என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டியலின மக்களுக்கு கோவிலில் வழிபாட்டுக்கு மறுப்பா? வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
- பட்டியலின மக்களுக்கு கோவிலில் வழிபாட்டுக்கு மறுப்பா என வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்
- அனைத்து சமுதாய மக்களோடும் வருவாய் கோட்டாட்சியர் கோவிலில் வழிபாடு செய்தனர்
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் ஆலங்குடி பகுதிகளில் பட்டியலின மக்களுக்கு கோவில்களில் வழிபாட்டுக்கு தடை இருப்பதாக திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வராத நிலையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் சம்பந்தப்பட்ட கோவில்கள் முள்ளம் குறிச்சி முத்துமாரியம்மன் கோவில், கறம்பக்குடி கருப்பர் கோவில், வடக்களூர் முத்துமாரியம்மன் கோவில், திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில், வேம்பன் பட்டி முருகன் கோவில் உள்ளிட்ட ஒன்பது கோவில்களில் நேரடியாக சென்று பொதுமக்கள், பட்டியலின மக்கள் மற்றும் கோவில் பூசாரிகள் ஆகியோரிடம் நேரடி விசாரணை செய்தார். விசாரணையில் அது போன்று ஏதும் இல்லை என்றும் தெரியவந்தது. மேலும் அனைத்து சமுதாய மக்களோடும் வருவாய் கோட்டாட்சியர் கோவிலில் வழிபாடு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர் கருணாகரன், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் உடன் சென்றனர். பிறகு வருவாய் கோட்டாட்சியர் பேசும்போது இந்த அறிக்கை வழக்கு விசாரணை வரும்துபோது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.






