search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு விரைவில் ஓய்வறை- மேயர் சரவணன் பேட்டி
    X

    புதிய பஸ்நிலையத்தில் மேயர் சரவணன் ஆய்வு செய்த காட்சி. அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு விரைவில் ஓய்வறை- மேயர் சரவணன் பேட்டி

    • நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இன்று புதிய பஸ்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்று மேயர் கூறினார்.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டது.

    மேயர் ஆய்வு

    இதனை கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இன்று புதிய பஸ்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாதுஷா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பிளாட்பாரங் கள் சுத்தமாக வைக்கப்பட்டுள் ளதா? கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து கடைகளின் முன்பு கூரை அமைத்தவர்களை உடனடியாக அகற்றவும், பழக்கடைகளில் அழுகிய பழங்களை விற்க கூடாது எனவும் டீக்கடைகளில் பஜ்ஜி உள்ளிட்ட பண்டங்களை வாழை இலைகளில் வழங்கவும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து முதல் தளத்தில் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேயர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓய்வறை

    புதிய பஸ்நிலையத்தை ஆய்வு செய்து நடைபாதை வரை கடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளோம். டீக்கடைகளில் சுகாதாரமான முறையில் தரமான உணவுகளை வழங்க உத்தரவிட்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.

    இரவு நேரங்களில் புதிய பஸ்நிலையத்தில் ஆய்வு செய்த போது பெண்கள், முதியவர்கள், பிளாட்பாரங்களில் படுத்திருப்பது காண முடிந்தது. எனவே அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் புதிய பஸ்நிலையதில் முதல் தளத்தில் ஓய்வறைகள் விரைவில் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    இங்கு தங்குபவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்து தங்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு வாடகை வாங்கலாமா அல்லது இலவசமாக வழங்கலாமா என ஆய்வு செய்து வருகிறோம்.

    டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து தவறான சிகிச்சை அளித்த 38 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 84 பணிகள் மேற்கொள்ளப்பட்டு 62 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 22 பணிகள் நடந்து வருகிறது.

    மாநகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. இதனை அகற்றி அந்த சுவர்களில் அரசு திட்டங்கள் குறித்து விளம்பரங்களை எழுத முடிவு செய்துள்ளோம். பழைய பேட்டை பகுதியில் சரக்கு முனையம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.

    இதில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட்டு தற்போது பரிசோதனை நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறும் போது, மாநகரில் 4 மண்டலங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்த 160 மாடுகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 97 மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    மற்ற மாடுகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதுவரை மாடுகள் ஏலம் மற்றும் அபராதம் மாநகராட்சிக்கு ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது. இந்த தொடர் நடவடிக்கையால் மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.

    Next Story
    ×