search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 26-ந் தேதி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
    X

    தூத்துக்குடியில் 26-ந் தேதி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

    • கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவிதை- பேச்சு போட்டி

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து வகை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    எனவே கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி போட்டிக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் கையொப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

    போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கு வருகை தந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.

    ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நாளன்று வழங்கப்படும்.

    மாநில போட்டிக்கு....

    ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டி தொடர்பான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

    மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் சம்சுதீன் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×