என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல் ஊழியர் கொலையில் 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
    X

    ஓட்டல் ஊழியர் கொலையில் 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

    • நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது.
    • இதன் அருகில் கிரீன் கார்டன் செல்லும் சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இதன் அருகில் கிரீன் கார்டன் செல்லும் சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. உடலின் அருகே மஞ்ச பைகள், ரத்தக்கரை படிந்த கற்கள் மற்றும் பழங்கள் சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண நடத்தினர்.

    கல்லால் அடித்து கொலை

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்களை வரவழைத்து போலீஸ் தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கண்ணன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுபாட்டில் தகராறு

    இதில், கண்ணன் அந்த வழியாக சென்ற 2 பேரிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கண்ணன் மது பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவரை அழைத்து சென்றவர்கள் மது பாட்டிலை கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 2 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கி, கண்ணனை கொலை செய்து விட்டு உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

    இதனிடையே, லிப்ட் கொடுத்தவர்களை பிடித்த போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கைது செயப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×