என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை அருகே விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார்.விபத்தில் இறந்த தொழிலாளிக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு வக்கார மாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (45). கூலித் தொழிலாளி.

    இவர் தனது நண்பர் கள்ளழகருடன் நேற்று இரவு ராதா நல்லூருக்கு துக்க வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    மணல்மேடு முட்டம் பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த டாடா ஏ.சி. வேன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்த மணிமாறன் கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டதால் அவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். இது குறித்து மணல்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் இறந்த மணிமாறனுக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ஆலங்குடி கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகளை அக்கிராம இளைஞர்கள் முற்றுகையிட்டு, ஊராட்சியில் சுகாதாரப்பணிகள் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி தடுத்து நிறுத்தினர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பாலமுருகன்(23). இவர் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் ஊருக்கு வந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பாலமுருகனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுப்ரமணி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட மருத்துவக்குழுவினர், நேற்று (வியாழக்கிழமை) ஆலங்குடி கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர். அவர்களை அக்கிராம இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டு ஊராட்சியில் சுகாதாரப்பணிகள் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி தடுத்து நிறுத்தினர்.

    இதுகுறித்து தகவலறிந்த குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா மற்றும் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலியதீர்த்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் 2 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இச்சம்பவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் நூருல் ஹக் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, தேவதாஸ், அருள்குமரன் ஆகிய மூவர் மீது குத்தாலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வேதாரண்யம் அருகே குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து மாமனார் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணையும் அவரது குழந்தையையும் தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் பண்ணாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கும் ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தி கோவில்குளம் பகுதியை சேர்ந்த சீபா (25) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

    மணிகண்டனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் மனைவி, குழந்தையை தனது தந்தை பாலசுப்பிரமணியன் பாதுகாப்பில் விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீபா குழந்தையுடன் கடைக்கு சென்று வருவதாக மாமனார் பாலசுப்பிரமணியத்திடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை அவரை பாலசுப்பிரமணியன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள்பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து வாய்மேடு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணையும் அவரது குழந்தையையும் தேடி வருகிறார்.

    கோவில் குளத்தில் மூழ்கி இளைஞர் பலியானார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கோவில் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் சித்தாள். சம்பவத்தன்று இவரும், இவரது தம்பி விஷ்ணு இருவரும் காலையில் மயூரநாதர் கோவில் குளத்திற்கு குளிக்க சென்றனர். விஷ்ணுவுக்கு நீச்சல் தெரியும் ஆனால் அய்யப்பனுக்கு நீச்சல் தெரியாது. அப்போது அய்யப்பன் நீரில் மூழ்கி உள்ளார்.

    இதனால் விஷ்ணு சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி அய்யப்பனை மீட்டனர். உடனே சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    கோடியக்கரைக்கு வழி தவறி வந்த இலங்கை தம்பதிக்கு வருகிற 14-ந்தேதி வரை காவலை நீட்டித்து வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    வேதாரண்யம்:

    இலங்கை வவுனியா அருகே உள்ள மகரம்மை குளத்தை சேர்ந்தவர் சுஷ்யந்த் (வயது23). விவசாயி. இவருடைய மனைவி துவாரகா(22). இவர்களது மகள் சகிதா(1). துவாரகா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். சுஷ்யந்த், துவாரகா, சகிதா ஆகிய 3 பேரும் கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதியன்று கச்சத்தீவில் உள்ள ஆலய திருவிழாவுக்கு பொதுமக்களுடன் ஒரு படகில் வந்தனர். அங்கு பிரார்த்தனையை முடித்துக்கொண்டு கச்சத்தீவை சுற்றி பார்த்தனர். பிறகு படகுத்துறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் வந்த படகை காணவில்லை.

    இதைத்தொடர்ந்து படகுத்துறையில் நின்றுகொண்டிருந்த பைபர் படகில் ஏறி தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையால் படகில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து படகு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இந்தநிலையில் தூங்கி எழுந்த சுஷ்யந்த் மற்றும் துவாரகா தாங்கள் நடுக்கடலில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கடலில் யாரும் மீன்பிடிக்க வராததாலும், உணவு இல்லாததாலும் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

    இதைத்தொடர்ந்து 4 நாட்களாக நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே கடலில் தத்தளித்த அவர்களை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் மீட்டு நாகைக்கு அழைத்து வந்தனர்.

    இதன்பின்பு 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்பு சுஷ்யந்த், துவாரகா, சகிதா ஆகிய 3 பேரையும் வேதாரண்யம் கடலோர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக சுஷ்யந்த், துவாரகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தீனதயாளன் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து சுஷ்யந்த், துவாரகா, சகிதா ஆகிய 3 பேரும் சென்னை புழல்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று வேதாரண்யம் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 14-ந்தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியும், யாரும் ஜாமீன் தர முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யம் அருகே வயலில் வேலை பார்த்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பெரியகுத்தகை நாட்டான்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மணிமேகலை (50). இவர் தனது வீட்டு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

    பின்னர் தீவிர சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை இறந்து விட்டார். மகன் கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    சீர்காழி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.31½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருவாழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.

    இந்த வங்கியின் மேலாளராக மகாதேவன் என்பவரும், எழுத்தராக சிவானந்தமும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வங்கி தலைவராக அ.தி.மு.க. பிரமுகர் திருமாறன் உள்ளார்.

    இந்நிலையில் இந்த கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டதில் ரூ.7 லட்சத்து 44 ஆயிரம் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.24 லட்சம் அளவில் நிதி முறைகேடு உட்பட ரூ.31½ லட்சம் அளவில் மோசடி நடந்துள்ளதாகவும் தெரியவந்தது. இந்த மோசடி குறித்து மயிலாடுதுறை கோட்ட துணைப் பதிவாளர் சரவணகோபால் நாகை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இன்று அதிகாலை திருவாழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். அங்கு வங்கி மேலாளர் மகாதேவன், எழுத்தர் சிவானந்தம், தலைவர் திருமாறன் ஆகிய 3 பேரிடமும் விசாரித்தனர். பின்னர் 3 பேரையும் நாகைக்கு அழைத்து சென்றனர். வங்கி நிதி மோசடி குறித்து விசாரித்த பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பேராலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டு தெரு வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து மாலை 6.30 மணிக்கு கொடியை ஏற்றினார். அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் எரியவிடப்பட்டன. பின்னர் பக்தர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதையடுத்து வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.



    அதைதொடர்ந்து இரவு 8 மணிக்கு மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்பவனியும் நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    விநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை விதிக்ககூடிய நியாயமான கட்டுபாடுகளை ஏற்றுக்கொள்கிறோம் என அர்ஜூன் சம்பத் கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி பஜனை மடத்தில் இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மண்டல அமைப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பொன்னுசாமி, புதுவை மாநில தலைவர் மஜ்ஜினி, மாவட்ட தலைவர் சோலை.கோவிந்தராஜன், அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர தலைவர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழ்நாடு வேளாங்கண்ணி பேராலயம் கொடியேற்று விழாவில் இந்து சமய நம்பிக் கைகளை புண்படுத்தும் விதமாக சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. காவி, ஸ்படிகம், ருத்ராட்சம், தீபவழிபாடு, கொடியேற்றுதல் இவையெல்லாம் இந்து சமய சடங்குகள் ஆகும். பாதயாத்திரை பக்தர்கள் ஸ்படிக, துளசி, ருத்ராட்ச மாலைகளில் சிலுவைகளை அணிந்து கொண்டு மது, மாமிசம் சாப்பிடுகிறார்கள். இவை இந்து மத சின்னங்களை அவமதிப்பதாகும்.

    இந்து மத சடங்குகளை பேராலயத்தில் செய்வதற்கு அரசு தடை விதிக்கவேண்டும். நாகை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. புதிய கல்விக்கொள்கையில் தமிழ் பயிற்று மொழியாக வரவேண்டும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், காஷ்மீர் மற்றும் இலங்கை பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்துக்களை மீண்டும் அப்பகுதியிலேயே குடியமர்த்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை விதிக்ககூடிய நியாயமான கட்டுபாடுகளை ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயத்தில் புதிய இடங்களில் விநாயகர் சிலை வழிப்பாட்டிற்கு அனுமதி இல்லை என்பது போன்ற சட்ட விரோத நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் தடையை மீறி ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்துவோம். சென்னை ஜஸ்ஹவுஸ் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கும், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

    மயிலாடுதுறை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கும், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக சட்டபேரவை நிகழ்வுகள் கேலிக் கூத்தாக உள்ளன.மக்களாட்சி மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெறும் சட்ட பேரவை செயல்பாடுகளை தடுக்க வேண்டும். சட்ட மன்ற தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.

    வழிபாட்டு தலங்கள் என்பவை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவை. சில மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தலித் மக்களுக்குரிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது கண்டனத்துக்குரியது.

    மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் நிலத்தடி நீரை கொண்டு விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

    மாணவர்களுக்கு வழங்கிய கல்வி கடன்களை தேசிமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் நிறுவனம் மூலம் கட்டாய வசூல் செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

    வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்.

    100 நாள் வேலை திட்டம் தற்போது 60 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மாற்றி மீண்டும் 100 நாள் வேலையை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல செயலாளர் வேலு. குணவேந்தன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் மோகன் குமார், கதிர்வளவனன்,முஜிபுர் ரஹ்மான், ஆத்தூர் செல்வராசு, சீர்காழி தாமு இனியவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    வேளாங்கண்ணியில் அடுத்த மாதம் 7-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்ப்பவனி நடைபெறுகிறது. 8-ந் தேதி(வியாழக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்துக்கு தினமும் தமிழகம் மட்டு மின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா 29-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு மாதா உருவம் பொறித்த கொடி, பேராலய முகப்பிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தேவாலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக எடுத்து செல்லப்படும் இந்த கொடியை பேராலயத்தின் முன்பு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப் பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதாமன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    விழாவையொட்டி தினமும் மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றுதலும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்ப் பவனியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்ப்பவனி நடைபெறுகிறது. 8-ந் தேதி(வியாழக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப் படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    முன்விரோதத்தில் கோவிலுக்கு தீ வைக்கப்பட்டதால் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மாப்படுகை காவிரி ஆற்றங்கரை பகுதியில் தமிழ்செல்வன் (வயது 50) என்பவர் குறி சொல்லி வருகிறார். இவர் அப்பகுதியில் பஞ்ச முக மஞ்சள் மாரியம்மன், அதர்வன காளி, மாட கருப்பன்னசாமி, தாலி காத்த ஆதிமகா மாரியம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்து நன்கொடை வசூலித்து தற்போது கோவில் கட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று 3 மணியளவில் பஞ்சமுக மஞ்சள் மகாமாரியம்மன் சிலை மீது சார்த்தப்பட்டிருந்த புடவைகள் தீப்பற்றி எரிந்தது. மேலும் கோவில் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதே நேரத்தில் தங்களைத் தாக்கி மோட்டார் சைக்கிள்களை பிடுங்கிச்சென்றதாக வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த 6-ம் தேதி மயிலாடுதுறை ஹாஜியா நகரை சேர்ந்த சத்தியராஜ் (27) என்பவர் கோவிலில் குறி சொல்லும் தமிழ்செல்வனிடம் குறி சொல்லி ஏமாற்றுவதாக கூறி தகராறு செய்துள்ளார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரது ஆதரவாளரான வேதம்பிள்ளை காலனியை சேர்ந்த கணபதி மற்றும் சிலருடன் சேர்ந்து சத்தியராஜை தாக்கி உள்ளனர்.

    இந்த முன்விரோதம் தொடர்பாக சத்தியராஜ், அவரது நண்பர் ஆல்பர்ட், ரூபன் இருவரும் சேர்ந்து கணபதியின் அண்ணன் மகன்கள் வேல்முருகன் (21), பாலமுருகன் (22) ஆகியோரை காவிரி மேம்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்தபோது வழிமறித்து தாக்கி, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை பறித்துக்கொண்டு குறி சொல்லும் இடமான மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கு சூலத்தை சேதப்படுத்தியும், மஞ்சள் முக மாரியம்மன் மேல் சார்த்தப்பட்டிருந்த புடவைகளை தீவைத்து கொளுத்திவிட்டு, கொண்டு வந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து கொளுத்தியதும் தெரியவந்தது.

    முன்விரோதம் தொடர்பாக சுவாமி சிலைக்கு தீ வைத்து எரித்த இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×