search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் நடந்த மொய் விருந்தில் பங்கேற்றவர்கள்
    X
    ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் நடந்த மொய் விருந்தில் பங்கேற்றவர்கள்

    மீண்டும் களைகட்ட தொடங்கியது ‘மொய்விருந்து’- கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வால் கோலாகலம்

    மொய் விருந்து விழாக்கள் மூலம் வட்டியில்லாத கடன் கிடைப்பதோடு திருப்பி செலுத்துவதும் எளிது என்பதாலேயே புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மொய் விருந்து விழாக்களை 5 ஆண்டிற்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    காலங்களும், காட்சிகளும் மாறினாலும் கலாசாரங்கள் மாறாது என்பதை இந்த நவீன உலகிலும் மெய்ப்பித்து வருகிறது மொய் விருந்து.

    புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட கிராமங்களில் தொன்று தொட்ட பழக்கமாய் ஆடி மாதத்தில் நடத்தப்படும் மொய் விருந்து விழாக்கள் கோடிகளை மட்டுமே கொட் டிக்கொடுப்பதில்லை. மாறாக துவண்டு கிடந்தவர்களையும் சீர் தூக்கி சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

    ஆரம்ப காலகட்டத்தில் கலாசாரம் சார்ந்த நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து விழாக்கள் காலமாற்றத்தால் தற்போது வர்த்தக ரீதியான வாழ்வாதாரமாக மாறி விட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், ஆலங்குடி, கொத்தமங்கலம், நெடுவாசல் மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் திரும்பிய பக்கமெல்லாம் திகைக்க வைக்கும் மொய் விருந்து பிளக்ஸ் பேனர்களும், வீடுதோறும் குவிந்து கிடக்கும் மொய் விருந்து அழைப்பிதழ்களும் ஆடியில் காணலாம்.

    வாழ்வில் பின்தங்கியுள்ள ஒரு குடும்பத்தின் வறுமையை போக்க உறவினர்கள் ஒன்றிணைந்து இயன்றதை மொய் விருந்து என்ற விழாவின் மூலம் ஒருவருக்கு கொடுப்பார்கள். அந்த தொகையின் மூலம் விவசாயம் அல்லது தொழில் செய்து ஏழ்மை நிலையில் உள்ள நபர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கம். அதன் பிந்தைய காலகட்டத்தில் படிப்படியாக பெரும்பாலானோர் மொய் விருந்து விழாக்களை நடத்த தொடங்கினர்.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடங்கி மொய் விருந்து விழாக்கள் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், ஆலங்குடி வரை பரவத்தொடங்கியது.

    இதற்கிடையே சுனாமியை விட பேரலையாக தாக்கிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலவற்றில் இந்த மொய் விருந்தும் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் வேகம், குறிப்பாக ஆடி மாதத்தில் அதிகரித்த நிலையில் இருந்ததால் மொய் விருந்து நடத்த அரசு தடை விதித்தது. ஆனாலும் காதணி விழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட பெயர்களில் மொய் விருந்து நடந்தாலும் வழக்கமான களையின்றி காணப்பட்டது.

    கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு கலாசாரம் சார்ந்த விழாக்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மொய் விருந்து விழாக்கள் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

    அதன்படி ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும் மொய் விருந்து விழாக்களில் ரூ.500 கோடி வரையிலும் மொய் வசூல் மற்றும் மொய் விருந்து விழாக்கள் சார்ந்த வர்த்தகம் நடைபெறும்.

    கடந்த சில நாட்களாக பல்வேறு கிராமங்களிலும் தொடர்ந்து விருந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருவதால் பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகம், வசூலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து மொய் விருந்து விழாவை விமரிசையாக நடத்தினர்.

    கஜா புயல் ஏற்படுத்திய கடும் பாதிப்பு, கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பெரும் துயரம் இவைகளால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விருந்து விழாக்களும் மெல்ல மெல்ல சரிவை சந்தித்து வருவதால் இனிவரும் காலங்களில் கடந்த காலங்களைப் போல் இந்த விழாக்கள் தொடர்ந்து அதே உற்சாகத்தோடு நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

    மொய் எழுத குவிந்தவர்கள்.

    இருந்தபோதிலும் 8 பேர் முதல் 32 பேர் வரையில் பொது பந்தல் அல்லது மண்டபங்களிலோ கூட்டு சேர்ந்தோ விழாவை நடத்தி வருகிறார்கள். தங்கள் தகுதிக்கேற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் மொய்த்தொகையாக பெறுவார்கள். அதனை விவசாயம் அல்லது தொழிலில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு மொய் செய்தவர்களுக்கு திருப்பி செலுத்துவார்கள்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.400 கோடி வரையில் இந்த மொய் விருந்து விழாவால் பணப்பரிமாற்றம் நடைபெற்ற நிலையில் கடந்த 2 ஆண்டாக தடைபட்டு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

    இந்த விழாக்கள் மூலம் வட்டியில்லாத கடன் கிடைப்பதோடு திருப்பி செலுத்துவதும் எளிது என்பதாலேயே அப்பகுதி மக்கள் மொய் விருந்து விழாக்களை 5 ஆண்டிற்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    மொய் செய்ய வருபவர்களை விழாதாரர்கள் மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கிடாய் விருந்து உபசரிப்பு தாராளமாக நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் பலர் கூட்டு சேர்ந்து ஒரே விழாவாக நடத்துவதால் உணவு செலவும் குறைவு.

    இந்த மொய் விருந்து திருவிழாவால் அப்பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளிகள், பந்தல் அமைப்பவர்கள், பத்திரிகை விநியோகம் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என்று பல தரப்பினருக்கும் வேலை கிடைக்கிறது.

    அதேபோல் மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், ஆடு வியாபாரிகள், இலை வியாபாரிகள், பத்திரிகை மற்றும் ப்ளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் முழுவதும் நல்ல வருவாய் கிடைப்பதோடு பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெறுகிறது.



    Next Story
    ×