என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப் பெண் திட்டத்தால் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரிப்பு

    • 'புதுமைப் பெண்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
    • 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவிகள் குடும்ப வறுமை காரணமாக, உயர்கல்வியை தொடராமல் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில், தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் என்ற உயர்கல்வி உறுதித் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, இளங்கலை மருத்துவம், என்ஜினீயரிங், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

    அதன்படி, மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 8 ஆக இருந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இதன் எண்ணிக்கை 91 ஆயிரத்து 485 ஆக உயர்ந்து இருப்பதாக உயர்கல்வித் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் 29 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    இதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 806 பேரும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 711 பேரும், மீதமுள்ளவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி அளவில் இந்த திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வறுமையின் காரணமாக பள்ளிக்கு பிறகு, உயர்கல்விக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்படும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதத்தை இந்த திட்டம் குறைக்க உதவுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×