search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் போடப்பட்டதா?-  வைரலாகும் தகவலால் பரபரப்பு
    X

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் போடப்பட்டதா?- வைரலாகும் தகவலால் பரபரப்பு

    • பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய சில மாணவ-மாணவிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு விண்ணப்பித்து, விடைத்தாள் நகலை பெற்றுள்ளனர்.
    • பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்து இருக்கிறது.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டு, மாணவர்கள் அந்த மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வியில் சேருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வராதவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதனை சரிபார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய சில மாணவ-மாணவிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு விண்ணப்பித்து, விடைத்தாள் நகலை பெற்றுள்ளனர். அவ்வாறு விடைத்தாள் நகலை பெற்ற மாணவரில் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விடைத்தாள் நகலில் 66 மதிப்பெண் மட்டுமே போடப்பட்டு இருந்த நிலையில், தேர்வு முடிவில் 69 மதிப்பெண் இடம்பெற்று இருந்தது. இந்த நகல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    விடைத்தாளில் ஒரு மதிப்பெண், தேர்வு முடிவில் ஒரு மதிப்பெண் இது எதற்காக போடப்பட்டது? மதிப்பெண்ணை பதிவு செய்யும்போது ஏற்பட்ட குளறுபடியா? அல்லது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக அதிக மதிப்பெண் போடப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்த தகவல் உண்மையா என்பதை பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வந்து இருக்கிறது.

    Next Story
    ×