என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே விவசாயி கொலையில் 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு-4 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை
- மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கணேசனை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.
- விசாரணையில் பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் தற்போது நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
வெட்டிக்கொலை
கணேசன் நேற்று நெல்லைக்கு வந்து விட்டு, மாலை சுமார் 6 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தருவை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கணேசனை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அவரது உடலை வயல் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கணேசனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பழிக்குப்பழி
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (56) என்பவர் கடந்த 24-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணேசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பின்னர் சொந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று நினைத்து சென்னைக்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினர் தருவையில் தங்கி உள்ளனர். இந்நிலையில் கொலை வழக்கில் ஆஜராக நேற்று கணேசன் சேரன்மகாதேவி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நெல்லைக்கு சென்று விட்டு தருவையில் மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தான் மர்மநபர்கள் நோட்டமிட்டு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது.
4 தனிப்படைகள்
இதையடுத்து சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர், தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் இயங்கும் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையி லான தனிப்படை என மொத்தம் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.