search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை டவுன்ஹாலில் ஒருபக்க பார்க்கிங் அமலுக்கு வந்தது
    X

    கோவை டவுன்ஹாலில் ஒருபக்க பார்க்கிங் அமலுக்கு வந்தது

    • ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
    • புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை டவுன்ஹால் பகுதியில் ஒப்பணக்கார வீதி , ராஜவீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, பெரிய கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி ஆகியவை உள்ளன. அந்த பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் ரோட்டின் இருபுறமும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    டவுன்ஹால் பகுதியில் ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகை, தானியம், காய்கறி ஆகியவற்றுக்கான மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. எனவே அனைவரும் இங்கு வாகனங்களில் வந்து செல்வது வழக்கம். அங்கு பொருட்களை வாங்கி விட்டு வெளியேற குறைந்தபட்சம் 5 மணி நேரம் பிடிக்கும். எனவே டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாலைமலர் நாளிதழில், ஒரு பக்கம் மட்டும் பார்க்கிங் செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கவனத்துக்கு வந்தது.எனவே அவர் நேற்று டவுன்ஹால் பகுதிக்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு நடத்தினார்.

    இதனை தொடர்ந்து அங்கு உடனடியாக ஒரு பக்க பார்க்கிங் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் டவுன்ஹால் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வாகனங்களை நிறுத்தும் இடம், சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    இதன்படி ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. இடையர் வீதி சந்திப்பு முதல் மில் ரோடு சந்திப்பு வரை சாலையின் இடது புறம் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ராஜவீதியில் ஒப்பணக்கார வீதி சந்திப்பு முதல் ரங்கே கவுண்டர் வீதி வரை, சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. ரங்கே கவுடா் வீதி முதல் தேர்நிலை திடல் வரை வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    துணி வணிகர் சங்க பள்ளி தேர் திடல் முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஆனால் கருப்பு கவுண்டர் வீதி சந்திப்பு முதல் சலிவன் வீதி வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

    ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. கருப்பு கவுண்டர் வீதியில் ராஜவீதி சந்திப்பு முதல் வைசியாள் வீதி வரை வலது புறம் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    பெரிய கடை வீதியில் ரங்கே கவுடர் வீதி சந்திப்பு முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்தலாம். வைசியாள் வீதியில் ரங்கே கவுண்டர் வீதி சந்திப்பில் பஸ் நிறுத்தம் எதிரே வலது புறம் நிறுத்த வேண்டும். கோவை டவுன்ஹால் பகுதியில் புதிதாக அமலுக்கு வந்து உள்ள வாகன நிறுத்த மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகர போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல பல்வேறு அமைப்புகளும் டவுன்ஹால் வாகன நிறுத்த மாற்றம் பற்றிய அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×