search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரத்தால் அ.தி.மு.க.வை முடக்க முடியாது- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
    X

    அதிகாரத்தால் அ.தி.மு.க.வை முடக்க முடியாது- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

    • 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டனர்.
    • நள்ளிரவுக்கு பிறகு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும், நகராட்சி ஆணையாளர், பொறியா ளர்கள் கூட்டத்திற்கு வராதது தொடர்பாகவும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

    இதனால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சி லர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயம் தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார் என்பவர் அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசினார்.

    இந்த நிலையில் நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களுக்கு ஆதரவாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அ.தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அலுவலக நுழைவு வாயில் உள்பட அனைத்து இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர்.

    அவர்களை போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 500 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் மற்றும் அ.தி.மு.கவினரை கைது செய்து, அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.. இதேபோல் 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் வெளியில் வர மறுத்ததால் போலீசார் கவுன்சிலர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று தயாராக நிறுத்தி வைத்திருந்த வேனில் ஏற்றி கைது செய்தனர்.

    பின்னர் அவர்களும், அ.தி.மு.க.வினர் வைக்கப்பட்ட மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையம் நகரமே சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி மேட்டுப்பாளையம் விரைந்தார். அங்கு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பேசினர். அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல முறை கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறிய எந்த பிரச்சினையின் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது மக்கள் பிரச்சினைகளை கேட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது தி.மு.க.வினர் நாற்காலியை தூக்கி வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாருமே இதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களுக்காக குரல் கொடுத்த அ.தி.முக.கவுன்சிலர்களை கைது செய்துள்ளனர். அதிகாரத்தால் அ.தி.மு.கவை அடக்கி ஒடுக்கி முடக்கி விடலாம் என்று தி.மு.க. நினைக்க வேண டாம். அது ஒருபோதும் நடக்காது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இரவில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விடுவிக்கவில்லை.

    இந்த நிலையில் நள்ளிரவுக்கு பிறகு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    Next Story
    ×