என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
    X

    வெள்ளியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

    • 21 வேட்டைக்கார இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கியுள்ளனர்.
    • பிரச்சினையால் சுமார் மூன்று மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், விளாப்பாக்கம் ஊராட்சியில் வசித்து வரும் 21 வேட்டைக்கார இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கியுள்ளனர். ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வழங்காமல் உள்ளனர். வெள்ளியூர், விளாப்பாக்கம் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் 42 வேட்டைக்கார இன மக்களுக்கு குடிமனை பட்டா வருவாய்துறை அதிகாரிகள் வழங்காமல் மின் இணைப்பு பெற இயலாமல் அவதிக்கு உள்ளாகின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு வேட்டைக்கார இன பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கெங்காதுரை, மாநிலத் துணைத் தலைவர் சண்முகம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், சிபிஐஎம் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், டி.டில்லி, எஸ்.கலையரசன், கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டா கிடைக்கும் வரை இங்கேயே சமைத்து, இங்கேயே உண்டு, இங்கேயே உறங்குவோம் என கண்டன உரை ஆற்றினர். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.மேலும், வெள்ளியூர்,விளாப்பாக்கம் ஊராட்சியில் வசித்து வரும் வேட்டைக்கார இன மக்களுக்கு மின்இணைப்பு வசதியை ஏற்படுத்தி தர கலெக்டரின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். மேலும், மந்தைவெளி புறம்போக்கு இடம் என்பதால் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்நிகழ்ச்சியின் போது, வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், பொன்மலர், கிராம நிர்வாக அதிகாரி ராதிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளின் உறுதி மொழியை ஏற்று அனைவரும் போராட்டத்தை விளக்கிக் கொண்டு அமைதியாக

    கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் இன்று காலை சுமார் மூன்று மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    Next Story
    ×