என் மலர்
பெரம்பலூர்
- இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடமாகும்.
பெரம்பலூர்:
குன்னம் அடுத்துள்ள லப்பைகுடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கிவந்த சுகாதார நிலையம் மிகவும் சேதம் அடைந்து இருந்ததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டு சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.
இங்கு லப்பைக்குடிக்காடு, பெண்ணகோணம், கீழக்குடிக்காடு, கழனிவாசல், ஆடுதுறை உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை மற்றும் காற்றால் பழைய கட்டிடத்தின் முன்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் அமைக்கப்பட்டிருந்த தகடுகள் காற்றில் சரிந்து விழுந்தன. மேலும் கட்டிடங்கள் முழுவதும் செடிகள் முளைத்து சுவர்கள் பலவீனமாக உள்ளது. எந்த நேரத்திலும் கட்டிடம் விழுந்துவிடும் அபாயம் உள்ளது.
இதனால் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கொலை வழக்கில் கைதான என்ஜினீயர் சிறையில் அடைக்கப்பட்டார்
- திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே கீழக்கரையை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). விவசாயியான இவர் சம்பவத்தன்று மது போதையில் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான நாராயணசாமி மனைவி செல்லத்தை தாக்கினார்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த நாராயணசாமி மகன் என்ஜினீயரான ராஜாராம் (24) மூங்கில் கம்பால் செல்வத்தை அடித்ததில், அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர். பின்னர் ராஜாராமை பெரம்பலூர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.
- உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ஜூன் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பெரம்பலூா்:
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் பெறாதவா்கள், உடனடியாக உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் பட்டோருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், முதுகுத் தண்டுவடம் மற்றும்
தசைச்சிதைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள்,
பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு உரிய செயலிகளுடன் கூடிய கைப்பேசிகள், கால்களை இழந்தோருக்கு செயற்கை மற்றும் நவீன செயற்கைகால்கள், பாா்வையற்றோருக்கு மடக்கு ஊன்றுகோல்கள், கடிகாரங்கள்,
நவீன மடக்கு ஊன்றுகோல்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோா்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
எனவே தகுதியுடையோா் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி, மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன்
ஆட்சியரக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஜூன் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 - 225474 என்னும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்
- வீட்டிற்குள் புகுந்த திருடனை ெபாதுமக்கள் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- திருடப்பட்ட நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் வசித்து வருபவர் குமார் (வயது 40) எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு வேப்பந்தட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவிற்கு
சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்றபோது வீட்டிற்குள் திருடன் ஒருவன் இருப்பதும் அவன் மாடிப்படி வழியாக தப்பித்து செல்ல முயன்றதும் தெரியவந்தது.
உடனடியாக திருடன் திருடன் என குமார் கூச்சலிட்டு உள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சுற்றிவளைத்தனர். அப்போது மாடியில் இருந்த திருடன் கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளான். மாடியில் இருந்து குதித்ததால் திருடனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அவனை பொதுமக்கள் பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் திருட வந்தவன் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது23) என்பது தெரியவந்தது.
மேலும் அவனிடம் இருந்து குமார் வீட்டில் திருடப்பட்ட நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வெங்கடேசை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பெரம்பலூர் நகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா துவக்கி வைத்தார்.
பெரம்பலூர்:
நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் பெரம்பலூர் நகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தூய்மைப் பணியினை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் நகராட்சி பகுதி முழுவதும் காலை முதல் மாலை வரை 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு, குப்பைகள் கையாள்வது குறித்து
பொதுமக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தவும், "என் நகரம், என் பெருமை", "என் குப்பை என் பொறுப்பு" என்ற விழிப்புணர்வு பயணத்தை கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியினை முழுமையான சுகாதாரமான நகராட்சியாக மாற்றுவதற்காக உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, "என் குப்பை என் பொறுப்பு" என்ற விழிப்புணர்வு வாசனங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வனத்துறையின் சார்பில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் அருகில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா துவக்கி வைத்தார்.
- கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சு போட்டி நடை பெற்றது.
- மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்திரவிட்டது.
பெரம்பலூர்:
நாட்டின் விடுதலை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்திரவிட்டது.
இதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் மாவட்ட அளவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்.
பெரம்பலூர் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா தலைமையுரையாற்றினார். போட்டிக்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அன்பழகன், கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் கலியமூர்த்தி , ரேவதி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
இந்த போட்டியில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் இரண்டாமாண்டு வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு பயிலும் காயத்ரி என்ற மாணவி முதல் பரிசினையும் (ரூ.5,000),
தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு உணவு தொழில் நுட்பம் பயிலும் யோகேஷ் என்ற மாணவன் இரண்டாம் பரிசினையும் (ரூ.3,000), வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு ஆண்டு பயிலும் இ. பூபாலன் என்ற மாணவன் மூன்றாம் பரிசினையும் (ரூ.2,000) பெற்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வலட்சுமிசெயல் அலுவலர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் எனது குப்பை எனது பொறுப்பு என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் பணியாளர்களும் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பேரணியாக சென்று
பொதுமக்களிடம் நெகிழியின் தீமைகள் குறித்தும் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிப்பது உள்ளிட்டவற்றை விளக்கினர்.
பின்னர் பேரூராட்சி தலைவர் பல மீட்பு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார் .
நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






