என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    போக்குவரத்து நெரிசலில் நின்ற கார் மீது லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    கரூரை பூர்வீகமாக கொண்டவர் முனியப்பன்(வயது 48). இவர் மயிலாடுதுறை சீர்காழி வாய்க்கால் கரை தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைவாணி (40). இந்த தம்பதியருக்கு ஹரிணி (13), கார்முகிலன் (5) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

    முனியப்பன் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சீர்காழியிலேயே வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் சொந்த ஊரான கரூருக்கு செல்வது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரூருக்கு குடும்பத்துடன் சென்ற அவர், நேற்று இரவு சீர்காழிக்கு காரில் திரும்பினார்.

    காரை முனியப்பன் ஓட்டி சென்றார். காரில் அவரது மனைவி கலைவாணி, தாயார் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் முகிலன் ஆகியோர் இருந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பியதால் திருச்சி-சென்னை ரோட்டில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் மற்றும் இதர வாகனங்கள் சாலையின் இருபக்கங்களிலும் அணிவகுத்து நின்றன. இதில் முனியப்பன் இன்று அதிகாலை 4 மணி அளவில் மாட்டிக்கொண்டார்.

    இந்த நிலையில் அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றிக்கொண்டு பரங்கிப்பேட்டை நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக முனியப்பன் ஓட்டி சென்ற காரில் பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அப்பளம்போல் நொறுங்கியதுடன் காருக்கு முன்னால் நின்ற லாரியின் அடியில் போய் சிக்கி கொண்டது.

    இந்த கோர விபத்தில் முனியப்பன், அவரது மனைவி கலைவாணி, மகள் ஹரிணி, தாயார் பழனியம்மாள் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். சிறுவன் கார் முகிலன் மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பினான்.

    இந்த விபத்து பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    நெரிசலில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தபோது லாரி டிரைவர் முந்தி செல்ல முயன்றபோது விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாளை (48) பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில்  கிறிஸ்டியன் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

    இதில்  50க்கும்  மேற்பட்ட  தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில்  பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில்  கலெக்டர் பேசியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் தகுதியுடைய அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்   

    அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறைசார்ந்த வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளதின் அடிப்படையில் நமது மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.  

    இன்று பணிநியமன ஆணை பெறும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் பணியாற்றி  உங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்றார்.

    நிகழ்ச்சியில் சட்டமன்ற  உறுப்பினர்  தெரிவித்ததாவது:-
    படித்த இளைஞர்களுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ப பணி கிடைக்க வேண்டும்,  என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்பபு முகாம் நடைபெறுகின்றது.

    இந்த முகாமில் கிடைக்கும் பணியினை உங்கள் வெற்றிப்பாதையின் தொடக்கப்புள்ளியாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடக்க உள்ள பாதைக்கான கடவுச்சீட்டாக இந்த பணிவாய்ப்பை நினைத்துக்கொள்ளுங்கள்.

    வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அமையும்போது உங்கள் திறமையினை மெருகேற்றிக்கொண்டு மேலும் மேலும் நீங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்றார்.

    நிகழ்ச்சியில் 30 நபர்களுக்கு முதற்கட்டமாக கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
    பெரம்பலூர் அருகே கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பாடாலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 45). இவர் திண்டுக்கல்லில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லதா (40). இவர்கள் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக லதாவின் தாய் வேம்பு (65), அண்ணன் திருவாரூரில் வசித்து வரும் ராமச்சந்திரன் (44), கமலக்கண்ணனின் சித்தியான கோவையை சேர்ந்த மணிமேகலை (65) ஆகியோருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து காரில் சென்னை புறப்பட்டனர்.

    அங்கு மற்றொரு உறவினரை அழைத்துக்கொண்டு சாய்பாபா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டினார். இந்த நிலையில் அவர்கள் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம், நாரணமங்கலம் இடையே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் காரில் இருந்தவர்கள் அலறினர். இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது.

    இந்த விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அவர்கள் மீட்க முயன்றனர். மேலும் இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

    இதில் காரை ஓட்டி வந்த கமலக்கண்ணன், அவரது மனைவி லதா மற்றும் லதாவின் தாய் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ராமச்சந்திரன், மணிமேகலை ஆகியோர் மீட்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதிகாலை நேரமாக இருந்ததால் டிரைவரின் கண் அயர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டி அறிவுரைகள் மற்றும் வேலை வாய்ப்பிற்கான வழிகள் குறித்து தற்போது தொழில்முனைவோர்களாக உள்ளவர்கள், கல்வியாளர்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக வகுப்பு நடத்தப்படுகிறது.

    அதனடிப்படையில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், மேல்நிலை கல்வி படிக்கும்போதே அடுத்து உயர்கல்விக்கு என்னென்ன படிக்கலாம், என்ன படிப்பு படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தெளிவை நீங்கள் பெறுவதற்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

    வாழ்க்கையில் தொழில்முனைவோராக, கல்வியாளராக வெற்றி பெற்றவர்கள் கடந்து வந்த பாதைகள், அவர்கள் சந்தித்த சோதனைகள், சாதித்த சாதனைகள் என அனைத்தையும் உங்களுடன் காணொலி வாயிலாக பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இந்த திட்டத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 45 அரசு பள்ளிகளில் பயிலும் 4,053 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர், என்றார்.
    615 லிட்டர் சாராய ஊறல் அழித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:


    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியபிரகாசம் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் காய்ச்சுவோர், விற்போர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


    இந்த நிலையில் நேற்று குன்னம் தாலுகா, ஒகளூர் வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 50) என்பவர் சாராயம் தயாரிக்க பேரல்களில் வைத்திருந்த 375 லிட்டர் ஊறலையும், 1லு லிட்டர் சாராயத்தையும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் அதே கிராமத்தில் காமராஜ் நகரை சேர்ந்த பழனிவேல்(67) என்பவர் தனது கொட்டகையில் பேரல்களில் வைத்திருந்த 240 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் பழனிவேலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    .
    வாகன விபத்தில் தலைமை காவலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 40) இவர் குன்னம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று திருச்சி வழி காவல் பணியை முடித்துவிட்டு விடியற்காலை மூன்று மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக பெரம்பலூர் 4ரோடு அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த பெரம்பலூர் வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த அத்தியப்பன் (வயது 60) என்பவரது டூ வீலரில் லிப்ட் கேட்டு ஏறி வீட்டிற்கு சென்றார்.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் தலைமை காவலர் ஜாபர் அலி தலை மற்றும் கை கால்களில் பலத்த அடி ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் உடனடியாக ஜாஃபர் அலியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அத்தியப்பன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது கொலைமிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேஉள்ள இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி வைதேகி (வயது 23) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வைதேகியின் கணவர் பிரசாத் கடந்த ஒன்றரை வருடமாக பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது வைதேகிக்கும், பெரம்பலூர் வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யா (23) என்ற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மேலும் உல்லாசமாக இருந்தபோது அவருக்கு தெரியாமல் வீரய்யா ஆபாச வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வைதேகியின் கணவர் பிரசாந்த் சொந்த ஊரான இனம் அகரம் கிராமத்திற்கு வந்தார். இதனால் வைதேகி கள்ளக்காதலனை ஓரம் கட்டினார். ஆனால் வீரய்யாவால் காதலியை மறக்க இயலவில்லை.

    இதையடுத்து அவர் வைதேகியுடன் இருந்த ஆபாச வீடியோவை காண்பித்து தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைதேகி மங்களமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த வீரய்யா மீது கொலைமிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை மோப்பம் பிடித்துக்கொண்ட வீரய்யா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூரில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எசனை 4-வது வார்டுக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு பேச்சாயி என்ற மனைவியும், சிந்துஜா (வயது 20), மகாலட்சுமி (15), இதன்யா (9) என்கிற 3 மகள்களும் இருந்தனர். செல்வராஜூம், பேச்சாயியும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    மகாலட்சுமி எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வயிற்று வலி காரணமாக 2-வது மகள் மகாலட்சுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாய் பேச்சாயி காலையில் கூலி வேலைக்கு சென்று விட்டார். இதன்யா பள்ளிக்கும், சிந்துஜா கல்லூரிக்கும் சென்று விட்டனர்.

    மதியம் 1 மணியளவில் செல்வராஜ் கடைவீதிக்கு சென்று டீ குடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, மின்விசிறியில் கட்டில் கட்டும் கயிற்றில் மகாலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதுகுறித்து செல்வராஜ் பெரம்பலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டது.  

    ஏற்கனவே கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் திணறி வரும் பொதுமக்கள் இரவு நேர மின் தடையால் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மின் தடையால் இரவில் சரியாக தூங்க முடியாமல் தவித்தனர்.  

    மேலும் மின்தடையால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளால் படிக்க முடியாமல் போனது.

    எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    பெரம்பலூரில் நாளை மறுநாள் சனிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கிறிஸ்டியன் கல்வியியல் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    இந்த  வேலை வாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, என்ஜினீயர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற படிப்புகள் படித்துள்ள 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ள வேலை வாய்ப்பற்ற ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  

    இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 2,500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குகிறது.  

    எனவே விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444094325 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடந்தது.

    இதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், மாவட்ட அளவிலான போட்டிகளில் மட்டுமல்லாது, மாநில அளவில், தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக இருக்கும் என்றார்.

    போட்டிகளுக்காக மாற்றுத்திறனாளிகளை 4 வகைகளாக பிரித்து,  அவர்களில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    தடகள போட்டிகளான 50, 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், சாப்ட் பால் எறிதல், சக்கர நாற்காலி போட்டி, நின்ற நிலையில் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.  

    குழுப்போட்டிகளான இறகுபந்து, மேசை பந்து, வாலிபால், எறிபந்து, கபடி போட்டி போன்றவையும் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும், குழு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, பள்ளி முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், தடகள பயிற்சியாளர் கோகிலா, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
    பெற்றோர் மீது நாட்டு வெடி வீச முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் தனபால் (வயது24). டூவீர் மெக்கானிக் பட்டறையில் வேலை செய்து  வருகிறார். இவர் அதே கிராமத்தில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலை-பட்சமாக காதலித்து கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.  இது பற்றி அறிந்த மாணவியின் தந்தை ஏழு-மலை தனபாலை கண்டித்-துள்ளார்.

    இந்நிலையில்  தனபால் நேற்று இரவு மாணவியின்  வீட்டின் அருகே தொடர்ந்து நடந்து போவதும் வருவதுமாக இருந்துள்ளார்.

    இதனைப் பார்த்த ஏழுமலை  தனபாலை தாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏழுமலையும், அவரது அண்ணன் திருமலையும் தனபால் வீட்டிற்கு சென்று கேட்ட போது வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை மேலே தூக்கி வீச முயன்றார்.அதனை தனபால் தம்பி  நந்தக்குமார் (19) என்பவர் தடுத்துள்ளார்.

    தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று தனபாலை கைது செய்து அவரிடமிருந்து 23 நாட்டு வெடிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ஒரு தலை காதல் விவகாரத்-தில் தட்டி கேட்ட பெற்றோர் மீது நாட்டு வெடி  வீச முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்  பர-பரப்பை ஏற்படுத்-தியுள்ளது. 
    ×