுண்டி வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கூடத்தில் வழங்கப்படுகிறது.

    இந்த தொகையினை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தற்போது சிற்றுண்டி மெனு நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பட்டியலில் கேப்பை கூழ், கம்பங்கூழ், பாசி பயிறு பாயாசம், கொண்டைக்கடலை சுண்டல், பொரித்த சிக்கன் துண்டுகள், சத்துமாவு கொழுக்கட்டை, தினைமாவு கொழுக்கட்டை, உளுந்தங்கஞ்சி, பட்டாணி சுண்டல் போன்ற விட்டமின் மற்றும் புரோட்டீன்  நிறைந்த சத்தான  உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

    நன்கொடையாளர் பாஸ்கரன் என்பவர் கூறும்போது, சத்தான உணவு சாப்பிட்டால் குழந்தைகள் ஆராக்கியமாகவும், வகுப்பில் கவனமுடனும் படிக்க இயலும். வாரத்தில் 5 நாட்களும் சிற்றுண்டி வழங்க முயற்சி செய்து வருகிறோம். இல்லாதார்க்கு உதவி செய்யும்போது கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்றார்.

    பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வானார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் தேர்தல் பேரூராட்சி மன்றக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமைக்கழகத்திலிருந்து தி.மு.க. வேட்பாளராகஅறிவிக்கப்பட்ட 10&வது வார்டு வேட்பாளர் சுந்தரி அழகப்பன் தேர்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான மு.செ.கணேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

    தி.மு.க. வேட்பாளர் சுந்தரி அழகப்பனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால்   அவர் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.    

    இதையடுத்து பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு மதியம் 2.30 மணியளவில் தேர்தல்   நடைபெற்றது. இதில் 3&வது வார்டு உறுப் பினர்  கா.புவனேஸ்வரி, 7&வது வார்டு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். 
    தேர்தலில் 7&வது வார்டு உறுப்பினர் வெங்கடேஷ் 8 வாக்குகளும், கா.புவனேஸ்வரி 6 வாக்குகளும் பெற்றனர். இதில் வெங்கடேஷ் வெற்றி பெற்று துணைத்தலைவரானார். 

    தேர்வு செய்யபட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். 

    பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சட்ட விரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த 24 வயதுடைய சிவா என்பவர் மது விற்பது தெரியவந்தது.

    உடனே போலீசார அவரை கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    பின்பு அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    கடந்த வாரம் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மண்ணடித் திடலில் ஒன்று சேர்ந்து கல்லணை கரையோரம் உள்ள பெரியகுளத்தில் விட்டனர்.

    திருவிழாவின் தொடர்ச்சியாக மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில் அருகே ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு குதிரை எடுப்புத் திருவிழா நேற்று நடந்தது.

    அதாவது வீரமாகாளி அம்மன் கோவில் காப்புக்கட்டியவுடன் மேற்பனைக் காடு கிராம மக்கள் இணைந்து செரியலூரில் உள்ள மண்பாண்ட கலை ஞர்களிடம் அய்யனார் கோவிலுக்கு களி மண் குதிரை, காளை, சுவாமி சிலைகள், பரிவார தெய்வங்கள் என சிலைகள் செய்ய கொடுத்திருந்தனர்.

    மேற்பனைக்காடு கிராமத்தில் மக்கள் ஏராளமானோர் தாரை, தப்பட்டைகள் உடன் செரியலூர் வந்து குதிரை மற்றும் சுவாமி சிலைகளை தூக்கிச் சென்றனர். சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்று அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

    பின்னர் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொ ண்டனர்.தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மது எடுப்பு திருவிழா நடைபெறுகிறது.
    மினி மாரத்தான்போட்டி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாலின சமத்துவம் குறித்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
     
    இப்பேரணியில் பாலின சமத்துமவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரை வலம் வந்தனர்.

    மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியானது புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம், அண்ணாசிலை வழியாக 2 கி.மீ. தூரம் சென்று மறுபடியும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இந்த மினி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், சென்ட்ரல் ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    மொய் விருந்து விழாக்கள் மூலம் வட்டியில்லாத கடன் கிடைப்பதோடு திருப்பி செலுத்துவதும் எளிது என்பதாலேயே புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மொய் விருந்து விழாக்களை 5 ஆண்டிற்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    காலங்களும், காட்சிகளும் மாறினாலும் கலாசாரங்கள் மாறாது என்பதை இந்த நவீன உலகிலும் மெய்ப்பித்து வருகிறது மொய் விருந்து.

    புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட கிராமங்களில் தொன்று தொட்ட பழக்கமாய் ஆடி மாதத்தில் நடத்தப்படும் மொய் விருந்து விழாக்கள் கோடிகளை மட்டுமே கொட் டிக்கொடுப்பதில்லை. மாறாக துவண்டு கிடந்தவர்களையும் சீர் தூக்கி சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

    ஆரம்ப காலகட்டத்தில் கலாசாரம் சார்ந்த நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து விழாக்கள் காலமாற்றத்தால் தற்போது வர்த்தக ரீதியான வாழ்வாதாரமாக மாறி விட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், ஆலங்குடி, கொத்தமங்கலம், நெடுவாசல் மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் திரும்பிய பக்கமெல்லாம் திகைக்க வைக்கும் மொய் விருந்து பிளக்ஸ் பேனர்களும், வீடுதோறும் குவிந்து கிடக்கும் மொய் விருந்து அழைப்பிதழ்களும் ஆடியில் காணலாம்.

    வாழ்வில் பின்தங்கியுள்ள ஒரு குடும்பத்தின் வறுமையை போக்க உறவினர்கள் ஒன்றிணைந்து இயன்றதை மொய் விருந்து என்ற விழாவின் மூலம் ஒருவருக்கு கொடுப்பார்கள். அந்த தொகையின் மூலம் விவசாயம் அல்லது தொழில் செய்து ஏழ்மை நிலையில் உள்ள நபர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கம். அதன் பிந்தைய காலகட்டத்தில் படிப்படியாக பெரும்பாலானோர் மொய் விருந்து விழாக்களை நடத்த தொடங்கினர்.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடங்கி மொய் விருந்து விழாக்கள் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், ஆலங்குடி வரை பரவத்தொடங்கியது.

    இதற்கிடையே சுனாமியை விட பேரலையாக தாக்கிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலவற்றில் இந்த மொய் விருந்தும் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் வேகம், குறிப்பாக ஆடி மாதத்தில் அதிகரித்த நிலையில் இருந்ததால் மொய் விருந்து நடத்த அரசு தடை விதித்தது. ஆனாலும் காதணி விழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட பெயர்களில் மொய் விருந்து நடந்தாலும் வழக்கமான களையின்றி காணப்பட்டது.

    கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு கலாசாரம் சார்ந்த விழாக்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மொய் விருந்து விழாக்கள் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

    அதன்படி ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும் மொய் விருந்து விழாக்களில் ரூ.500 கோடி வரையிலும் மொய் வசூல் மற்றும் மொய் விருந்து விழாக்கள் சார்ந்த வர்த்தகம் நடைபெறும்.

    கடந்த சில நாட்களாக பல்வேறு கிராமங்களிலும் தொடர்ந்து விருந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருவதால் பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகம், வசூலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து மொய் விருந்து விழாவை விமரிசையாக நடத்தினர்.

    கஜா புயல் ஏற்படுத்திய கடும் பாதிப்பு, கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பெரும் துயரம் இவைகளால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விருந்து விழாக்களும் மெல்ல மெல்ல சரிவை சந்தித்து வருவதால் இனிவரும் காலங்களில் கடந்த காலங்களைப் போல் இந்த விழாக்கள் தொடர்ந்து அதே உற்சாகத்தோடு நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

    மொய் எழுத குவிந்தவர்கள்.

    இருந்தபோதிலும் 8 பேர் முதல் 32 பேர் வரையில் பொது பந்தல் அல்லது மண்டபங்களிலோ கூட்டு சேர்ந்தோ விழாவை நடத்தி வருகிறார்கள். தங்கள் தகுதிக்கேற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் மொய்த்தொகையாக பெறுவார்கள். அதனை விவசாயம் அல்லது தொழிலில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு மொய் செய்தவர்களுக்கு திருப்பி செலுத்துவார்கள்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.400 கோடி வரையில் இந்த மொய் விருந்து விழாவால் பணப்பரிமாற்றம் நடைபெற்ற நிலையில் கடந்த 2 ஆண்டாக தடைபட்டு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

    இந்த விழாக்கள் மூலம் வட்டியில்லாத கடன் கிடைப்பதோடு திருப்பி செலுத்துவதும் எளிது என்பதாலேயே அப்பகுதி மக்கள் மொய் விருந்து விழாக்களை 5 ஆண்டிற்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    மொய் செய்ய வருபவர்களை விழாதாரர்கள் மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கிடாய் விருந்து உபசரிப்பு தாராளமாக நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் பலர் கூட்டு சேர்ந்து ஒரே விழாவாக நடத்துவதால் உணவு செலவும் குறைவு.

    இந்த மொய் விருந்து திருவிழாவால் அப்பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளிகள், பந்தல் அமைப்பவர்கள், பத்திரிகை விநியோகம் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என்று பல தரப்பினருக்கும் வேலை கிடைக்கிறது.

    அதேபோல் மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், ஆடு வியாபாரிகள், இலை வியாபாரிகள், பத்திரிகை மற்றும் ப்ளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் முழுவதும் நல்ல வருவாய் கிடைப்பதோடு பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெறுகிறது.



    ×