என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலான கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- நெல்லையில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- ஒருசில இடங்களில் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மட்டுமல்லாது புறநகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதி கள் என அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடரும் இந்த கோடை மழையால் பொதுமக்க ளும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான கோடை வெயிலால் அணைகள் வறண்டு போன நிலையில் தற்போது தொடரும் கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது என்பதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இடி-மின்னல்
நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாளையில் 7 மில்லி மீட்டரும், நெல்லையில் 5.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தை பொறுத்த வரை அம்பை, கன்னடியன் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லிமீட்டரும், பாபநாசம், சேர்வலாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நேற்று இரவு வரை ஒருசில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. களக்காடு, சேரன்மகாதேவி, ராதாபுரம், நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோடை மழை பெய்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில நாட்களாக கருப்பாநதி அணை பகுதியில் கனமழை நீடிக்கிறது. நேற்று ராமநதி, கடனாநதி, கருப்பாநதி மற்றும் அடவிநயினார் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை மற்றும் ஆய்க்குடி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
இன்று காலை நிலவரப்படி செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 18 மில்லிமீட்டரும், தென்காசியில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அணைப்ப குதிகளில் அதிகபட்சமாக ராமநதியில் 26 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 17.4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலை பலத்தமழை கொட்டியது. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கிகிடந்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் சற்று தணிந்தது.
அதிகபட்சமாக கயத்தாறில் 27 மில்லிமீட்டரும், கடம்பூரில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
சாத்தான்குளம், குலசேக ரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், காடல்குடி, வைப்பார் உள்ளிட்ட இடங்களிலும் கோடை மழை பெய்தது. மாநகர பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.






