search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மார்க்கெட்டுகளில் இன்று இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள்
    X

    கோவை மார்க்கெட்டுகளில் இன்று இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள்

    • விரதம் முடிந்ததால் இறைச்சி உணவுகளை சாப்பிட ஆர்வம்
    • உக்கடத்தில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு

    கோவை,

    தமிழகத்தில் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. எனவே அந்த மாதத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் இறைச்சி உணவுகளை சாப்பிடுவது இல்லை.

    இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் பெரிய அளவுக்கு இல்லை.

    எனவே அங்கு மீன்கள் மற்றும் இறைச்சிகளின் விலை வெகுவாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து தற்போது ஐப்பசி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் விரதம் முடிந்து இறைச்சி உணவுகளை சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட் மற்றும் பல்வேறு கோழி-மட்டன் இறைச்சி கடைகளில் தற்போது வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    அவர்கள் குடும்பத்துடன் மார்க்கெட்டுக்கு வந்திருந்து, அங்கு விற்கப்பட்டு வரும் மீன்கள் மற்றும் இறைச்சிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    இதனால் அங்கு உள்ள பெரும்பாலான கோழி-மட்டன் விற்பனை கடைகள் மற்றும் மீன் விற்பனையகங்களில் தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.

    உக்கடம் மீன் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளை வாவல் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இது தற்போது ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல கருப்பு வாவல் முன்பு ரூ.600-க்கு விற்பனை ஆனது. தற்போது ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இருந்தபோதிலும் வாடிக்கையாளர்கள் விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு மிகவும் பிடித்த இறைச்சிகளை விரும்பி வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    கோவை உக்கடம் மார்க்கெட் பகுதியில் ஒரு கிலோ மீன்களின் விலை பற்றிய விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    கேரள மத்து (சாளை) ரூ.200 (150), வெள்ளை வாவல் ரூ.1200 (1000), கருப்பு வாவல் ரூ.800 (600), நண்டு ரூ.600 (450), ஊளி ரூ.300 (250), வஞ்சிரம் (சிறியது) ரூ.600 (500), வஞ்சிரம் (பெரியது) ரூ.750 (700), முரல் ரூ.500 (400), பாறை ரூ.500 (400), விலா ரூ.550 (400), நெத்திலி ரூ.400 (300), கட்லா ரூ.200 (180), ரோகு ரூ.180 (150), சிலேபி ரூ.120, அயிரை ரூ.200 (150), கொடுவா ரூ.450 (500).

    Next Story
    ×